(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (15) கடைசி ஓவர் வரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தயாவுக்குக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4 போட்டியில் ஒரு பந்து மீதமிருக்க பங்களாதேஷ் 6 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
முதல் சுற்றில் ஆப்கானிஸ்தானை மாத்திரம் வெற்றிகொண்ட பங்களாதேஷ் சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.
எனினும் இந்தியாவுடனான தனது கடைசிப் போட்டியில் வெற்றியீட்டிய ஆறுதலுடன் பங்களாதேஷ் நாடு திரும்பவுள்ளது.
இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்தியாவுக்கு இது அசுப தோல்வியாக அமைந்துவிட்டது.
பங்களாதேஷின் வெற்றியில் அணித் தலைவர் ஷிக்கிப் அல் ஹசன், தௌஹித் ரிதோய் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், நசும் அஹ்மதின் சிறப்பான துடுப்பாட்டம், தன்சிம் ஹசன் ஷக்கிபின் துல்லியமான பந்துவீச்சு என்பன பிரதான பங்காற்றின.
மறுபக்கத்தில் ஷுப்மான் கில் தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்தி குவித்த சதம் இந்தியா அடைந்த தோல்வியினால் வீண்போனது.
பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 259 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ரோஹித் ஷர்மா (0), திலக் வர்மா (5) ஆகிய இருவரும் முதல் 3 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்ததுடன் மொத்த எண்ணிக்கை 17 ஓட்டங்களாக இருந்தது.
இந் நிலையில் ஷுப்மான் கில், கே. எல். ராகுல் (19) ஆகிய இருவரும் 3ஆவது வீக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
ஆனால், ராகுல், இஷான் கிஷான் (5) ஆகிய இருவரும் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (94 - 4 விக்.)
தொடர்ந்து ஷுப்மான் கில்லும் சூரியகுமார் யாதவ்வும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்ளைப் பகிர்ந்திருந்தபோது சூரியகுமார் யாதவ் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மொத்த எண்ணிக்கை 170 ஓட்டங்களாக இருந்தபோது ரவிந்த்ர ஜடேஜா (7) நடையைக் கட்டினார்.
மறுபக்கத்தில் மிகவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஷுப்மான் கில் 133 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 121 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இது இந்தியாவுக்கு பேரிடியாக அமைந்தது. (209 - 7 விக்.)
எனினும் அக்சார் பட்டேல், ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 249 ஓட்டங்களாக உயர்த்தினர். ஆனால், தாகூர் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அக்சார் பட்டேல் 34 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.
அத்துடன் இந்தியாவின் வெற்றிக் கனவு கலைந்துபோனது.
கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை வீசிய தன்ஸிம் ஹசன் சக்கிப் முதல் 3 பந்துகளில் ஓட்டம் கொடுக்கவில்லை. 4ஆவது பந்தில் மொஹமத் ஷமி பவுண்டறி விளாசினார். ஆனால் அடுத்த பந்தில் ரன் அவுட் ஆக பங்களாதேஷின் வெற்றி உறுதியானாது.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைக் குவித்தது.
முன்வரிசை வீரர்களான தன்ஸித் ஹசன் (13), லிட்டன் தாஸ் (0), அனாமுல் ஹக் (4), மெஹிதி ஹசன் மிராஸ் (13) ஆகிய நால்வரும் பிரகாசிக்கத் தவறினர்.
இதன் காரணமாக 14 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
எனினும் ஷக்கிப் அல் ஹசன், தௌஹித் ரிதோய் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 5ஆவது விக்கெட்டில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
ஷக்கிப் அல் ஹசன் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் தௌஹித் ரிதோய் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் நசும் அஹ்மத் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.
மெஹிதி ஹசன் 29 ஓட்டங்களுடனும் தன்ஸிம் ஹசன் சக்கிப் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் ஷமி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டி முடிவுடன் சுப்பர் 4 சுற்று நிறைவில் பங்களாதேஷ் 3ஆம் இடத்திற்கு முன்னேறியதுடன் பாகிஸ்தான் 4ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.
இது இவ்வாறிருக்க இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆசிய சம்பினைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இதே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM