தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது உபாதையால் கிரிக்கெட்டில் இருந்து விலகினேன். மறுபடியும் தலைமைப்பொறுப்புக் கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன் என இலங்கை இருபதுக்கு -20 அணியின் முன்னாள் தலைவர் லசித் மலிங்க தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக  15 ஆம் திகதி இடம்பெறவுள்ள பயிற்சிப் போட்டியில் சிறந்த முறையில் பந்துவீனால் போட்டித் தொடரின் 3 போட்டிகளிலும் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

இந்தநிலையில் பயிற்சிப்போட்டியில் சிறந்த முறையில் பந்து வீசி வெல்வதே முதலாவது இலக்காகவுள்ளது. அப்போது தான் அணித் தெரிவுக்குழுவுக்கும் அணியின் தலைவருக்கும் என்னை தெரிவுசெய்வதில் இலகுவாக இருக்கும்.

நான் உபாதைக்குள்ளானதால் இருபதுக்கு -20 போட்டிகளில் விளையாடியே ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. ஒருநாள் போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகின்றன.

இந்நிலையில் நான் ஒருநாள் போட்டியில் விளையாடுவதா அல்லது இருபதுக்கு - 20 போட்டியில் விளையாடுவதா என்பது தெரிவுக்குழுவால் தீர்மானிக்கப்படும்.

நான் இருபதுக்கு - 20 அணித் தலைமையில் இருந்தபோதே உபாதைக்குள்ளானேன். இல்லாவிடில் நான் அணித் தலைமையில் இருந்து விலகியிருக்க மாட்டேன். அணித் தலைமை பொறுப்பு கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன்.  அனைவருடனும் இணைந்து விளையாடுவதே சிறந்தது என நினைக்கின்றேன். கிரிக்கெட்டில் விளையாடுவதே எனது இலட்சியம்.

மறுபடியம் எனக்கு தலைமைப்பொறுப்பு கிடைக்குமென்றால் நான் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.

இருபதுக்கு - 20 கிரிக்கெட் குறித்து எனக்கு எவ்வித அழுத்தமுமில்லை. கடந்த 3 , 4 மாதங்களாக நல்லதொரு பயிற்சியை மேற்கொண்டுள்ளேன்.

நல்ல நிலையிலேயே தற்போதுள்ளேன் அந்தவகையில் அணிக்காக திறமையாக செயற்பட்டு அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் நோக்கமேயுள்ளது.

அணியில் நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நாம் விளையாடுவது எந்த அணியுடன் என்றில்லாது எதிரணியுடன் உத்தேவகத்துடன் விளையாடினால் போட்டியை வெற்றி கொள்ளலாம்.

நாம் எதிரணிக்கு தேவையானவற்றை கொடுத்து விளையாடுவது முக்கியமல்ல. நாம் எமது திறமை, வலுவுக்கு ஏற்றவகையில் விளையாடினால் நல்ல பெறுபேற்றை பெறமுடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.