(நிவேதா அரிச்சந்திரன்)
'வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற நோக்கோடு மத்தியகிழக்கு நாடொன்றுக்கு பணிப்பெண்ணாகச் சென்று வாழ்நாளின் இறுதித் தருணம்வரை மனநோய்க்கு மருந்து உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்கிறார் மனோன்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)’.
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மனோன்மணி என்ற பெண் திறன் பயிற்சிகளின்றி மத்தியக்கிழக்கு நாடொன்றுக்கு பணிப்பெண்ணாகச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு முகம்கொடுத்து இறுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான அவரது அனுபவப்பகிர்வே இது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து 23 சதவீதமானோர் வீட்டுப் பணிப்பெண்களாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்கள் குறைந்த தொழில்திறன், போதுமான பயிற்சி மற்றும் மொழியறிவின்மை போன்ற காரணங்களால் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஊடக பிரதிப் பொதுமுகாமையாளர் செனரத் யாப்பா தெரிவித்தார்.
குடும்ப வறுமை காரணமாக 1993ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் ஓமான் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக செட்டித்தெருவிலுள்ள வெளிநாட்டு முகவர் நிலையமொன்றின் ஊடாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டுக்கு மனோன்மணி அனுப்பப்பட்டுள்ளார்.
இவர் வீட்டுப் பணிப்பெண்ணாக அனுப்பப்பட்டபோது எவ்வித பயிற்சிகளும் சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் கடவுச்சீட்டை முகவர் நிலையத்திடம் ஒப்படைத்து கிட்டத்தட்ட ஒரு மாதக்காலப்பகுதிக்குள் ஓமானுக்கு தனது 25 ஆவது வயதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அதிக குடும்ப அங்கத்தவர்கள் கொண்ட ஒரு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவருக்கு 4 மாதங்கள் மாத்திரமே 40,000 ரூபா வீதம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேறொரு வீட்டில் பணிபுரிந்த பெண்ணொருவரின் உதவியூடாக இலங்கை தூதரகத்துக்குச் சென்று முறையிட்டுள்ளார்.
அப்போது அங்குவந்த பொலிஸ் அதிகாரியான வீட்டு எஜமான், தனக்கு பயிற்சியற்ற பணிப்பெண்ணை இலங்கையிலுள்ள முகவர் நிலையம் அனுப்பி வைத்துள்ளதாகவும் பெறுமதி மிக்க பல பொருட்களை இந்த பெண் உடைத்துள்ளதாகவும் அதனாலேயே குறித்த சம்பள நிலுவை ஏற்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் அங்கிருந்து இவர் அதே வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டபோதிலும் சம்பள நிலுவை வழங்கப்படாமல் இரண்டு ஆண்டுகள் கழித்து வெறுங்கையோடு நாடு திரும்பியுள்ளார்.
'இதைநான் ஏற்றுக்கொள்கிறேன். காரணம் மொழி பயிற்சி மற்றும் தொழில் பயிற்சியின்றியே நான் அங்கு சென்றேன். கிட்டத்தட்ட 6 மாதகாலம் மொழியறிவு இன்மையால் பெரும் சிரமத்துக்குள்ளானேன். எஜமானி சொல்லும் வேலைகளை உடனேயே புரிந்துக்கொள்ள மாட்டேன். பின்னர் சைகைகள் ஊடாகவே எனக்கு கோபத்துடன் தெரிவிப்பார்கள். பின்னர் அந்த வேலையை நான் செய்துமுடிக்கும் போது அவர்கள் எனக்காக காத்திருக்கமாட்டார்கள்.
அதேநேரம் வீட்டு மின் உபகரணங்களை பயன்படுத்துவதென்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். 4 சுடுநீர் போத்தல்கள், 3 சலவை இயந்திரங்கள், கதவு திறப்பான் என நான் உடைத்த பொருட்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதனாலேயே என்னுடைய சம்பளத்தை வழங்க மறுத்தார்கள் ' என்ற விடயத்தை குறித்த பெண் தெரிவித்திருந்தார்.
இவர் மீண்டும் 1996ஆம் ஆண்டு நான்கு பிள்ளைகளுடன் கணவரின் வருமானம் போதாத நிலையில் கண்டியிலுள்ள முகவர் நிலையமொன்றின் ஊடாக குவைட் நாட்டுக்கு பணிப்பெண்ணாகச் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இதன்போது மொழிப்பிரச்சினை இவருக்கு இருக்கவில்லை என்றாலும் இரண்டாவது முறையென்பதால் வீட்டு வேலை தொடர்பான பயிற்சிகளை சம்பந்தப்பட்ட முகவர் நிலையம் பெற்றுக்கொடுக்கவில்லை.
ஓமான் நாட்டில் பெற்ற பயிற்சிகள் போதுமானதென்ற நம்பிக்கையோடு இவர் அங்கு சென்றபோது நிலைமை மாறியது. காரணம் ஓமான் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வீட்டு மின் உபகரணங்கள் வேறு மாதிரியாக இருந்ததாலும் குவைட்டில் உள்ள வீட்டுப்பாவனைப் பொருட்கள் வேறுமாதிரியாக இருந்ததாலும் ஆரம்பமே தனக்கு சவாலாக இருந்ததாக தெரிவித்தார்.
ஆனாலும் தனக்கு தெரிந்த அறிவை கொண்டு பொருட்களை பயன்படுத்தியதாகவும் வீட்டாரும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார். அங்குதான் அவருக்கு சிக்கலும் உருவானது. அதாவது சலவை இயந்திரம், குளிர்பான தயாரிக்கும் இயந்திரங்களை இவருக்கு பயன்படுத்த தெரியவில்லை என்பதற்காக அந்த வீட்டு எஜமானின் சகோதாரர் சொல்லிக்கொடுத்துள்ளார். அதுவே இந்த பெண்ணுக்கு பின்னாளில் வினையாக மாறியுள்ளது.
எனினும் வீட்டில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் ஒப்பந்தத்தின் படி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. நாடு திரும்புவதற்கு 6 மாதங்கள் எஞ்சியிருந்தபோது வீட்டு உரிமையாளரின் சகோதரர் குறித்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ள தொடர்ந்து முயற்சித்துள்ளார். இது தொடர்பில் வீட்டாருக்கு அறியப்படுத்தியபோதுதான் அவர் மீதான துன்புறுத்தல்கள் அதிகமாகியுள்ளது.
'ஒருநாள் குறித்த நபர் என்னிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த வேளை அவரை நான் தாக்கினேன். அதன்போது என் பின்னால் இருந்து அவரது சகோதரர்(வீட்டு உரிமையாளர்) என் தலையில் தாக்கினார். அதுவரை மட்டுமே எனக்கு நியாபகம் இருந்தது. நான் நாடு திரும்பியபோது அந்த நபரை கொல்லுவேன் அடிப்பேன் என்ற வார்த்தைகளை வாயில் எந்நேரமும் சொல்லிக்கொண்டிருப்பேன் என வீட்டார் சொல்லுவார்கள் என கண்ணீரோடு கதையை சொல்லி முடித்தார் மனோன்மணி '.
அதேவேளை இவரிடமிருந்து 6 மாத காலமாக எவ்வித தொடர்பும் இல்லாமல்போனதையடுத்து அந்நாட்டில் சாரதியாக பணியாற்றிய இவரது சகோதரிக்கு தெரிந்த நபரொருவரின் ஊடாக இலங்கை தூதரகத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பெண் சுகயீனமுற்றதாகவும் வீட்டில் வழுக்கி விழுந்ததில் கை,கால்கள் அடிப்பட்டுள்ளதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தரப்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த சாரதி ஊடாக 1998 ஆம் ஆண்டு இவர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இவர் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அவர் சுயநினைவின்றி குழப்பம் செய்துள்ளார். இதையடுத்து விமான நிலைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து கணவர் விமான நிலையம் சென்று மனைவியை பொறுப்பேற்றுள்ளார்.
'நாம் இலங்கையிலுள்ள தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு எஜமானருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தோம். அதில் அந்நாட்டில் இருக்கும்போது மனைவி நலமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நாம் விமான நிலையத்தில் வைத்தே வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டுமென கூறி வழக்கு சுமார் 2 மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டது. பின்னர் நாம் வழக்கை கைவிட்டோம். காரணம் மனைவியின் வைத்திய செலவு ஒருப்பக்கம் இருக்க வழக்குக்காக செலவழிக்க கூடிய வருமானம் என்னிடம் இருக்கவில்லை' என அவரது கணவர் சுப்பிரமணியம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரிவித்தார்.
அதன்பின்னர் வைத்தியசாலையில் மாதக்கணக்கில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பின் மெதுமெதுவாக சுயநினைவுக்கு வந்துள்ளார். ஆனாலும் வாழ்நாள் முழுவதும் இவரது பிரச்சினைக்குரிய மருந்தை உட்கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி இன்றும் மருந்தை உட்கொண்டு வருகிறார். ஒருநாள் மருந்து உட்கொள்ளவிடினும் இவருக்கு ஒருவகை தலைவலி ஏற்படுவதாகவும் உடனே கத்தி கூச்சலிட்டு சண்டையிடுவார் எனவும் அதிர்ச்சியான எந்த சம்பவங்களையும் இவரால் தாங்கிக்கொள்ள முடியாது எனவும் அவரது கணவர் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு இவர்களுடைய 21 வயது நிரம்பிய மகளை நோய்வாய்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் கிட்டத்தட்ட 40 வீதம் மீண்டும் பழைய நிலைக்கு ஆளாகியுள்ளார். வைத்தியர்களின் முயற்சியால் தற்போது அதிலிருந்து மீண்டு தற்போது நலமடைந்துள்ள அதேவேளை இவர் உட்கொள்ளும் மருந்தின் அளவிலும் வைத்தியர்கள் மாற்றம் செய்துள்ளார்கள். MTfree என்று சொல்லக்கூடிய ஒருவகை மருந்தை தற்போது எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த பெண்ணின் மனநலம் எப்போது, எதற்காக பாதிக்கப்பட்டது என்பது தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ள தேவையான ஆவணங்கள் மற்றும் வழக்கு அத்தாட்சிகள் தொடர்பில் கேட்டபோது, இவர்களது வீடு ஒருதடவை தீப்பற்றி எரிந்ததில் அழிந்துவிட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிடப்பட்ட பெண் ஆரம்பத்தில் மொழி மற்றும் தனது தொழில் தொடர்பான எவ்வித பயிற்சிகளுமின்றி பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனால் அவர் பல்வேறு சிரமங்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளதோடு கடைசியில் அவருக்கு மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவல், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் பின்னர் இலங்கையின் வறுமையானது 25 சதவீதத்தால் இரட்டிப்பாகியுள்ளதாக உலக வங்கி, யுனிசெவ் மற்றும் லேர்ன் ஏசியா போன்ற அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக நுவரெலியா மாவட்டமே அதிகளவு வறுமையால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அடையாளப்ப டுத்தப்பட்டது.
தொடர்ச்சியான வறுமை காரணமாக மலையகத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்களே அதிகளவில் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 2022ஆம் ஆண்டு தரவுகளின்படி நுவரெலியா மாவட்டத்தில் 3426 பேரும் கண்டி மாவட்டத்தில் 7498 பேரும் கேகாலையில் 2711 பேரும் மாத்தளையில் 2449 பேரும் பதுளையில் 3109 பேரும் களுத்துறையில் 4136 பேரும் இரத்தினபுரியில் 3221 பேரும் மொனராகலையில் 695 பேரும் வீட்டுப்பணிப்பெண்களாக சென்றுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 179,759 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். அதில் வீட்டுப்பணிப்பெண்களாக 66,406 பேரும் வீட்டுவேலை அல்லாத ஏனைய தொழில்களுக்காக 113,353 பேரும் சென்றுள்ளனர். இவர்களில் கட்டார், குவைத், சவுதி உள்ளிட்ட மத்தியகிழக்கு நாடுகளுக்கே அதிகளவானோர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அனுப்பப்படும் பெண்களுக்கு போதுமான திறன்சார் பயிற்சிகள் அளிக்கப்படாமையே இதுபோன்ற சம்பவங்களுக்கு பிரதான காரணங்களாக அமைகின்றன. அதேநேரம் திறன்சார்ந்த பயிற்சிகளை முறையாக பெற்றுக்கொண்டு வெளிநாடுச் சென்று உழைக்கும் பெண்களும் நம்மத்தியில் உள்ளனர்.
நாவலப்பிட்டி பகுதியைச்சேர்ந்த புவியரசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றவேளை சரியான மொழி மற்றும் தொழில் பயிற்சியை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்பியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு தடவைகள் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்று எவ்வித பிரச்சினைகளும் இன்றி நாடு திரும்பியுள்ளார்.
'2017ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு என்னுடைய சகோதரி வீசா அனுப்பிச் சென்றேன். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் 12 நாட்கள் நடத்தப்பட்ட பயிற்சிகளில் பங்கேற்றேன். அதில் எனக்கு மொழி மற்றும் வீட்டு பொருட்களை கையாளுவது எப்படி, குழந்தையை பராமரிப்பது தொடர்பான பல விடயங்கள் பயிற்சியளிக்கப்பட்டன. அதன்பின்னர் பீரோ சல்லி 15,000 ரூபா செலுத்தி பதிவு செய்து கொண்டேன்' என அவர் தெரிவித்தார்.
6 பேர் கொண்ட வீட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பப்பட்டபோது ஆரம்பத்தில் 32000 ரூபா சம்பளம் கொடுக்கப்பட்டு பின்னர் 42000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவருடைய முதல் பயணத்தின்போது 100 சதவீத மொழியறிவு இல்லையென்றாலும் பெற்றுக்கொண்ட பயிற்சியின் மூலம் வீட்டாரின் கட்டளைகளை விளங்கிக் கொண்டுள்ளார். அங்குச்சென்று சுமார் 4 மாதக்காலப்பகுதிக்குள் இயலுமானவரை மொழியை கற்றுக்கொண்டதாகவும் துரித உணவுகளை தயாரிப்பது மற்றும் வீட்டு மின் உபகரணங்களை கையாளுவதையும் கற்றுக்கொள்ள முடிந்ததாகவும் தெரிவித்தார்.
'ஒருதடவை சலவை இயந்திரம் உடைந்துவிட்டது. மிகவும் பதற்றப்பட்டேன். வீட்டார் ஏசினார்கள். பின்னர் வீட்டார் இல்லாத சந்தர்ப்பத்தில் அந்த சலவை இயந்திரக்கோளாறை நானே சரி செய்தேன். அதேபோன்று மற்றுமொரு தடவை சலவை செய்த துணிகளை நேர்த்தியாக்க ஐரன் பாக்ஸை(சலவை பெட்டி) பயன்படுத்திபோது திடீரென வேலை செய்யவில்லை. அதையும் நானாகவே சரிசெய்தேன். இவ்வாறு 2 வருட அனுபவத்தோடு நாடு திரும்பினேன்' என்றார்.
2011 ஆம் ஆண்டு இவரது 44 ஆவது வயதில் மீண்டும் குவைத் நாட்டுக்கு கொழும்பிலுள்ள முகவர் நிலையத்தின் ஊடாக பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். இரண்டாவது முறை என்பதால் மீண்டும் பயிற்சி பெறவில்லை. குவைத்தில் 2 வருடம் என்ற ஒப்பந்தகாலத்துக்கு மேலதிகமாக 8 மாதங்கள் எஜமானின் பேரக்குழந்தைக்காக அங்கு வேலை செய்துள்ளார்.
வேலைப்பளு நினைத்ததை விட அதிகம் என்றாலும் இவருடைய துடிப்புத்தனம் அவர்களை கவர்ந்ததால் பூரண ஒத்துழைப்பை வீட்டார் வழங்கியுள்ளனர்.
எஜமானின் பேரக்குழந்தை, பிறந்த காலம் தொட்டு இவரே பராமரித்ததால் இவரிடம் குழந்தை(தலால்) அலாதி பிரியம் கொண்டுள்ளது. இவர் நாட்டுக்கு புறப்பட்டவேளை குழந்தை காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இவரையே குழந்தை தேடியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வீட்டார் இவரை மேலதிகமாக 8 மாதங்கள் தங்க வைக்க ஏற்பாடு செய்ததுடன் குழந்தையின் நினைவுக்காக தனது ஆடைகளை அங்கேயே வைத்துவிட்டு வந்ததாகவும் தன்னுடைய பேரக்குழந்தைக்கும் 'தலால்' என்றே பெயர் வைத்ததாகவும் தெரிவித்தார்.
இதுபோன்று திறன்சார்ந்த பயிற்சிகளைப்பெற்று பல பெண்கள் வெளிநாடு சென்றுவருகின்ற நிலையில் சில பெண்கள் கடவுச்சீட்டைத்தவிர வேறு எந்தவித ஆவணம் மற்றும் தொழில் தொடர்பான அறிவுமின்றி தன்னுடன் தொடர்பு கொண்ட முகவர் நிலையங்களை நம்பிச் சென்று சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின்படி கடந்த 2022 ஆம் ஆண்டு 11 பேர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில் நாடு திரும்பியுள்ளனர். அதேவேளை இவ்வாண்டில் மாத்திரம் குவைத்துக்கு சட்டவிரோதமாக பணிப்பெண்களாகச் சென்று நிர்கதியான 59 பேர் இலங்கை தூதரகத்தினால் கடந்த ஜூலை மாதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டு மொத்தமாக 3 இலட்சத்து 11ஆயிரத்து 56 பேர் பல்வேறு நாடுகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில், கடந்தாண்டு 74,007 பெண்கள் 27 நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரியான சந்தருவன் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு 35 சதவீதமான பெண்களும் 2022இல் 40 சதவீதமான பெண்களும் 2023இல் இதுவரையான காலப்பகுதிக்குள் 43 சதவீதமான பெண்களும் மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப் பெண்களாக சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
'குடும்ப சுமை என்பதற்காக சரியான திறன் பயிற்சிகளை பெற்றுக்கொள்ளாமல் வெளிநாடு சென்றதால் வாழ்வின் சுவாரஸ்யமான காலங்களை சுயநினைவின்றி கடத்தி விட்டேன் என்ற மனோன்மணியின் கூற்று மக்களின் சிந்தைக்கானது'.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM