(லியோ நிரோஷ தர்ஷன்)
பொருளாதார நெருக்கடிகளின் கடினமான காலங்களில் இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்வுப்பூர்வமாக உணர்ந்து செயல்பட்டதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடன் நெருக்கடி அபிவிருத்து அடைந்து வரும் நாடுகளுக்கு பெரும் சவாலாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அதில் பிரதமர் மோடி மேலும் குறிப்பிடுகையில்,
கடன் நெருக்கடி உலகிற்கும், குறிப்பாக வளரும் நாடுகளுக்கு மிகுந்த நெருக்கடியாகியுள்ளது. கடனில் சிக்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவுவதற்கான உறுதியான கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியா முன்னின்று செயல்படும். இவ்வாரம் இறுதியில் நடைப்பெறவுள்ள ஜி 20 உச்சிமாநாட்டில் இதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
உலகளாவிய தெற்கின் குரலாக ஜி20 அமைப்பில் இந்திய தலைமைத்துவமானது கடன் பாதிப்புகளால் ஏற்படும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளித்துள்ளது. 'கடன் நெருக்கடி உண்மையில் உலகிற்கு, குறிப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு மிகவும் கவலையளிக்கும் விடயமாகவே உள்ளது. இது தொடர்பாக நாடுகள் எடுக்கும் முடிவுகளை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் ஆர்வத்துடன் பின்பற்றி வருகின்றனர். சில பாராட்டத்தக்க முடிவுகளும் இவற்றுள் உள்ளன.
முதலாவதாக, கடன் நெருக்கடியில் உள்ள அல்லது அதைச் சந்தித்த நாடுகள், நிதி ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இரண்டாவதாக, கடன் நெருக்கடியால் சில நாடுகள் கடினமான காலங்களை எதிர்கொள்வதைப் பார்த்த மற்ற நாடுகள் அதே தவறான வழிகளைத் தவிர்ப்பதில் விழிப்புடன் உள்ளன.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ், பெருகிவரும் கடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு உதவ கடன் மறுசீரமைப்புக்கான கட்டமைப்பின் அவசியத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
உலகின் மிகப்பெரிய கடன் வழங்குபவராகக் கருதப்படும் சீனா, கடன் மறுசீரமைப்பு குறித்த சில திட்டங்களுக்கு தயக்கம் காட்டி வருகிறது. இருப்பினும் ஜி20 உறுப்பு நாடுகள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு நெருக்கடியைச் சமாளிக்க உதவ முன்வர வேண்டும்.
பல்வேறு மதிப்பீடுகளின் பிரகாரம் 70க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் 326 பில்லியன் டொலர் கடன் சுமையின் கீழ் கூட்டாக தத்தளிக்கின்றன.
ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் பொதுவான கடன் மறுசீரமைப்பு கட்டமைப்பின் ஊடாக நாடுகளுக்கு உதவுவதில் சிறந்த முன்னேற்றங்களை அடைந்துள்ளனர். இவ்வாறானதொரு பொது கட்டமைப்பின் அவசியமும் தற்போது உணரப்பட்டுள்ளது.
எனவே உலகளாவிய கடன் மறுசீரமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஜி20 தலைமைத்துவமான இந்தியா ஆகியவற்றின் கூட்டு முயற்சியான உலகளாவிய இறையாண்மை கடன் வட்டமேசை கலந்துரையாடல் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கமாக முக்கிய பங்குதாரர்களிடையே தொடர்பை வலுப்படுத்தல் மற்றும் பயனுள்ள கடன் மறுசீரமைப்பை எளிதாக்குதல் என்பனவாகும்.
கடன் நெருக்கடிகள் குறித்து பல்வேறு நாடுகளின் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதன் ஊடாக, இதுபோன்ற சூழ்நிலைகள் அடிக்கடி நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய முடிகிறது. எனவே தான் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நிறைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பல்வேறு நாடுகளின் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதன் ஊடாக இதுபோன்ற சூழ்நிலைகள் அடிக்கடி நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்பதில் உறுதியாக உள்ளோம். மறுப்புறம் கடன் நெருக்கடியில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஒத்துழைக்குமாறு கடந்த ஜூலை மாதம், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவோ முன்மொழிந்திருந்தார் என்றார்.
ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன.
இந்த நாடுகள் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமாகவும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவ்வாறானதொரு நிலையிலேயே இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஜி20 உச்சி மாநாடு எதிர்வரும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் டெல்லியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM