(நா.தனுஜா)
உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான உரியவாறான விசாரணைகள் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இவ்விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பான முறையில் செயற்படுவதாகவும் தவறானதும், ஆதாரமற்றதுமான தகவல்களைத் தமது மதிப்பீட்டுக்குப் பயன்படுத்துவதாகவும் இலங்கை குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. பேரவையின் முதலாம் நாள் அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை குறித்து உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவ்வறிக்கை இலங்கையின் உண்மையான நிலைவரத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் புதன்கிழமை (13) 54 ஆவது கூட்டத்தொடரின் பொதுவிவாதத்தில் இலங்கை சார்பில் உரையாற்றிய அவர், '60ஃ251 மற்றும் 48ஃ141 ஆகிய தீர்மானங்களின் பிரகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமும் அனைத்துலகத்தன்மை, பக்கச்சார்பின்மை, தெரிவின்மை மற்றும் சர்வதேச கலந்துரையாடலையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்பல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலேயே செயற்படவேண்டும். இருப்பினும் துரதிஷ்டவசமாக இக்கட்டமைப்புக்கள் இலங்கை விவகாரத்தில் மேற்குறிப்பிட்டவாறு செயற்படவில்லை' என்று குறிப்பிட்டார்.
'உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை மேற்குறிப்பிட்டவாறானதொரு சம்பவமாகக் கூறமுடியும். உயர்ஸ்தானிகர் அலுவலகமானது தவறானதும், ஆதாரமற்றதுமான தகவல்களைத் தமது மதிப்பீட்டுக்குப் பயன்படுத்துவது கவலைக்குரிய விடயமாகும்.
இலங்கை பலமுறை அறிவித்ததைப்போன்று உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் அதில் குறிப்பிடத்தக்கதோர் நடவடிக்கையாகும்.
இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ், அமெரிக்காவின் எஃப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் என்பன உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன' என்றும் ஹிமாலி அருணதிலக பேரவையில் சுட்டிக்காட்டினார்.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக 79 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாகவும், இத்தாக்குதல்கள் இடம்பெற்றபோது பதவியில் இருந்த ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர், பாதுகாப்புச்செயலாளர், அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மற்றும் தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவர் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல்செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான தீர்ப்பு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு இவ்விடயம் தொடர்பில் சமீபத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கரிசனைகள் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும், இதுபற்றிய விசாரணைகளுக்காக ஜனாதிபதியினால் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஹிமாலி அருணதிலக குறிப்பிட்டார்.
இவற்றுக்கு மேலதிகமாக 'ஒரே சீனா கொள்கையை' தாம் ஆதரிப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடனான சீனாவின் ஒத்துழைப்பைத் தாம் வரவேற்பதாகவும் தெரிவித்த அவர், எந்தவொரு நாட்டினதும் உள்ளக விவகாரங்கள் மற்றும் இறையாண்மையில் ஏற்படுத்தப்படும் தலையீடுகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமுடியாது என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM