கோஹ்லி, ராகுல்  அதிரடி : யாதவ் 5 விக்கெட் குவியல் : பாகிஸ்தானை 228 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

12 Sep, 2023 | 05:16 AM
image

(நெவில் அன்தனி)


கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இருப்பு நாளான (Reseve Day) இன்றைய தினம் தொடர்ந்து நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 228 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் மிகவும் அவசியமான 2 புள்ளிகளை இந்தியா ஈட்டிக்கொண்டது.

இந்தியாவின் வெற்றியில் முன்வரிசை வீரர்களான விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களும் குல்தீப் யாதவ்வின் துல்லியமான பந்துவீச்சம் பிரதான பங்காற்றியிருந்தன.


அவற்றைவிட பாகிஸ்தானின் மோசமான களத்தடுப்பும் இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியிருந்ததை இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.


இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 357 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 32 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படு தோல்வி அடைந்தது.


இந்தத் தோல்வியினால் பாகிஸ்தானின் நிகர ஓட்ட வேகம் 2 வெற்றிப் புள்ளிகளுடன் -1.892 ஆகவும் பங்களாதேஷின் நிகர ஓட்ட வேகம் புள்ளியின்றி -0.749 ஆகவும் இருக்கிறது.


அணிகள் நிலையில் 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவின் நிகர ஓட்ட வேகம் 4.560 ஆகவும் 2 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கும் இலங்கையின் நிகர ஓட்ட வேகம் 0.420 ஆகவும் அமைந்துள்ளது.


பாகிஸ்தான் 11 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இரவு 8.08 மணியளவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.


இமாம் உல் ஹக் (9), அணித் தலைவர் பாபர் அஸாம் (10) ஆகிய இருவரே ஆட்டம் தடைப்படுவதற்கு முன்னர் ஆட்டம் இழந்தவர்களாவர்.

மழை ஓய்ந்த பின்னர் இரவு 9.18 மணிக்கு தொடர்ந்த போட்டியில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டதால் பாகிஸ்தானினால் சிறப்பாக துடுப்பெடுத்தாட முடியாமல் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது.


ஆட்டம் தொடர்ந்தபோது மொத்த எண்ணிக்கை 47 ஓட்டங்களாக இருக்கையில் மொஹமத் ரிஸ்வான் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.


ஆரம்ப வீரர் பக்கார் ஸமானும் அகா ஸல்மானும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி வீழ்ச்சியை சீர் செய்ய முயற்சித்தனர்.


ஆனால், மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 30 ஓட்டங்கள் சேர்ந்தபோது மிக முக்கிய வீரரான பக்கார் ஸமான் 27 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.


மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த அகா சல்மான் 3ஆவது மத்தியஸ்தரின் ஆய்வுக்குப் பின்னர் கள மத்தியஸ்தரின் தீர்ப்புக்கு அமைய 23 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.


அவரைத் தொடர்ந்து ஷதாப் கான் (6) ஒற்றை இலக்க எண்ணிக்கையுடனும் சற்று நேரத்தில் இப்திகார் அஹ்மத் 23 ஓட்டங்களுடனும் பாஹீம் அஷ்ரப் (4) ஆட்டம் இழந்தனர். (128 - 8 விக்.)


பக்கார் ஸமான், அகா சல்மான், ஷதாப் கான், இப்திகார் அஹ்மத், பாஹீம் அஷ்ரப் ஆகிய ஐவரையும் குல்தீப் யாதவ் தொடர்ச்சியாக ஆட்டம் இழக்கச் செய்தமை விசேட அம்சமாகும்.


உபாதைக்குள்ளான நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் ஆகிய இருவரும் துடுப்பெடுத்தாடாததால் பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்ததாக தீர்மானிக்கப்பட்டது.


பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 8 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பதிவு செய்த 2ஆவது 5 விக்கெட் குவியல் இதுவாகும்.


முன்னதாக இருப்பு நாளான திங்கட்கிழமை (11) தனது இன்னிங்ஸை 24.1 ஓவர்களில், 2 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் மேலதிக விக்கெட் இழப்பின்றி 356 ஓட்டங்களைக் குவித்தது.


இருப்பு நாளன்றும் மழை காரணமாக 80 நிமிடங்கள் தாமதித்தே ஆட்டம் ஆரம்பமானது.


விராத் கோஹ்லி, கே.எல். ராகுல் ஆகிய இருவரும் ஆட்டம் இழக்காமல் அதிரடியாக சதங்களை விளாசியதுடன் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 233 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டிருந்தனர்.

விராத் கோஹ்லி 94 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 122 ஓட்டங்களுடனும் கே.எல் ராகுல் 106 பந்துகளில் 12 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 111 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.


இதனிடையே விராத் கோஹ்லி தனது 47ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 13,000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த வீரர் என்ற சாதனைக்கு உரித்தானார். அவருக்கு இந்த இலக்கை அடைவதற்கு 267 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டது.


இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்களில் 13000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்து முன்னைய சாதனையாளராக இருந்தார்.


கே.எல். ராகுல் தனது 6ஆவது சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் 14ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது 2000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.


போட்டி அட்டவணையில் திட்டமிடப்பட்டவாறு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப் போட்டி பிற்பகல் 4.52 மணிக்கு பெய்த கடும் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அப்போது இந்தியா 2 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


ஷுப்மான் கில் 58 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இந்தியா தனது 2ஆவது சுப்பர் 4 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையை செவ்வாய்க்கிழமை (12) எதிர்த்தாடவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00
news-image

கடைசி ஒருநாள்  போட்டியில்  சாமிக்க அபாரம்,...

2026-07-09 23:55:06
news-image

மீண்டும் ஒரு உலகக் கிண்ண நொக்...

2026-07-09 15:54:14
news-image

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ,...

2026-07-08 22:49:01
news-image

ஐசிசி இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக...

2026-07-08 22:06:14
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் இந்தியாவுக்கு...

2026-07-08 17:29:14
news-image

கொலம்பியாவை பெனல்டிகளில் வென்ற சுவிட்ஸர்லாந்து 72...

2026-07-08 14:14:11
news-image

இரண்டாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு; தொடரைக்...

2026-07-08 14:42:55
news-image

உபாதையீடு நேர வெற்றி கோலின் மூலம்...

2026-07-08 04:39:12