எமக்கு மேல் விளையாட்டும், விளையாட்டு மைதனங்களும் உள்ளன. அதற்கு கீழ் தான் நாம் உள்ளோம். கிரிக்கெட்டுக்கோ அல்லது மைதானங்களுக்கோ எவரேனும் பாதிப்பேற்படுத்த முனைந்தால் நான் ஒரு போது இடமளிக்கமாட்டேனென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மைதானப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தப் பிரச்சினையா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்ளமுடியும். அதைவிடுத்து கிரிக்கெட்டுக்கோ அல்லது மைதானங்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்த நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கை அங்கு பணியாற்றும் பணியாளர்கள் சீரழிக்க முயற்சித்தால் நான் அதற்கு இடமளிக்கப் போவதில்லை.

சர்வதேச மைதானங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பில் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. அதற்கான பொறுப்பு எனக்குள்ளது.

அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு இடையூகள் ஏற்பட்டால் தகுந்த முறையில் பேசி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வரவேண்டும்.

யாராவது விளையாட்டை விட மேலே போகமுடியாது. விளையாட்டு எம்மை விட மேலேயுள்ளதென்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். நான் கிரிக்கெட் நிறுவனத்திற்கு தலைவராக இருந்தாலும் கிரிக்கெட்டிற்கு கீழ் இருந்து தான் நான் செயற்பட முடியும். 

விளையாட்டு என்பது எம்மை விட மேன்மையானது என்பதை விளையட்டுடன் இணைந்து பணியாற்றும்  அனைத்து பணியாளர்களும்  விளங்கிக்கொள்ள வேண்டும்.

தம்புள்ளை விளையாட்டரங்கின் கூரை மேல் ஏறி நின்று போராட்டம் மேற்கொள்வோர் ஜனாதிபதியிடம் தமது நிலை குறித்து தெரிவிக்குமாறு கேட்கிறார்கள். ஏன் அவரிடம் போய் சொல்ல வேண்டும் அவரா அவர்களுக்கு வேலை தேடிக்கொடுத்தவர்.

முதலில் அவர்கள் ஜனாதிபதியிடம் போவதைவிடுத்து உரிய தரப்பினருடன் பேசி தீர்வைப்பெறவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.