திரை விமர்சனம் - நூடுல்ஸ்

08 Sep, 2023 | 01:55 PM
image

நூடுல்ஸ் - விமர்சனம்

தயாரிப்பு : ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ்

நடிகர்கள் : ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து, ஷோபன் மில்லர், நகுணா, மஹினா, ஆழியா, 'அருவி' மதன் உள்ளிட்ட பலர்.

இயக்கம் : மதன் தட்சிணாமூர்த்தி 

மதிப்பீடு : 3/5       

நடிகராக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் அருவி மதன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'நூடுல்ஸ்'. இரண்டே நிமிடத்தில் தயாராகும் உணவான நூடுல்ஸ் எனும் பெயரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் பார்வையாளர்களின் ரசனை பசியை தீர்த்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

கதையின் நாயகனான ஹரிஷ் உத்தமனும், கதையின் நாயகியான ஷீலா ராஜ்குமார் பெற்றோரை எதிர்த்து காதல் மனம் புரிந்து, ஒரு பெண் பிள்ளையை பெற்றுக் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வருபவர். இவர்கள் வாரந்தோறும் விடுமுறை நாட்களில் அவர்கள் வசிக்கும் வீட்டின் மொட்டை மாடியில் அருகருகே வசிக்கும் குடும்பத்தினர் ஒன்றிணைந்து தங்களுக்குள் பேசிக்கொண்டும், வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட்டும் பொழுதை கழிக்கிறார்கள். 

இரவு நெடுநேரம் வரை நீடிக்கும் இந்த விளையாட்டு அக்கம் பக்கத்தினருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த, அவர்கள் பொலிஸில் புகார் தெரிவிக்கிறார்கள். இதனால் பொலிஸ் அதிகாரியான அருவி மதன் மற்றும் அவருடைய உதவியாளரான மில்லர் இருவரும் இந்த வீட்டிற்கு வருகை தந்து அங்கு மகிழ்ச்சியாக இருக்கும் ஹரிஷ் உத்தமன் குழுவினரிடம், ''இரவு நெடு நேரமாகிவிட்டது. 

அக்கம் பக்கத்தினருக்கு தொந்தரவாக இருக்கிறது. அதனால் அனைவரும் கலைந்து சென்று வீட்டுக்கு செல்லுங்கள்'' என எச்சரிக்கிறார். தங்களுடைய தனிப்பட்ட உரிமையில் காவல்துறை அதிகாரி அத்துமீறி பிரவேசிப்பதாக ஹரிஷ் உத்தமன் மற்றும் அவரது மனைவி நினைத்துக் கொண்டு பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இது அவர்களின் அதிகாரம் குறித்த ஈகோவை தூண்டி விடுகிறது.

இந்த தருணத்தில் ஷீலா ராஜ்குமாரின் பெற்றோர்கள்  பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரை காண்பதற்காக வருகை தருகிறார்கள். இந்நிலையில் அவர்களை வரவேற்க ஹரிஷ் உத்தமன் சிறப்பான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கிறார். இந்நிலையில் ஹரிஷ் உத்தமனைப் பற்றி அக்கம் பக்கத்திடம் விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான அருவி மதன், அவர் மீது புகார் வந்திருப்பதாக கூறி அவரை விசாரிப்பதற்காக வீட்டிற்கு வருகிறார்.‌

இதனிடையே அந்த வீட்டில் அசம்பாவிதமாக கொலை ஒன்றும் நடைபெறுகிறது. இதனால் மனதளவில் பதட்டத்தின் உச்சத்திற்கு செல்லும் ஹரிஷ் உத்தமன் காவல்துறை அதிகாரியின் விசாரணைக்கு ஒத்துழைத்தாரா..? தன் மனைவியின் பெற்றோரை மகிழ்ச்சியுடன் வரவேற்றாரா?  அல்லது இந்த பிரச்சினையை அவர் எப்படி சமாளித்தார்?  என்பதுதான் இப்படத்தின் பரபர திரைக்கதை.

ஒரு சின்ன வீட்டிற்குள் விறுவிறுப்பாக நடைபெறும் திரைக்கதையை அமைத்து பார்வையாளர்களை பதட்டத்திலேயே வைத்திருந்ததற்காக அறிமுக இயக்குநரான மதன் தட்சிணாமூர்த்தியை முதலில் பாராட்ட வேண்டும். வில்லனாகவே நடித்து வந்த ஹரிஷ் உத்தமன் - இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். காதல் மனைவியின் மீது காட்டும் பாசம்.. எதிர்பாராமல் நடந்த விபத்தில் முகம் தெரியாத ஒருவர் இறக்கும்போது அந்த கொலைப்பழியை தன் மீது சுமத்திக் கொள்வது.. என பல இடங்களில் தன் தனித்துவமான நடிப்பு முத்திரையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்.

தேசிய விருது பெற்ற திரைப்படத்தில் நடித்த அனுபவம் கொண்ட நடிகை ஷீலா ராஜ்குமார்- இந்த திரைப்படத்திலும் தனது அப்பாவித்தனமான நடிப்பால் ரசிகர்களை ஈர்க்கிறார். இவர்களை தவிர்த்து சட்டத்தரணியாக நடித்திருக்கும் நடிகர் வசந்த் மாரிமுத்து- பார்வையாளர்களை தனது உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், நடிப்பாலும் பரவசப்படுத்துகிறார்.

வினோத்தின் ஒளிப்பதிவு  ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை.. சரத்குமாரின் படத்தொகுப்பு என ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கி, ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்கள். சிறிய முதலீட்டில் விறுவிறுப்பான படத்தை தொய்வில்லாமல் வழங்க இயலும் என்ற நம்பிக்கையை படைப்பாளி மதன் தட்சிணாமூர்த்தி தன்னுடைய முதல் படத்திலேயே விதைத்து  இனி வரும் சிறிய முதலீட்டாளர்களுக்கு பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். இதற்காகவும் இயக்குநரை கைகுலுக்கி பாராட்டலாம். குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும் திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதால் அதன் ஓட்டத்தில் குறைகள் மறைந்து விடுகின்றன.

நூடுல்ஸ் - பவர்ஃபுல் ஜிங்கிள்ஸ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்