சுப்பர் 4: பங்களாதேஷை 21 ஓட்டங்களால் வீழ்த்தியது இலங்கை : இலங்கைக்கு 13ஆவது தொடர்ச்சியான வெற்றி

09 Sep, 2023 | 11:56 PM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சனிக்கிழமை (09) நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்று இரண்டாவது போட்டியில் 21 ஓட்டங்களால் இலங்கை மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை 13ஆவது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவுசெய்தது.

அவுஸ்திரேலியா 21 தொடர்ச்சியான வெற்றிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் இலங்கை 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தென் ஆபிரிக்காவும் பாகிஸ்தானும் தலா 12 தொடர்ச்சியான வெற்றிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கின்றன.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 258 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 257  ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

லாகூரில் நடைபெற்ற முதலாவது சுப்பர் 4 போட்டியிலும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்த பங்களாதேஷ், ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெரும்பாலும் இழந்துள்ளது.

இலங்கையின் வெற்றியில் சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ் ஆகியோரின் அரைச் சதங்கள், தசுன் ஷானக்க, மதீஷ பத்திரண ஆகியோரின் திறமையான பந்துவீச்சுக்கள் என்பன முக்கிய பங்காற்றின.

பங்களாதேஷ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது மெஹிதி ஹசன் மிராஸ், மொஹமத் நய்ம் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மெஹிதி ஹசன் மிராஸ் (28), மொஹமத் நய்ம் (21), ஷக்கிப் அல் ஹசன் (3), லிட்டன் தாஸ் (15) ஆகிய நால்வரும் களம் விட்டு வெளியேறியது பங்களாதேஷுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. (83 - 4 விக்.)

எனினும் முஷ்பிக்குர் ரஹிம், தௌஹித் ஹ்ரிடோய் ஆகிய இருவரும் 112 பந்துகளைத் தாக்குப்பிடித்து 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தசுஷ் ஷானக்க இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். (155 - 5 விக்.)

தசுன் ஷானக்கவின் பந்துவீச்சில் கசுன் ராஜித்த எடுத்த அபார பிடி மூலம் முஷ்பிக்குர் ரஹிம் 29 ஓட்டங்களுடன் வெளியேறினார். 48 பந்துகளை எதிர்கொண்ட முஷ்பிக்குர் ரஹிம் ஒரு பவுண்டறியையும் அடிக்கவில்லை.

அவரைத் தொடர்ந்து ஷமிம் ஹொசெய்ன் 5 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.

ஒருபுறத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷுக்கு உயிரூட்டிக்கொண்டிருந்த தௌஹித் ஹ்ரிடோய் 97 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 82 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார். இது பங்களாதேஷ் அணிக்கு பேரிடியைக் கொடுத்தது.

பின்வரிசையில் தஸ்கின் அஹ்மத் (1), ஷொரிபுல் இஸ்லாம் (7) ஆகியோர் களம் புகுந்த சற்று நேரத்தில் ஆட்டம் இழந்தனர்.

கடைசி விக்கெட்டில் நசும் அஹ்மத் (15), ஹசன் மஹ்முத் ஆகிய இருவரும் இலங்கைக்கு சிறு சோதனையைக் கொடுத்த போதிலும் அஹ்மத் ஆட்டம் இழந்ததால் பங்களாதேஷின் தோல்வி உறுதியாயிற்று.

இலங்கை பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் 32ஆவது பிறந்த நாளான இன்றைய தினம், வழமைபோல் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்துக்கொடுத்தனர்.

குறிப்பாக துடுப்பாட்டத்தில் அசத்திய சதீர சமரவிக்ரம, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையைப் பதிவுசெய்தார்.

ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்கவும் திமுத் கருணாரட்னவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 34 ஓட்டங்களைப் பகிர்ந்;திருந்தபோது 18 ஓட்டங்களைப் பெற்றிருந்த திமுத் கருணாரட்ன வெளியேறினார்.

தொடர்ந்து நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை சிறுக சிறுக அதிகரிக்க உதவினர்.

அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 107 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க 5 பவுண்டறிகள் அடங்கலாக 40 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 117 ஓட்டங்களாக இருந்தபோது குசல் மெண்டிஸ் இலகுவான பிடி ஒன்றைக் கொடுத்து 50 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். அவர் 6 பவுண்டறிகளையும் ஒரு சிக்ஸையும் விளாசி இருந்தார்.

சரித் அசலன்க (10), தனஞ்சய டி சில்வா (6) ஆகிய இருவரும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் சதீர சமரவிக்ரமவும் அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் அணியை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 57 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எனினும், தசுன் ஷானக்க கவனக் குறைவான அடி தெரிவின் காரணமாக 24 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (224 - 6 விக்.)

அவரைத் தொடர்ந்து துனித் வெல்லாலகே (3), மஹீஷ் தீக்ஷன (2) ஆகிய இருவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (246 - 8 விக்.)

மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 93 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓய்வுபெற்றார் WWE ஜாம்பவான் ஜோன்சினா!

2025-12-14 13:48:40
news-image

மெஸ்ஸியை பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரகளை...

2025-12-13 16:30:55
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: செத்மிக்கவின்...

2025-12-13 15:19:36
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஐக்கிய...

2025-12-12 19:13:18
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2025-12-12 18:02:03
news-image

19இன் கீழ் உலகக் கிண்ணம்: இலங்கையை...

2025-12-12 15:12:17
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட்...

2025-12-12 14:05:24
news-image

குவின்டன் துடுப்பாட்டத்திலும் பார்ட்மன் பந்துவீச்சிலும் அசத்தல்...

2025-12-12 12:42:07
news-image

உலக கராத்தே சம்மேளனத்தின் (WKF) புதிய...

2025-12-11 18:39:16
news-image

19 வயதுக்குட்பட்டோர் இலங்கை கிரிக்கெட் அணி...

2025-12-10 12:47:26
news-image

தென் ஆபிரிக்காவுடனான முதலாவது ரி20 இல்...

2025-12-09 23:12:13
news-image

பெத்தும் நிஸ்ஸன்க குவித்த 3ஆவது அரைச்...

2025-12-09 18:18:08