நல்லூர் ஆலய மாம்பழ திருவிழாவில் 'குட்டி முருகனாக' பலர் கவனத்தை ஈர்த்த குழந்தை! 

11 Sep, 2023 | 05:26 PM
image

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த குழந்தையின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (11) காலை மாம்பழ திருவிழா நடைபெற்றது. 

சிவபெருமான், உமாதேவியார் இருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு போட்டியொன்றை வைத்து,  முதலில் உலகை சுற்றி வருபவர்களுக்கு ஞானப்பழத்தை தருவதாக முடிவு செய்தனர். 

முருகப்பெருமான் மயில் மீதேறி உலகை சுற்றிவர சென்றபோது, பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றிவந்து 'நீங்களே என் உலகம்' என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.

உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் அவர், கோபமடைந்து ஆண்டிக் கோலத்தில் பழனி மலைக்குச் சென்றமர்ந்தார்.

இந்த புராண கதையை மையமாக வைத்தே மாம்பழ திருவிழா நடைபெறுகிறது. 

இன்றைய தினம் நல்லூர் ஆலயத்தில் மாம்பழ திருவிழா நடைபெற்றபோது, சிறு குழந்தை ஒன்றுக்கு அதன் பெற்றோர் பழனி முருகனின் ஆண்டிக் கோலத்தில் உடையணிவித்து, ஆலயத்துக்கு அழைத்து வந்திருந்தனர். 

அந்த குழந்தையின் மழலைச் செயல்கள் அங்கிருந்த பலரின் கவனத்தை ஈர்த்தன. 

சின்னஞ்சிறு ‍முருகன் போல் மாம்பழம் சாப்பிடுவதும் குறும்புத்தனத்தை வெளிப்படுத்துவதுமாக இருந்த அந்த குழந்தை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்