(நா.தனுஜா)
- ஒக்டோபர் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில் அமைச்சர்கள் மட்டக்கூட்டம்
- இதுவரை 16 நாடுகள் பங்கேற்பை உறுதிசெய்துள்ளன
- காலநிலைமாற்ற சவால்கள் குறித்து ஆராயப்படும்
இம்முறை இந்து சமுத்திர வளைய நாடுகள் அமைப்பின் (Indian Ocean Rim Association - IORA) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10, 11 ஆம் திகதிகளில் 'பிராந்தியக் கட்டமைப்பை வலுப்படுத்தலும், இந்து சமுத்திரத்தின் அடையாளத்துக்கு வலுவூட்டலும்' என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்ற ரீதியில் இந்த அமைச்சர்கள் மட்டக்கூட்டத்தை ஏற்பாடு செய்வது இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.
அதன்படி இக்கூட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்து சமுத்திர வளைய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மட்டக்கூட்டம் இம்முறை இலங்கையால் ஒழுங்குசெய்யப்படுவதை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் கேந்திர நிலைய ரீதியில் மிகமுக்கியமான பகுதியில் இலங்கை அமைந்திருந்தாலும் கூட, ஏனைய நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தாமல் இந்த அமைவிடத்தினால் மாத்திரம் நன்மைகளை அடைந்துவிடமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட இந்து சமுத்திர வளைய நாடுகள் அமைப்பில் 23 உறுப்புநாடுகளும் 11 ஊடாடல் பங்குதாரர் நாடுகளும் அங்கம்வகிக்கின்றன.
இவ்வமைப்பில் ஸ்தாபக உறுப்புநாடான இலங்கைக்கு மேலதிகமாக அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கொமோரொஸ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், கென்யா, மடகஸ்கார், மலேசியா, மாலைதீவு, மொரீஷியஸ், மொஸாம்பிக், ஓமான், சீஷேல்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, தென்னாபிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் யேமன் ஆகிய நாடுகள் அங்கம்வகிக்கின்றன. அதேபோன்று சீனா, எகிப்து, ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், சவுதி அரேபியா, தென்கொரியா, ரஷ்யா, துருக்கி, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா என்பன இவ்வமைப்பின் ஊடாடல் பங்குதாரர் நாடுகளாக உள்ளன.
இதுவரையான காலப்பகுதியில் இவற்றில் 16 நாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 23 ஆவது அமைச்சர்கள் மட்டக்கூட்டத்தில் தமது பங்கேற்பை உறுதிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் அலி சப்ரி நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
'இம்முறை இந்து சமுத்திர வளைய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மட்டக்கூட்டத்தை ஏற்பாடு செய்யும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்திருக்கின்றது. இலங்கை எப்போதும் சுயாதீனமாகவும், எந்தவொரு தரப்பினரையும் சாராத வகையிலுமே செயற்பட்டுவந்திருக்கின்றது. அவ்வடிப்படையிலேயே இந்தக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்படும்' என்று குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானிடமிருந்து இவ்வமைப்பில் இணைந்துகொள்வதற்கான விண்ணப்பம் கிடைக்கப்பெற்றால் அதுகுறித்து பரிசீலனைசெய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் 'இலங்கையின் அமைவிட முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி, ஏனைய நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும். இந்து சமுத்திரப்பிராந்தியமானது வர்த்தக நடவடிக்கைகளுக்காக அனைவருக்கும் திறக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இப்பிராந்தியத்தின் அமைதியும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்' என்றும் அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
இந்து சமுத்திர வளைய நாடுகள் அமைப்பானது கடற்சூழல் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள், மீன்வள முகாமைத்துவம், அனர்த்த அச்சுறுத்தல் தொடர்பான அறிவூட்டல், கல்வி மற்றும் விஞ்ஞானபூர்வ ஒத்துழைப்பு, சுற்றுலா மேம்பாடு மற்றும் கலாசாரப் பரிமாற்றம் ஆகிய 6 விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கிவருவதுடன் சமுத்திரப் பொருளாதாரம் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் என்பன தொடர்பில் விசேட அவதானம் செலுத்திவருகின்றது.
எனவே எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள அமைச்சர்கள் மட்டக்கூட்டத்தின்போது இத்துறைகளில் தமது ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்திக்கொள்வதற்கும், காலநிலைமாற்ற சவால்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடுவதற்கும் இலங்கை எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM