'தலைவர் 171' அப்டேட்

11 Sep, 2023 | 01:14 PM
image

'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றிக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'தலைவர் 171' படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரான திரைப்படங்கள் வசூல் ரீதியாக பிரம்மாண்ட வெற்றியை பெறுவது தொடர்ச்சியாக உறுதியாகி வருவதால் அவரது இயக்கத்தில் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இந்திய திரையுலகினரிடம் இருந்தது. 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைகிறார். 'தலைவர் 171' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும், சிறந்த சண்டை பயிற்சிக்காக தேசிய விருதினை பெற்ற அன்பறிவ் சண்டை காட்சிகளை அமைக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

'ஜெயிலர்' படத்தின் வெற்றியை சொகுசு வாகனங்களை கொடுத்து படத்தில் பணியாற்றிய கலைஞர்களை உற்சாகப்படுத்தி வரும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், தற்போது 'தலைவர் 171' படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருப்பதால், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே 'ஜெய் பீம்' புகழ் இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் தொடக்க விழா இம்மாத இறுதியில் நடைபெறும் என அவதானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right