இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதும் சுப்பர் 4 இன்று ; இரண்டு அணிகளுக்கும் 'செய் அல்லது செத்து மடி' என்ற நிலை

Published By: Vishnu

14 Sep, 2023 | 12:00 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணியைத் தீர்மானிக்கும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சுப்பர் 4 கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (14) நடைபெறவுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி வரலாற்றில் இதுவரை உபகண்ட கிரிக்கெட் ஜாம்வான்களான இந்தியாவும் பாகிஸ்தானும் சந்தித்திராத நிலையில் அந்த வரலாற்றை தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்ய இலங்கையினால் முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இன்றைய போட்டி இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் கிட்டத்தட்ட அரை இறுதிப் பொட்டிக்கு ஒப்பானதாக அமைவதால் இரண்டு அணிகளுக்கும் செய் அல்லது செத்துமடி என்ற இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 13 வெற்றிகளை சுவைத்த இலங்கையின் வெற்றி அலைக்கு கடந்த போட்டியில் இந்தியா முடிவு கட்டியிருந்தது.

ஆனால், 14ஆவது தொடர்ச்சியான தடவையாக எதிரணியின் (இந்தியா) சகல விக்கெட்களையும் இலங்கை வீழ்த்தியமை  குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் அணிகளில் ஒன்றான இந்தியாவின் சகல விக்கெட்களையும் இலங்கை கைப்பற்றி அவ்வணியை 213 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியிருந்தது.

ஆனால், மோசமான துடுப்பாட்டங்கள் காரணமாக இலங்கை தோல்வி அடைய நேரிட்டது.

மேலும் 39 வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 2 தடவைகள் மாத்திரமே (2012 மற்றும் 2016) இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இலங்கை தவறவிட்டிருந்தது.

இன்றைய போட்டியை இலங்கை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் அதேவேளை, உபாதையினால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி சில மாற்றங்களுடன் களம் இறங்கவுள்ளது.

இந்தியாவுடனான போட்டியில் குறிப்பாக துடுப்பாட்டத்தில் இழைத்த மோசமான தவறுகளைத் திருத்திக்கொண்டு இலங்கை விளையாடவுள்ளது. குறிப்பாக சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் அநாவசியமாக தங்களது விக்கெட்களை தாரைவார்த்து இலங்கையின் தோல்விக்கு முக்கிய காரணவாளிகள் ஆகினர்.

அவர்கள் இருவருடன் ஏனையவர்களும் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி முதலில் துடுப்பெடுத்தாடினால் இலங்கைக்கு கணிசமான ஓட்டங்கள் குவிவதை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும் ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றில் விளையாடும் நான்கு அணிகளில் இலங்கையைத் தவிர்ந்த மற்றைய 3 அணிகளும் ஒரு தடவையேனும் 300 ஓட்டங்களைக் கடந்திருந்தன. எனவே இலங்கையும் துடுப்பாட்டத்தில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்துவது அவசியமாகும்.

நடப்பு ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய திமுத் கருணாரட்னவுக்குப் பதிலாக பெரும்பாலும் குசல் பெரேரா இன்றைய போட்டியில் விளையாடுவார் எனவும் ஏனைய வீரர்களில் மாற்றம் இடம்பெறாது எனவும் கருதப்படுகிறது. ஆனால், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தியாவுடனான போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த 20 வயதான துனித் வெல்லாகே (5 விக்கெட்கள், ஒரு பிடி, ஆட்டம் இழக்காமல் 42 ஓட்டங்கள்) உலகக் கிண்ண போட்டிக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடிப்பார் என நம்பப்படுகிறது.

ஆசிய கிண்ண சுற்றுப் போட்டியில் 9 விக்கெட்களுடன் முதலாம் இடத்தை இந்திய வீரர் குல்தீப் யாதவ், ஹரிஸ் ரவூப் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டுள்ள துனித் வெல்லாலகே, 8 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள மதீஷ பத்திரண, 7 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள மஹீத் தீக்ஷன ஆகியோர் பாகிஸ்தானுக்கு நெருக்கடியைக் கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

22 போட்டிகளுக்குப் பின்னர் இந்தியாவுடனான போட்டியில் பந்துவீசி 4 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த சரித் அசலன்கவை பாகிஸ்தானுடனான போட்டியிலும் பந்துவீச்சில் தசுன் ஷானக்க பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பாகிஸ்தான் வெற்றியை குறிவைத்து இலங்கையை சந்திக்கவுள்ளது.

மூன்று வீரர்கள் உபாதைக்குள்ளாகி இருப்பதாலும் இருவர் பிரகாசிக்கத் தவறியதாலும் பாகிஸ்தான் அணியில் 5 மாற்றங்கள் இடம்பெறுகிறது.

ஹரிஸ் ரவூப், நசீம் ஷா, சல்மான் அலி அகா, பக்கார் ஸமான், பாஹீம் அஷ்ரவ் ஆகிய ஐவரும் இடம்பெறாதது பாகிஸ்தானுக்கு பேரிடியாகும்.

இது இவ்வாறிருக்க, இன்றைய போட்டி ஒருவேளை மழையினால் கைவிடப்பட்டால் நிகர ஓட்ட வேக அடிப்படையில் இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதிபெறும்.

அணிகள்

இலங்கை: திமுத் கருணாரட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித்த, மதீஷ பத்தரண.

பாகிஸ்தான்: மொஹமத் ஹரிஸ், இமாம் உல் ஹக், பாபர் அஸாம் (தலைவர்), மொஹமத் ரிஸ்வான், சவூத் ஷக்கீல், இப்திகார் அஹ்மத், ஷதாப் கான், மொஹமத் நவாஸ், ஷஹீன் ஷா அப்றிடி, மொஹமத் வசிம் (ஜூனியர்), உஸ்மான் கான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11