கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கைவிடப்பட்ட எதிர்கால சந்ததியினர்

07 Sep, 2023 | 09:14 AM
image

ஆர்.ராம்

“11வயதான எமது பிள்ளைக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கிடைத்திருக்கவில்லை. இதனால் நெருக்கடியான கொழும்பு நகரத்தில் கற்கைகளுக்காக பாடசாலைக்கு அனுப்புவதற்கு அதிகளவு அச்சமான நிலைமை இருந்தமையால் அவர் மீண்டும் பாடசாலைக்கு செல்வதற்கு ஒருமாதம் தாமதமாகியது” என்று மொஹமட் மௌலானா பர்ஹானா என்ற தாயார் குறிப்பிட்டார்.

“கொரோனா பரவலுக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதும், எட்டுவயதான எனது மகனை அச்சம் காரணமாக மூன்று மாதங்கள் தமதமாக்கியே கற்றைகளுக்குச் செல்வதற்கு அனுமதித்தேன்” என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பஞ்சலிங்கம் சத்தியதேவன் என்ற தந்தையார் கூறுகின்றார். 

இதனைவிடவும், இலங்கையின் நாடாளவிய ரீதியில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் 'கிரமமாக" தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தி அடையவில்லை என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டதோடு, (அவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு விரும்பவில்லை) பாடசலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு அதிகமான காலத்தின் பின்னரே மாணவர்களின் நாளாந்த வருகை சீரடைந்தது என்றும் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை புள்ளிவிபரத் திணைக்களத் தரவுகளின் பிரகாரம், 5 முதல் 19 வயது வரையில் 5.493மில்லியன் பேர் காணப்படுகின்றனர். இவர்களில் அரச, தனியார் பாடசாலைகள் உள்ளடங்கலாக 4.5மில்லியன் பேர் பாடசாலை மாணவர்களாக உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்க புள்ளிவிபர திணைக்களத்தின்படி 19வயதுக்கு உட்பட்டவர்கள் விபரம்

இவர்களில் 12வயதுக்கு குறைந்த எந்தவொரு சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் தீர்மானம் கொள்கை அளவில் இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்படாமையினால் அவர்களில் எவரும் கொரோனா தடுப்பூசியைப் பெறவில்லை.

அத்துடன், பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்த 12 முதல் 16வயது, 17முதல் 18வயது என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டமும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்பதும் உறுதிப்படுத்துள்ளது.

இலங்கையில் காணப்பட்ட பொருளாதார ரீதியான நெருக்கடிகள் காரணமாக, சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசிகளின் விலைகள் அதிகமாக இருந்தமையால் அவற்றைக் கொள்வனவு செய்ய முடியமையின் காரணமாகவே சிறுவர்களை மையப்படுத்தி கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி திட்டம் 12வயதுக்கு மேற்பட்டவர்களுக்கென வரையறுக்கப்பட்டது என்று தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிக்கின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், '5 முதல் 12 வயதுடையவர்களுக்கான கொரோனா தடுப்பூசிகள் பெறுமதி அதிகமாக இருந்ததால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்புக்கள் குறைவாக இருந்தது' என்று கொரோனா ஒழிப்பு தொடர்பான துறைசார் தொழில் நுட்பக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிடுகின்றார்.

பாடசாலையொன்றில் மாணவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றியபோது

இதேவேளை, “சுகாதார அமைச்சு அறிவித்தமைக்கு அமைவாக 12வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு முன்னதாகவே 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதனால் நெருக்கடிகள் அதிகரித்தது” என்று இலங்கை ஆசிரியர் - அதிபர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், கொரோனா தொற்றுப்பரவல் மற்றும் தடுப்பூசி விநியோகம் சம்பந்தமான தரவுகளை தொற்று நோய் விஞ்ஞான பிரிவே கையாண்டு வருகின்றது. இந்தப் பிரிவே கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி விநியோகம் பற்றிய முழுமையான தரவுகளை வெளிப்படுத்தி வருகின்றது.

எனினும், 12வயது மேற்பட்டவர்கள் உட்பட கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் தடுப்பூசி வழங்கப்பட்ட மாணவர்கள் பற்றி தரவுகள் பற்றி வெளிப்படைத்தன்மையை பேண விரும்பான்மை காரணமாக “வயதெல்லை அடிப்படையில் எந்த தரவுகளும் இல்லை” என்று அப்பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர், வைத்தியர் சமிந்த கினிகே, குறிப்பிடுகின்றார். 

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் தடுப்பூசி பெற்றவர்களின் விபரம்

இலங்கையில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி முதல் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கியதாக பிரகடனம் செய்யப்பட்ட 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் 6இலட்சத்து 72ஆயிரத்து 171பேர் தொற்றுக்குள்ளாகியிருந்ததோடு 16ஆயிரத்து 842 மரணங்களும் நிகழ்ந்திருந்தன.

ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியத்தின் இலங்கை பற்றிய 2021ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையில் கொரோனா தொற்றுக் காரணமாக, 61 சிறுவர்கள் உட்பட 14,979 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், 2022ஆம் ஆண்டுக்கான சிறுவர்களின் மரணங்கள் பற்றிய உத்தியோக பூர்வமான தகவல்கள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.

அதேவேளை, 2020ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வரையிலான முதலாவது கொரோனா அலையின்போது தொற்றுக்குள்ளான 3,396பேரில் 12சதவீதமானவர்கள் 10வயதுக்கு உட்பட்டவர்களாகவம், 16சதவீதமானவர்கள் 11முதல் 20சதவீதமானவர்கள் என்றும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி வரையிலான இரண்டாவது கொரோனா அலையின்போது தொற்றுக்குள்ளான 92,341பேரில் 8சதவீதமானவர்கள் 10வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 11முதல் 20வயதானவர்கள் 18சதவீதமானவர்கள் என்றும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி முதல் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையிலான மூன்றாவது கொரோனா அலையின்போது தொற்றுக்குள்ளான 5,76,434பேரில் 6சதவீதமானவர்கள் 10வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 11முதல் 20வயதானவர்கள் 18சதவீதமானவர்கள் என்றும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கையில் வயதெல்லை அடிப்படையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம்

இலங்கையில் நிகழ்ந்தேறிய கொரோனா பரவலில் ஒப்பீட்டளவில் 30வயது முதல் 60வயதுக்கு உட்பட்ட பிரிவினரே தொற்றுக்கு உள்ளாகியிருந்ததோடு, உயிரிழப்புக்களையும் அதிகம் சந்தித்தவர்களாக உள்ளனர் என்பதையும் மேற்படி தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தரவுகள் குறிப்பிட்டுள்ளன. 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் பெற்ற அஸ்டா செனிக்கா, சினோபாம், ஸ்புட்னிக்-வி, மொடோனா, ஃபைசர்-பயோஎன்டெக் ஆகிய தடுப்பூசிகளே இலங்கையில் கொரோனா பரவலுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் இலங்கையின் கொரோனா ஒழிப்பு தொடர்பான துறைசார் தொழில்நுட்பக் குழு 12வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு தடுப்பூசியும், 16வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும், 20வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்று தடுப்பூசிகளையும் செலுத்துவதற்கும் அனுமதியளித்தது.

“இலங்கையில், கொரோனா ஒழிப்பு தொடர்பான தொழில்நுட்பக்குழுவில் சுகாதாரத்துறையின் அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்த நிபுணர்களும் பங்கேற்றிருந்தனர். அவர்களின் ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைவாகவே, 12வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. அதனை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழலும் நாட்டுக்குள் காணப்பட்டதென”

அக்குழுவின் அங்கத்தவராகச் செயற்பட்ட நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ நிபுணர் பேராசிரியர்.வைத்தியர் நீலிகா மாளவிகே தெரிவிக்கின்றார். அத்துடன், “சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி நாட்டுக்குள் வருவிக்கப்படவில்லை. அதனால் இல்லாதவொரு விடயத்தினைப் பற்றி உரையாட வேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டிருக்கவில்லை. 

துறைசார் நிபுணர்களைக் கொண்ட குழு கொண்டிருந்த கரிசனைகளின் அடிப்படையில் பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் அதிகளவான ஆபத்துக்குள்ளாகும் தரப்புக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், கொரோனா ஒழிப்பு தொடர்பான துறைசார் தொழில் நுட்பக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான வைத்தியர் அன்வர் ஹம்தானியும் பேராசிரியர்.வைத்தியர் நீலிகா மாளவிகேயின் கருத்தினை ஆதரிப்பதுடன், உள்நாட்டில் குழந்தைகள் பிறந்தது முதல் தாய்பால் மற்றும் தடுப்புமருந்து விநியோகச் செயற்பாடுகளால் சிறுவர்களுக்கு இயல்பாகவே நோயெதிர்ப்பு திறன் அதிகமாக காணப்படுகின்றமை தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார். 

இலங்கையில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளும், விபரங்களும்

“இலங்கையில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்பால் ஊட்டும் சதவீதமானது 82சதவீமாகவும், ஒட்டுமொத்தமாக உயர்ந்த பெறுமானமாக 99சதவீதமாகவும் காணப்படுகின்றது. அத்தோடு குழந்தை பிறந்ததிலிருந்து 11வயது வரையில் வௌ;வேறு வகையான நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதனால் சிறுவர்களின் நோயெதிர்ப்பு சக்தி உயர்ந்த மட்டத்தில் உள்ளது” என்று தாய் மற்றும் குழந்தை சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறுவர் ஆரோக்கிய மற்றும் விருத்திப் பதிவேட்டின் பிரகாரம், இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகக்கும் பிறந்தது முதல் 11வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டாலும், 5வயது பூர்த்தியானதன் பின்னர் போலியோ, தொண்டைக்கரப்பான், ஏற்புவலி ஆகியவற்றை தடுக்கும் வகையில் வாய்மூலமான போலியோ மருந்து வழங்கப்படுகின்றது.

அதற்கு மேலதிகாக, பெண்பிள்கைகளுக்கு 10வயது பூர்த்தியாகிய பின்னர் கருப்பைக் கழுத்து புற்றுநோயைத் தடுப்பதற்காக ஆறு மாத இடைவெளியில் இரண்டு தடவைகள் எச்.பி.வி தடுப்பு மருந்தும் வழங்கப்படுகிறது.

11வயதுடைய சிறுவர்களுக்கு தொண்டைக்கரப்பான், ஏற்புவலியை தடுப்பதற்கான தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றது. இதனைவிடவும் காலத்துக்கு காலம் ஏற்படுகின்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேநேரம், “உள்நாட்டில் ஏலவே செயற்படுத்தப்பட்டு வந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளால் கொரோனா தடுப்பூசி விநியோகம் சாதகமான விளைவினை வழங்கியது. ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தடுப்பூசி விநியோகம் மேம்பட்ட நிலையிலேயே இருந்தது” என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவிக்கின்றார்.

அத்துடன், “சிறுவர்களுக்கான தடுப்பூசித்திட்டங்கள் காணப்படுகின்ற நிலையில், விஞ்ஞான, தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு அமைவாகவே அதனை வழங்க வேண்டியவர்கள் தீர்மானிக்கப்பட்டனர். இதனால் உயிரிழப்புக்கள் கணிசமாக குறைந்தது” என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையின் சுகாதாதுரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடத்தில் ஒரு தொகுதி ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லஸால் வழங்கப்பட்டபோது,

எவ்வாறாயினும், இலங்கையில், 12வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி வழங்கப்படுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தபோதும், அச்செயற்பாடு முழுமையாக நிறைவடையாததன் காரணத்தால் 6மில்லியன் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் பயன்பாட்டு உட்படுத்த முடியாத வகையில் காலவதியாகியதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில், உள்நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, தரம் 01 இல் இருந்த மாணவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கல்வியறிவு மற்றும் எண்ணிக்கையில் திருப்திகரமான அளவை அடைய முடியவில்லை என்று கல்வி அமைச்சின் ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட ‘இலங்கையில் தரம் 03 மாணவர்களின் கல்வியறிவு மற்றும் எண்ணிக்கையில் அடிப்படைத் திறன்களின் சாதனை நிலைகளின் மதிப்பீடு என்ற ஆய்வின் பிரகாரம், 73 சதவீத மாணவர்களிடம் கேட்கும் புரிதலும் திருப்திகரமாக இல்லை என்றும் அந்த மாணவர்களில் 80 சதவீதம் பேருக்கு அவர்களின் வயதுடைய மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் வாய்மொழி திறன்கள் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

அறுபத்து மூன்று சதவீத மாணவர்களின் வாசிப்புப் புரிதல் திருப்திகரமாக இல்லாதுள்ளதோடு 66 சதவீதத்தினருக்கு அவர்களின் வயது மற்றும் கல்வித் தகுதிக்கு ஏற்ப எழுதும் திறன் இல்லையென்றும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் பாடசாலையொன்றில் கொரோனா தடுப்பூசியொன்றுக்காக மாணவர்கள் வரிசையில் காத்திருந்தபோது

இவ்வாறான நிலையில், 12வயதுக்கு குறைந்தவர்களுக்கான கொரோனா தடுப்பூசியை வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தால் மேற்படி ஆய்வின் முடிவுகளில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் அல்லவா என்று கல்வி அமைச்சு மற்றும், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் பதிலளிக்கவல்ல அதிகாரிகளிடத்தில் வினவியபோதும், 'கொரோனா தொற்று முற்றுப்பெற்றுவிட்டது. தற்போது அதுபற்றி உரையாடுவது பொருத்தமற்றது" என்று பதிலளித்தனர்.

அதேநேரம் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்திரகுப்த, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆகியோரை இவ்விடயம் சம்பந்தமாக பதிலளிப்பதற்காக பலதடவைகள் தொடர்பு கொண்டபோதும் காரணங்கூறி தவிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடியின் விஜயத்தைத் தொடர்ந்து அநுராதபுரத்துக்கு கிடைக்கவுள்ள...

2025-04-17 18:34:46
news-image

எல்லையின் பேய்கள்: பிள்ளையானின் வன்முறை மரபையும்...

2025-04-17 12:21:24
news-image

பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு...

2025-04-17 04:01:32
news-image

தேசிய மற்றும் மனித பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான...

2025-04-16 21:55:19
news-image

டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக...

2025-04-16 17:26:09
news-image

மூச்சுவிட வாய்ப்பளித்த ட்ரம்ப்; முடிவுக்கு வரும்...

2025-04-16 02:02:55
news-image

பொருளாதார வளர்ச்சிக்காக ஜ.எஸ்.பி . பிளஸ்...

2025-04-15 22:07:17
news-image

நக்சிவான்: நிலத் தொடர்பற்ற சுயாட்சிக் குடியரசு

2025-04-12 16:57:40
news-image

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின்...

2025-04-12 16:58:30
news-image

இந்தியாவின் காலடியில் விழுந்துள்ளதா இலங்கை?

2025-04-12 17:05:16
news-image

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

2025-04-12 16:54:29
news-image

அமெரிக்க - சீன வர்த்தகப் போர்

2025-04-12 16:59:30