வீட்டைச் சுத்தப்படுத்தும்போது தற்செயலாக வீட்டை விட்டு வெளியே வந்த பத்து வயதுச் சிறுமியொருவர் அவரது தாயின் கண் முன்னாலேயே ஐ.எஸ். பெண் உறுப்பினர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆண் ஒருவரின் துணையில்லாமல் வெளியே வருவது இஸ்லாமிய முறைப்படி குற்றம் என்பதன் பேரில், ஃபேட்டன் என்ற குடும்பப் பெயரையுடைய இந்தப் பெண் ஐ.எஸ். இயக்கத்தினரால் கைதுசெய்யப்பட்டார். இவருடன் இவரது தாயும் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட இருவரில் யார் தண்டனையை அனுபவிக்கப் போகிறீர்கள் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் கேட்டனர். அப்போது, சிறுமியாக இருப்பதால் தன் மகளுக்குத் தண்டனை குறையும் என நினைத்த தாய், தனது மகளை முன்னிறுத்தினார். ஆனால், அவரது எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.

கூரிய பற்கள் போன்ற அமைப்புக் கொண்ட விஷம் தடவப்பட்ட இடுக்கி ஒன்றால் அந்தச் சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான பெண்களுக்கு ஐ.எஸ். அமைப்பினர் இதுபோன்ற இடுக்கி மூலமே தண்டனை வழங்குவர். இதை, குற்றவாளியின் சதையின் மீது வைத்து அழுத்தி எடுக்கும்போது, தோல், சதை என அனைத்தும் பிய்ந்து துண்டு துண்டாகக் குதறப்படும்.

அதே முறையில், குறித்த சிறுமியின் தாயின் கண் முன்னேயே அச்சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். மேற்படி தண்டனையை ஐஎஸ் பெண் தீவிரவாதிகள் சிலரே நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.