உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச பங்கேற்புடன் கூடிய சர்வதேச விசாரணை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் அரசாங்கத்துக்கு இருக்கும் நோக்கங்களில் நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நம்பிக்கை ஏற்பட உதவும் என்று தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியிருக்கிறது.
இது தொடர்பில் சமாதானப் பேரவை நேற்று புதன்கிழமை (13) வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு :
இலங்கையில் 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சதித்திட்டம் தொடர்பில் இங்கிலாந்தின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை வெளியிட்டிருக்கும் விவரணக் காணொளி பெரும் விவாதத்தை மூளவைத்திருப்பதுடன், அந்த தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் நடைபெற்ற விசாரணைகள் குறித்து எதிர்மறையான உணர்வுகளை மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறது.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஏக காலத்தில் இடம்பெற்ற ஆறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள். பலியானவர்களில் 13 நாடுகளைச் சேர்ந்த 45 வெளிநாட்டவர்களும் அடங்குவர். அவர்கள் ஹோட்டல்களில் தங்கியிருந்தபோது அனர்த்தம் நேர்ந்தது. மேலும், 500க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.
குண்டுத் தாக்குதல்களின் காட்டுமிராண்டித்தனமும் முழு நாட்டு மக்கள் மத்தியிலும் அவை தோற்றுவித்த நிச்சயமற்ற நிலையும் நாட்டை உண்மையில் இரு மாதங்கள் ஸ்தம்பிக்கவைத்தன. தேசிய பொருளாதாரத்துக்கு அவை ஏற்படுத்திய படுமோசமான தாக்கத்தின் விளைவுகளை இன்றும் மக்கள் அனுபவிக்கிறார்கள்.
காணொளியில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் தலைமையில் குழுவொன்றையும் தாக்குதல்களின் பின்னணியில் சதித்திட்டம் ஒன்று இருந்தது என்று முன்னாள் சட்டமா அதிபர் கூறியமை குறித்து விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றையும் நியமிப்பதற்கான தனது நோக்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார்.
இந்த விசாரணைகள் பூர்த்தியானதும் அவற்றின் அறிக்கைகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானத்தை பாராளுமன்றம் எடுக்கும் என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
ஜனாதிபதியின் இந்த யோசனைகள் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு தோல்வியில் முடிவடைந்த முன்னைய யோசனைகளை ஒத்தவையாகவே இருக்கின்றன.
2019 மே 22 சபாநாயகர் நியமித்த பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று 2019 ஒக்டோபர் 23 அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.
2019 செப்டெம்பர் 22 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் நியமித்த ஆணைக்குழு அதன் அறிக்கையை 2021 பெப்ரவரி முதலாம் திகதி அதன் அறிக்கையை கையளித்தது. குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்திருக்கக்கூடியவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. அந்த விசாரணைகளினால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
முன்னைய உள்நாட்டு விசாரணைகளின் மூலமாக தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு பொறுப்புக்கூற வைக்கப்படாதமையால் விசாரணைக்கான கோரிக்கைகள் தொடர்கின்றன.
பிரதானமாக கத்தோலிக்க திருச்சபையும் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச விசாரணையொன்று வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன.
சனல் 4 காணொளி வெளியிடப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுத்தார்.
அதேபோன்றே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களினதும் அவர்களின் பிரதிநிதிகளினதும் ஊக்கமான பங்கேற்புடன் சர்வதேச உதவியுடன் சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
சர்வதேச பங்கேற்புடன் கூடிய அத்தகைய விசாரணையொன்று பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் அரசாங்கத்துக்கு மெய்யான நோக்கங்கள் இருக்கிறது என்ற இலங்கை மக்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த உதவும் என்று தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது.
ஒரு மேலதிக பயனாக, அத்தகைய விசாரணை சர்வதேச உதவி உச்சபட்சமாக தேவைப்படுகின்ற ஒரு நேரத்தில் மீதான சர்வதேச கண்டனங்களையும் நாட்டுக்கு பாதிப்பாக அமையக்கூடிய தடைவிதிப்பு முயற்சிகளையும் தணிக்கவும் உதவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM