சி.அ.யோதிலிங்கம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத் தொடர் திங்கட்கிழமை 11ஆம் திகதி ஆரம்பமாக இருக்கிறது. அதற்கு முன்னரே மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் போர்க்குற்றம் தொடர்பாக புதிய விடயங்கள் பெரிதாக இல்லை. பழைய விடயங்கள் தான். இலங்கை அரசின் மீது அழுத்தமும் பெரியளவுக்கு பிரயோகிக்கப்பட்டுள்ளது எனக் கூற முடியாது. அதிருப்திகள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதிலும் போர்க்குற்ற விவகாரங்கள் ஒரு பகுதி தான். தென்னிலங்கையின் ஏனைய மனித உரிமை விவகாரங்களான உயிர்த்தஞாயிறு, அதிகார துஷ்பிரயோகம், ஊழல் என்பன பற்றியே அதிகம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. போர்க்குற்ற விவகாரத்தை இலங்கை விவகாரத்தின் சிறிய பகுதியாக்குதல் என்பதில் மேற்குலக சக்திகள் கவனமாக இருக்கின்றன என்பதையே இவை வெளிக்காட்டுகின்றன. அதாவது சிறுப்பித்துக் காட்டல் என்ற தத்திரோபாயம் இங்கு பின்பற்றுப்படுகின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.
யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களாகியும் உண்மை வெளிக்கொணரப்பட்டு, நீதி கிடைக்காததினால் பாதிக்கப்பட்டவர்கள் வேதனைப்படுகின்றனர். எந்தவொரு நிலைமாறுகால நீதிச் செயன்முறையும் வெற்றியடைவதற்கு உண்மையான முயற்சிகளினால் அடித்தளம் அமைக்கப்படல் வேண்டும். அதற்கான அரசியல் விருப்புத்தேவை, அரசியல் போராட்டம் சிறந்த நிர்வாகத்தையும் சகலரையும் உள்ளடக்கிய தொலைநோக்கையும் கோரியிருந்தது. அதாவது சமூக ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் கோரியுள்ளது. என்கின்ற விடயங்களே கூறப்பட்டுள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கையை விட சனல்–-4 அறிக்கை தான் இலங்கையின் அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. சுருங்கக் கூறின் ஆணையாளரின் அறிக்கையை விட சனல்-–4 மேல் நிற்கின்றது எனலாம். முன்னைய அறிக்கைகளுடன் ஒப்பிடும் போது இது காரம் குறைந்தது தான்.
முன்னைய அறிக்கை குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல், நாடுகள் தங்கள் நீதிமன்றங்களில் விசாரித்தல் போன்ற விடயங்களையும் உள்ளடக்கியிருந்தன. அவை எதுவும் புது அறிக்கையில் இல்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று தான். அந்த வகையில் சர்வதேச அரசியலுக்கு அது கட்டுப்பட்டதுதான். சர்வதேச அரசியல் தூக்கச் சொன்னால் தூக்கும். இறக்கச் சொன்னால் இறக்கும். என்ற நிலையிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளது.
குறிப்பாக மேற்குலகின் நலன்களைத்தான் அது அதிகம் உயர்த்திப்பிடிக்கும். உக்ரேன் விவகாரத்தை உயர்த்திப்பிடிக்கின்ற மனித உரிமைகள் பேரவை தமிழர் விவகாரத்தை தாழ்த்திப் பிடிக்கும். உக்ரேன் விவகாரம் உடனடியாகவே குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது. தமிழர் இன அழிப்பு பராமுகமாக உள்ளது.
தமிழ் இன அழிப்பு விவகாரத்தை அது கிடப்பிலும் போடாது, மேலேயும் தூக்காது என்பதே இன்றைய நிலை. இங்கு தமிழ் மக்களுக்கு சாதகமான விடயம் மனித உரிமைகள் பேரவை போர்க்குற்ற விவகாரக்கோவையை மூடாது என்பதே. இலங்கைத் தீவில் புவிசார் அரசியலும், பூகோள அரசியலும் இருக்கும் வரை கோவையை அது மூடப்போவதில்லை. தேவைக்கேற்ப அதனை பயன்படுத்தவே பார்க்கும். மறுபக்கத்தில் இலங்கை மீதான இந்திய நலன்களை மீறியும் அது செயற்படப்போவதில்லை. எதிலும் பிராந்தியக் குறுக்கீடு என்பது தமிழ் மக்களின் தலைவிதி.
உக்ரேன் விவகாரத்தில் இவ்வாறான பிராந்திய வல்லரசுக் குறுக்கீடு இருக்கவில்லை. அதனால் நினைத்ததைச் செய்யும் சூழல் மேற்குலகிற்கு இருந்தது. அங்கு அனைத்தையும் செய்ய முடிந்த மேற்குலகிற்கு இங்கு அனைத்தையும் செய்ய முடியாது. கவிஞர் சேரன் தனது கவிதையில் குறிப்பிட்டது போல 'இந்தியாவின் நுனியில் இலங்கையை ஏன் வைத்தாய்' என கேட்பதைத்தவிர வேறு தெரிவில்லை.
ரணில் மேற்குலகின் மிகப்பெரிய சொத்து. அவரைப் போல மேற்குலக விசுவாசியை இலங்கையில் காண முடியாது. எனவே, ரணில் அரசாங்கத்தை பலவீனப்படுத்த அவை என்றைக்கும் விரும்பப்போவதில்லை.
தென்னிலங்கை விவகாரத்தில் கூட ரணிலின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்குலகம் கண்டுகொள்ளப்போவதில்லை. ராஜபக் ஷர்கள் இலங்கையின் பொருளாதாரத்தை வங்குரோத்து அடையச் செய்தார்கள் என்றால் ரணில் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களையே இல்லாமல் செய்கின்றார். அவர் தேர்தல் எவற்றையும் நடத்த மாட்டார். அது தொடர்பான உயர்நீதிமன்றக் கட்டளைகளையும் மதிக்க மாட்டார், அரசியல் யாப்பு ஏற்பாடுகளை தான் நினைத்தவாறு மீறுவார். ஜனநாயகப் போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவார். இவை எவற்றையும் மேற்குலகம் கண்டுகொள்ளப் போவதில்லை.
ரணில் இல்லையென்றால் 'இந்தோ பசுபிக்' மூலோபாயத்திட்டத்தை ஒரு சிறிது கூட மேற்குலகத்தால் நகர்த்த முடியாது. சீனா மாத்திரமல்ல பெருந்தேசிய வாதமும் 'இந்தோ பசுபிக்' திட்டத்திற்கு சாதகமாக இல்லை. பெருந்தேசிய வாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்கின்ற தூண்களினால் கட்டியெழுப்பப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.
கள யதார்த்தம் காரணமாக சீனாவின் 'பட்டுப் பாதை' திட்டத்திற்கு ரணில் குறிப்பிட்டளவு இடம் கொடுப்பார். அதனை மேற்குலகம் குறிப்பிட்ட நிலை வரை சகித்துக் கொள்ளும்.
ஆனால், மேல்நிலை பெறுவதை எப்படியும் தடுக்கவே பார்க்கும். இந்தியாவைப் போல இலங்கைத் தீவில் தேசிய பாதுகாப்பு பிரச்சினை மேற்குலகத்திற்கு குறைவு. சீனா ஆதிக்கம் தொடர்பாக இந்தியா கொஞ்சம் பாயும் தான். ஆனால் சோடா போத்தல் கேஸ் போல உடனேயே அடங்கிவிடும். சீனக்கப்பல் விவகாரத்தில் அடங்கினது போல.
இலங்கைத்தீவின் கள யதார்த்தமும், சீன வர்த்தக நலன்களும். எல்லை விவகாரங்களும் இந்தியாவை எப்போதும் கட்டியே வைத்திருக்கும். இதனால் நேரடி நடவடிக்கைகளை விட மறைமுக நடவடிக்கைகளிலேயே இந்தியா அதிக கவனம் செலுத்தும். மறைமுக நெருக்கடிகளையே கொடுக்கும். இலங்கைத்தீவில் பிடுங்கக்கூடியவற்றை பிடுங்க பார்க்கும். தன்னால் முடிந்தளவு இலங்கைத்தீவின் பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கப் பார்க்கும். இதைத்தவிர வேறு எதையும் இப்போதைக்கு செய்யப்போவதில்லை.
ரணில் உள்ளூர் சட்ட ஒழுங்குகளை மாத்திரமல்ல சர்வதேச சட்ட ஒழுங்குகளையும் தான் நினைத்தபடி மீறுவார். பிராந்திய சர்வதேச சக்திகள் இதனை வேடிக்கையே பார்க்கும். இலங்கை ஆட்சியாளர்கள் முதலில் தமிழ் மக்கள் சார்பான சட்ட ஒழுங்குகளையே மீறினர். பின்னர் இலங்கைத்தீவின் முழு மக்களுக்குமான சட்ட ஒழுங்கை மீறினர்.
தற்போது சர்வதேசமட்ட ஒழுங்குகளையும் மீறுகின்றனர். நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் சர்வதேச சட்ட அந்தஸ்தை பெற்றவை. இலங்கை, தான் நினைத்த மாதிரி அதனை மீறுகிறது. இலங்கை –- இந்திய ஒப்பந்தத்தை மீறுகின்றது. இந்தியாவுடனான துறைமுக ஒப்பந்தத்தை மீறுகிறது. ஜெனிவா வாக்குறுதிகளை மீறுகிறது. வல்லரசுகள் இவற்றை வேடிக்கை பார்க்கின்றனவே தவிர எவற்றையும் செய்வதில்லை.
வல்லரசுகள் நேரடிப்போரில் இறங்கும் நிலை தற்போது இல்லை. அல்லது மிகக்குறைவு எனக் கூறலாம். அனைத்துமே மறைமுகப் போர் தான். அதாவது இராஜதந்திர போர் தான். தமிழ்த்தரப்பு இதனையும் புரிந்து கொள்வது அவசியமானது
சீன– - இந்திய முரண்பாடு முழுமையான பகை நிலைக்கு செல்லாது. அதேவேளை முழுமையான நட்பு நிலைக்கும் செல்லாது. முழுமையான பகைக்கு வர்த்தகப்பாதுகாப்பு, எல்லை நலன்கள் விடாது. முழுமையான நட்பு நிலைக்கு செல்வதற்கு புவிசார் அரசியல் நலன்கள் விடாது. அதனால் நட்புமற்ற, பகையுமற்ற அரசியல் அணுகுமுறையினையே இந்தியா பின்பற்றும். இதனால் தான் 'குவாட்' அமைப்பில் பங்கு வகிக்கின்ற அதே வேளை 'பிறிக்ஸ்' அமைப்பிலும் பங்காளியாகின்றது. சீனாவின் மேலாதிக்கத்தை சமநிலைப்படுத்த ‘குவாட்' அமைப்பு தேவை.
அதேவேளை பொருளாதார நலன்களுக்கும் சர்வதேச பூகோள நலன்களுக்கும் 'பிறிக்ஸ்'அமைப்பு அதற்கு தேவை.
உக்ரேன் போரினால் மேற்குலக பொருளாதாரம் பலவீனப்பட்டது. மாறாக, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. ரஷ்யாவிடம் குறைந்த விலையில் எரிபொருட்களை வாங்கி கூடிய விலையில் சர்வதேச சந்தைகளில் விற்கவெல்லாம் அதனால் முடிந்தது. இந்தியாவில் மேற்குலக நலன்கள் நிரம்பிக் கிடப்பதால் இந்தியா மீது நெருக்கடிகள் எவற்றையும் அவை கொடுக்கப்போவதில்லை.
தமிழ்த்தரப்பு இந்தப் புதிய சூழலை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கு சாதகமான வெளிகள் இச்சூழலில் இருக்கின்றன. அவற்றை முதலில் அடையாளம் காண வேண்டும். பின்னர் தகுந்த மூலோபாய, தந்திரோபாய திட்டங்களுடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இலங்கைத்தீவை மையமாகக் கொண்ட புவிசார் அரசியல் ஒரு சாதகமான வெளி. ஜெனிவா, கோவையை மூடாது என்பது சாதகமான வெளி. பொருளாதார நெருக்கடி சாதகமான வெளி. அதே போல பெருந்தேசியவாதமும் சாதகமான வெளி தான். இந்த வெளிகளை ஒருங்கிணைத்து எவ்வாறு முன்னேறுவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
இங்கேயுள்ள பிரதான பிரச்சினை யார் முன்னெடுப்பது என்பது? இன்று இதனை முன்னெடுக்கும் ஆற்றல் தனித்தரப்புகளிடம் இல்லை. எனவே உடனடியாக ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும். அதனூடாக விவகாரங்களை கையாள முயல வேண்டும். தனித்தனியான அணுகுமுறைகளை சர்வதேச அரசியல் கணக்கெடுப்பதில்லை.
பேரம் பேசும் பலத்தையும் தனித்த செயற்பாடுகளினால் உருவாக்க முடியாது. தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை பலவீனப்படுத்துவதற்காக சர்வதேச தரப்புகள் ஒருங்கிணைவு அரசியலை விரும்ப மாட்டாது. எனினும் நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.
இந்தியக் குறுக்கீடு, சிங்களத்தை தாஜா பண்ண வேண்டிய நிலையில் வல்லரசுகள் இருத்தல், அரசுகளுக்கிடையேயான உறவுகள் என்பன பாதகமான நிலை தான். சாதகமான வெளிகளைக் கொண்டு பாதகமான நிலைகளுக்கு முகம் கொடுக்கத் தயாராக வேண்டும்.
சனல் - 4 எழுப்பியுள்ள புதிய அலை தமிழ்த்தரப்பிற்கு மேலும் சாதகமான வெளிகளைத் திறந்து விடலாம். இங்கே ஒரே கல்லில் பல மாங்காய்களை விழுத்தும் திட்டம் இருப்பது போலத் தெரிகிறது. ராஜபக் ஷர்களை கட்டுப்படுத்துதல், சீன மேலாதிக்கத்தை கட்டுப் படுத்துதல் பெருந்தேசிய வாதத்தைக் கட்டுப்படுத்துதல் என்கின்ற மூன்று முக்கிய மாங்காய்கள் முக்கிய இலக்காக இருப்பது போலத் தெரிகிறது. ராஜபக் ஷர்கள் பெருந்தேசியவாதத்திற்குள்ளும், சீன அரணுக்குள்ளும் பாதுகாப்பு தேடுவதை மேற்குலகம் அனுமதிக்கப்போவதில்லை.
தற்போது தென்னிலங்கை, சனல் - 4 விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கும் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இது தமிழ் மக்களுக்கு சாதகமான விடயம். போர்க்குற்ற விவகாரம் சர்வதேச விசாரணைக்கு செல்வதையும் இது சாத்தியப்படுத்தப் பார்க்கும். ராஜபக் ஷர்கள், பெரும்தேசியவாதம், சீன மேலாதிக்கம் போன்ற இம்மூன்று பெரும் தூண்களை கட்டுப்படுத்தப்படாமல் 'இந்தோ –பசுபிக் மூலோபாயத்திட்டம்' ஒரு அடி கூட நகர முடியாது.
இன்னும் என்னென்ன அதிசயங்கள் நிகழப்போகின்றதோ?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM