சிவலிங்கம் சிவகுமாரன்
சனல் – 4 தொலைக்காட்சி அலைவரிசையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆவணப்படம் குறித்த விமர்சனங்களில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகி யோரின் விளக்கங்கள் முக்கியமானவை.
2005 ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ஷ குடும்பத்தினரின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காகக் கொண்ட முயற்சியின் ஒரு தொடர்ச்சியே சனல்–4 இன் சமீபத்திய ஆவணப்படம் என கோட்டாபய ஒரு நீண்ட விளக்கத்தை வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் இதே அலைவரிசை 2011 ஆம் ஆண்டு இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை வெளியிட்ட போது அவரது கருத்து வேறுமாதிரியானதாகவே இருந்தது. அதே போன்று தேர்தலையும் அரசியலையும் மையமாக வைத்து இந்த விவகாரம் முன்னெடுக்கப்படுமானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான உண்மையான சூத்திரதாரியை எப்போதும் கண்டு பிடிக்க முடியாது என நாமல் ராஜபக்ஷ கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ராஜபக்ஷ குடும்பத்தினரின் குடும்ப பாரம்பரியத்தை அழிப்பதிலும் இதை அரசியல்மயமாக்குவதிலும் சனல்– 4 அலைவரிசைக்கு என்ன இலாபம்? புலம்பெயர்ந்த தமிழர்கள், புலிகளுக்கு ஆதரவானவர்கள் பணம் கொடுத்து இந்த அலைவரிசையை இயக்குகின்றார்கள் என்ற புதிய விளக்கம் ராஜபக்ஷ முகாம்களிலிருந்து வருவதற்கு முன்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அதை இலகுவாக்கி விட்டார். இந்த அலைவரிசை புலம்பெயர் அமைப்புகளுக்கு ஆதரவானது என்று அவரே கருத்து வெளியிட்டு விட்டார். அது உண்மையா?
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சனல் –4 (Channel–4) தொலைக்காட்சி அலைவரிசையானது கடந்த 41 வருடங்களாக இயங்கி வருகின்றது. இதன் சகோதர அலைவரிசைகளாக பத்து அலைவரிசைகள் இயங்கி வருகின்றன. Channel Four Television Corporation என்ற நிறுவனம் மேற்படி அலைவரிசைகளின் உரிமத்தைக் கொண்டுள்ளது.
ஆரம்ப காலகட்டங்களில் இதன் தலைமைத்துவத்தை மிகப் பிரபலமானவர்கள் அலங்கரித்துள்ளனர். சனல் –4 அலைவரிசையின் இரண்டாவது தலைவராக 1987–1992 காலகட்டத்தில் இருந்தவர் பிரபல ஹொலிவூட் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளரான ரிச்சர்ட் அட்டன்பரோ. இவரே காந்தி (1982) படத்தை தயாரித்து இயக்கியவர். இதற்காக சிறந்த இயக்குநருக்குரிய ஒஸ்கார் விருதை அவர் பெற்றது மாத்திரமல்லாது சிறந்த திரைப்படத்துக்குரிய விருதையும் காந்தி வென்றது.
ஆகவே, சனல்–4 தொலைக்காட்சிக்கு ஒரு வரலாறு உள்ளது. எந்த நாட்டையும் நாட்டின் தலைவரையும் தனிப்பட்ட ரீதியாக தனது அலைவரிசையினூடாக தாக்குவதற்கு அதற்கு எந்த அவசியமுமில்லை. ஆனால், இலங்கை தொடர்பாக இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டதன் மூலம் அது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. முதலாவது 2011 ஆம் ஆண்டு அது வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் (Sri Lanka’s Killings Field) அடுத்ததாக தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தும் ஆவணப்படம்.
இந்த இரண்டு ஆவணத் தொகுப்புகளுமே இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான போர்க்குற்றங்கள், மனித படுகொலைகளகள் தொடர்பானவை. இரண்டு சம்பவங்களின் பின்னணியிலும் ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் அவர்கள் சார்பாக இயங்கிய இராணுவ அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களின் பெயர்களே அடிபடுகின்றன.
போர்க்குற்றச் சம்பவங்கள் மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் இரண்டிலுமே கொல்லப்பட்டவர்கள் நாட்டின் சிறுபான்மை சமூகத்தினர். அதன் காரணமாகவே அது குறித்து சிங்கள மக்களிடையே எந்த பிரதிபலிப்புகளும் எழவில்லை. ஆனால் இப்போது அரசியலுக்காக சிலர் இது குறித்து பேச ஆரம்பித்திருப்பது முரண்நகையாக உள்ள அதே நேரம் சில சிங்கள அரசியல் கட்சி தலைவர்களின் உள்நோக்கமும் இப்போது வெளிவந்துள்ளது.
முக்கியமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என கோரியிருக்கின்றனர். ஆனால் இதே சனல்– 4 அலைவரிசை இதற்கு முன்பதாக வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் பற்றி ஏன் இவர்கள் வாய் திறக்கவில்லை?
நாமல் ராஜபக் ஷ கூறியதில் சில உண்மைகள் இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த ஆவணப்படம் வெளிவந்த பிறகு ஒரு சிலர் வெளியிட்டு வரும் கருத்துகள் அரசியல் சார்ந்ததாகவே இருக்கின்றன. இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற ஆயிரக்கணக்கான மக்களின் மரணம், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றிய தெளிவான தகவல்களை ஒளிப்படங்களுடன் சனல்–4 வெளியிட்டிருந்தது.
அந்நேரம் ராஜபக் ஷ வினர் மிகப்பலமாக இருந்தனர். மஹிந்த ராஜபக் ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். அவரது சகோதரர் கோட்டாபய தொடர்ந்தும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். 2009 போர் வெற்றி கோஷங்களை முன்வைத்தே மஹிந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். அந்த வெற்றி மயக்கங்களில் சிங்கள பெளத்த மக்கள் பல ஆண்டுகள் மயங்கிக் கிடந்தனர்.
ஆகவே 2011 ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படத்தின் காட்சிகள் போலியானவை என மக்களை நம்ப வைக்க ராஜபக் ஷவினர் அதிக பிரயாசை எடுக்கவில்லை. கொல்லப்பட்டவர்கள் அனைவருமே புலி பயங்கரவாதிகள் என்ற கதைகளை சிங்கள பெளத்த மக்கள் ஏற்றுக்கொண்டனர். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனின் கொடூர மரணத்தையும் ‘குட்டிப் புலி பயங்கரவாதியின் முடிவு’ என்றே சில சிங்கள பத்திரிகைகள் வர்ணித்திருந்தன.
எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையில் ஒரு தீவிரவாத தாக்குதலாகும். ஆனால், கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மக்கள். இதன் சூத்திரதாரிகளும் பின்னணியும் ஏன் கடந்த நான்கு வருடங்களாக ஆராயப்படாமலுள்ளது என்ற சந்தேகம் இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் மனதிலும் உள்ளது. சனல்–4 அலைவரிசையின் ஆவணப்பட தகவல்களிலிருந்து ராஜபக் ஷவினர் என்ன நியாயப்படுத்தல்களை கூறி தப்பிக் கொள்ளப் போகின்றனர் என்பது பெரியதோர் வினா.அவர்களுக்கு இதில் சம்பந்தமில்லையென்றால் பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக் ஷ ஏன் உரிய விசாரணைகளுக்கு உத்தரவிடவில்லை?
இந்த ஆவணப்படம் குறித்து பேசி வரும் அரசியல் பிரமுகர்கள் இனங்களுக்கிடையே மீண்டும் முறுகலை ஏற்படுத்தும் வண்ணமே கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என்பதுவும் முக்கிய விடயம். பொது மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கொன் பாராளுமன்றில் ஆற்றியிருந்த உரை அதற்கு சான்று பகர்கின்றது.
இஸ்லாமிய ராஜ்யத்தை உருவாக்குவதற்காகவே இந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதாக அவர் தெரிவித்திருந்தார். அதற்கான ஆதாரங்களாக சில சம்பவங்களை அவர் கோடிட்டு காட்டினார். இது முஸ்லிம் மக்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டக் கூடிய விடயமாகும். இலங்கையின் சனத்தொகையில் 70 வீதத்துக்கும் மேற்பட்டோர் சிங்கள பெளத்தர்களாவர். முஸ்லிம்களின் சதவீதம் கிட்டத்தட்ட 10 வீதமாகும். இப்படியான ஒரு நாட்டில் எவ்வாறு இஸ்லாமிய இராஜ்யம் ஒன்று அமையும்?
இந்த ஆவணப்பட விவகாரத்தை ஜனாதிபதி ரணில் எவ்வாறு கையாளப்போகின்றார்? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உட்பட பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சர்வதேச சுயாதீன விசாரணைகளை கோரியுள்ளனர். அவ்வாறு இடம்பெறுமாயின் முன்னதாக இந்த அலைவரிசை வெளியிட்ட ஆவணப்படத்தை அடிப்படையாகக்கொண்டு தமிழர்களின் படுகொலைக்கும் சர்வதேச விசாரணையின் தேவைபற்றி பேசப்படும். இதை அன்றைய தினம் சார்ள்ஸ் நிமலநாதன் எம்.பி. பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றியும் சர்வதேச விசாரணை செய்யப்பட வேண்டும் என்று ரணில் விரும்பினால் அது இராணுவத்தை காட்டிக்கொடுப்பதற்கு சமம் என மக்களையும் தூண்டி விடுவர். அது ரணிலின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வியூகங்களை பாதிக்கும்.
சனல்–4 அலைவரிசையின் இரண்டு ஆவணப்படங்கள் குறித்தும் சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. எமது நாட்டு மக்களின் ஞாபக மறதிகள் தான் அரசியல்வாதிகளின் பலமே. அடுத்த தேர்தல் ஒன்று வரும் போது இந்த ஆவணப்படங்களைப் பற்றி நாட்டில் பலரும் மறந்திருப்பர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM