செப்ஸிஸ் (Sepsis) குறித்து அவதானமாக இருப்போம்:  உயிரிழப்புகளை தடுக்க விரைந்து செயற்படுவோம்!

Published By: Vishnu

14 Sep, 2023 | 11:53 AM
image

செப்ஸிஸ் என்பது உயிராபத்தை விளைவிக்க கூடிய ஒரு தீவிர கிருமி தொற்று நிலையாகும். இதன் பாரதூரத்தை உணர்ந்த உலக செப்ஸிஸ் கூட்டமைப்பு (Global Sepsis Alliance) செப்டம்பர் 13ஆம் திகதியை  உலக செப்ஸிஸ் தினமாகவும் செப்டம்பர் மாதம் முழுவதையும் இந்த ஆபத்தான  நோயினை பற்றிய விழிப்புணர்வுக்கான மாதமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. 

மக்களுக்கு செப்ஸிஸ் நோய் நிலைமை தொடர்பான விழிப்புணர்வை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வரும் இலங்கை மயக்க மருந்து மற்றும் அதிதீவிர சிகிச்சை வைத்திய நிபுணர்களின் அமைப்பு (The college of Anaesthesiologists and intensivist of Sri Lanka) இம்முறை செப்ஸிஸ் தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத துறைகளின் பங்களிப்புடன் இலங்கை செப்ஸிஸ் கூட்டணியை (Sri Lankan Sepsis Alliance) நிறுவி மேம்பட்ட சேவையினை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளது. 

செப்ஸிஸ் என்றால் என்ன?

செப்ஸிஸ் என்பது உயிராபத்தை விளைவிக்க கூடிய ஒரு மருத்துவ அவசர நிலையாகும். சாதாரணமாக உடல் நோய் தொற்றுக்கு உள்ளாகும் போது உடலின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பு (Immune system) கிருமிகளுக்கு எதிராக செயல்படும். ஆனால் செப்ஸிஸ் நோய் நிலைமையின் போது, நோய் எதிர்ப்பு கட்டமைப்பானது சீர்குலைந்து கிருமிகளுக்கு எதிராக மட்டுமல்லாது மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் ஈரல் உள்ளிட்ட அனைத்து உடல் பாகங்களுக்கு எதிராகவும் செயல்பட ஆரம்பிக்கும்.

செப்ஸிஸ் நோயை கண்டறிவதிலும் சிகிச்சை அளிப்பதிலும் தாமதம் ஏற்பட்டால் இதனிலும் தீவிரமான “செப்டிக் ஷாக்” (Septic shock) என்ற நிலை ஏற்படும்.  இதன்போது உடல் உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டம் தடைப்பட்டு அவை  செயலிழக்கும்( Multi organ failure). இந்த நிலைக்குள்ளானவர்களில் குறைந்தது 40 வீதமானவர்கள் மரணத்தை தழுவுவார்கள்.

பொதுவாக பாக்டீரியா (bacteria)  கிருமித் தாக்கமே செப்ஸிசை தோற்றுவிக்கும். அரிதாக வைரஸ்(virus) மற்றும் பங்கஸ்(fungus) தொற்றும் இந்நிலைக்கு இட்டுச் செல்லலாம். சாதாரணமாக  உடலானது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருந்துகளின் உதவியுடன் கிருமித் தொற்றினை வெற்றி கொள்ளும். ஆனால் நோய்த்தொற்றின் தீவிரம் நோயாளியின் உடல்நிலை போன்ற பல்வேறு காரணங்களினால் கிருமித் தொற்று தீவிரமாகி செப்ஸிஸாக மாற்றமடையும். மூளைக்காய்ச்சல்(meningitis), நியூமோனியா(Pneumonia), தோளில் ஏற்படும் தொற்றுகள், சிறுநீர் மற்றும் குடல் தொகுதியில் ஏற்படும் தொற்றுக்கள் செப்ஸிஸை தோற்றுவிக்கும் நோய்களுக்கு உதாரணங்களாகும்.

செப்ஸிஸை அறிந்து கொள்வது ஏன் முக்கியம்?

உலக செப்ஸிஸ் கூட்டமைப்பின்(GSA) தரவுகளின் படி ஆண்டுதோறும் 47 தொடக்கம் 50 மில்லியன் மக்கள் செப்ஸிஸ் தொற்றுக்கு உள்ளாகின்றனர். இவர்களில் குறைந்தது 11 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். உலகில் ஒவ்வொரு 2.8 வினாடியிலும் ஒரு மரணம் செப்ஸிஸினால் பதிவாகிறது. மேலும் வைத்தியசாலையில் நிகழும் இறப்புகளில் ஐந்தில் ஒரு இறப்புக்கும் இதுவே காரணமாகிறது. செப்ஸிஸ் பாதிப்புக்குள்ளான நோயாளி மரணத்திலிருந்து தப்பினாலும் அதன் தாக்கம் வாழ்நாள் பூராகவும் தொடருகின்றது.

செப்ஸிஸை முன்கூட்டியே அறிய முடியுமா?

செப்ஸிஸை முன்கூட்டியே அறிவது சிலவேளைகளில் வைத்திய நிபுணர்களுக்கே சவாலான விடயமாக அமைந்து விடுகின்றது. எனவே ஒருவர் கிருமித் தொற்றிற்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகித்தால் வைத்திய ஆலோசனையை உடனடியாக நாடுவது இன்றியமையாததாகும். உடல் செப்ஸிஸ் தொற்றிற்கு உள்ளாகும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும். 

 • குழப்பமான அல்லது தெளிவற்ற பேச்சு
 • உடல் நடுக்கம் அல்லது நோவுடன் கூடிய கடுமையான காய்ச்சல் 
 • நாள் பூராகவும் சிறுநீர் கழிக்க முடியாமல் போதல்
 • சுவாசிப்பதில் கடுமையான சிரமம்
 • மரணித்து விடுவோமோ என்ற பயம் உள்ளத்தில் ஏற்படுதல் 
 • சிறுசிறு புள்ளிகள் போன்றோ அல்லது முழுமையாகவோ தோலில் நிற மாற்றங்கள் ஏற்படுதல் 

செப்ஸிஸினால் அதிகம் பாதிக்கப்பட கூடியவர்கள் யார்?

 செப்ஸிஸ் நோய் தொற்று யாருக்கும் ஏற்படலாம். பொதுவாக பலவீனமான உடல் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை உடைய பின்வரும் குழுவினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

 • நாள்பட்ட தொற்றா நோய்( chronic disease) உடையவர்கள். உதாரணமாக நீரிழிவு, சுவாச நோய்,  சிறுநீரக நோய்,  இதயம்,              கல்லீரல் நோயுடையவர்கள்.
 • புற்றுநோயாளிகள்
 • மண்ணீரல் அகற்றப்பட்டவர்கள் 
 • குழந்தைகள்
 • கர்ப்பிணி தாய்மார்கள் 
 • வயோதிபர்கள்

 ஒருவர் செப்ஸிஸ் நோய் நிலைக்கு உள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கும் போது செய்ய வேண்டியது என்ன?

 உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதே இதற்கான தீர்வாகும். இதன் போது வைத்தியர்கள் குருதி  அழுத்தம், இதயத்துடிப்பு வீதம், உடலின் ஆக்சிஜன் அளவு போன்ற பரிசோதனைகள் மூலம்  செப்ஸிஸ் நிலைமையின் தீவிரத் தன்மை பற்றி அறிந்து கொள்வர்.  

விரைவாக செப்ஸிஸ் நிலைமையை அடையாளம் காணலும்(diagnosis)  அதற்கான சிகிச்சையை துரிதமாக ஆரம்பிப்பதும் செப்ஸிஸை வெற்றிகொள்வதில் மிக முக்கியமான ஆரம்ப படிகள் ஆகும். எனவே நோய் தொற்றிற்கு உள்ளாகும் போது விரைவாக வைத்தியரை நாடுவது மிக அவசியமாகும் .

செப்ஸிஸ் இற்கான காரணங்களை அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பதில் முதல் சில மணித்தியாலங்களுக்குள் வைத்தியர்கள் மிக முக்கியமான பணிகளை மேற்கொள்வர்,

 • கிருமிகளை அடையாளம் காண இரத்தம், சிறுநீர், மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்படும். 
 • கிருமித் தொற்றின் வீரியம் மற்றும் உடலுறுப்புகளின் செயலிழப்பு தன்மையை அறிந்து கொள்வதற்காகவும் குருதி மாதிரிகள்          எடுக்கப்படும்.
 • கிருமிகளை அழிப்பதற்கான தகுந்த ஆண்டிபயாட்டிகள்(Antibiotics) வழங்கப்படும்.
 • உடலின் நீர் இழப்பினை சரி செய்ய சேலைன் (saline) போன்ற திரவங்கள் நேரடியாக குருதியினுள்   பாய்ச்சப்படும்.
 • உடல் குருதி அழுத்தம் குறைவடைந்தால் தடுப்பதற்கான மருந்துகள் வழங்கப்படும்.

செப்ஸிஸ்  எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

செப்ஸிஸ் உடலின் அனைத்து கலங்களையும் இழையக் கட்டமைப்புகளையும் ( structural) செயற்பாட்டு ரீதியாக (functional) பாதித்து உடல் உறுப்புகளின் செயலிழப்பிற்கு காரணமாக அமைகிறது. இதயம், சிறுநீரகம், நுரையீரல் ,ஈரல், மூளை போன்ற முக்கிய உறுப்புகளின் செயலிழப்பு மரணத்தை நோக்கி இட்டுச் செல்லும்.

செப்ஸிஸின் பாதிப்பு மருத்துவமனையுடன் முற்றுப்பெறுமா?

நோயாளிகள் செப்ஸிஸ் நிலைமையில் இருந்து மீண்டு வந்தாலும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதன் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். இதை நாம் “Post sepsis syndrome”  செப்சிஸ் இன் பின்னரான நோய் குறி என்று  அழைக்கின்றோம். இவை அதிக பதற்றம், உடல் தசைகளின் வீரியம் குறைதல், அதிக சோர்வு, கிரகிக்கும் ஆற்றல் குறைதல் ,ஞாபக மறதி போன்றனவாகும். இறுதியில் நோயாளர்கள் குணமடைந்தாலும் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுகிறது.

செப்ஸிஸை தடுக்க முடியுமா?

நோய் தொற்றுக்குள்ளாவதை தவிர்ப்பதும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் இதற்கான வழியாகும். சில இலகுவான செயற்பாடுகள் இந்த கொடிய நோய் நிலைமையிலிருந்து எம்மை பாதுகாக்க வழிவகுக்கும்.

 • கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளல்
 • சுகாதாரமான உணவு பழக்க வழக்கம் மற்றும் அன்றாடம் உடல் பயிற்சிகளை மேற்கொள்ளல்
 • நீரிழிவு போன்ற தொற்றா நோய்களை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் 
 • சரியான நேரத்தில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளல்
 • கிருமித் தொற்றுக்கான மருத்துவ சிகிச்சையை தாமதியாமல் பெற்றுக்கொள்ளல் 
 • சமூகத்தில் செப்ஸிஸ் தொடர்பான அறிவூட்டலை மேம்படுத்தல்

உலகளாவிய ரீதியில் உலக செப்ஸிஸ் கூட்டமைப்பு(GSA) செப்ஸிஸ்   தொடர்பாக மக்களை அறிவூட்டுவதில் பாரிய பங்களிப்பை செய்து வருகின்றது. இலங்கையில் எமது மயக்க மருந்து மற்றும் அதிதீவிர சிகிச்சை வைத்திய நிபுணர்களின் நிறுவனம்(COAISL) செப்ஸிஸ் விழிப்பூட்டலுக்காக பல்வேறு  விரிவுரைகளையும் அறிவூட்டல் செயற்பாடுகளையும் செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 13ம் திகதி இலங்கை செப்ஸிஸ் கூட்டமைப்பு( Sri Lankan Sepsis Alliance )என்ற புதிய அமைப்பை நிறுவி அனைத்து மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத துறைகளை  ஒன்றிணைத்து இலங்கை சுகாதார திணைக்களத்தின் உதவியுடன் எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்ளவுள்ளது.  

இந்த அமைப்பு செப்ஸிஸ் தொடர்பாக சுகாதார துறை சார்ந்த மற்றும் துறை  சாராத அனைவருக்குமான அறிவூட்டல் செயல்பாடுகளை  மேற்கொள்ளல், புதிய ஆராய்ச்சிகளை நிகழ்த்துதல், தேசிய சிகிச்சை வழிகாட்டிகளை உருவாக்குதல் (guidelines) போன்ற விடயங்களில் கூடிய கவனம் செலுத்தவும் தீர்மானித்துள்ளது. 

எழுத்தாக்கம் : Dr Abdus Sukoor, Dr Piyusha jayawardena, Dr Thusitha Jayathilaka, Dr Nandika Wanigasinghe

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மியூகோசிடிஸ் எனும் சளி வீக்க பாதிப்பிற்குரிய...

2024-07-23 14:35:47
news-image

எதிர்மறை எண்ணங்களை அகற்ற உதவும் நரம்பியல்...

2024-07-22 17:19:21
news-image

பால், பால்மா, பாற்பொருட்களால் ஏற்படும் லாக்டோஸ்...

2024-07-20 18:21:12
news-image

நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படுவது...

2024-07-19 17:33:29
news-image

கல்லீரல் சுருக்க பாதிப்பால் உண்டாகும் ரத்த...

2024-07-19 17:27:13
news-image

ஃபிஸர் எனும் ஆசன வாய் வெடிப்பு...

2024-07-17 17:23:03
news-image

கெலாய்டு வடு பாதிப்பை அகற்றும் நவீன...

2024-07-16 14:41:29
news-image

முடி அகற்றுவதற்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2024-07-15 17:07:51
news-image

பிளெபரோபிளாஸ்ரி எனும் கண் இமைகளின் அழகிற்கான...

2024-07-13 10:33:23
news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59