லத்தீப் பாரூக்
சுமார் நான்கு தசாப்த கால வெளிநாட்டு ஆதிக்கத்தின் பின், பல அழிவுகளையும் மரணங்களையும் சந்தித்த பின் நிலத்தால் சூழப்பட்ட மலைப்பாங்கான நாடான ஆப்கானிஸ்தான், வடக்கில் தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளையும் மேற்கில் ஈரானையும், கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தானையும் எல்லைகளாகக் கொண்ட ஒரு பரந்து விரிந்த தேசமாகும். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் 2021 ஆகஸ்ட்டில் அது தன்னை மீண்டும் விடுவித்துக் கொண்டது.
ஆப்கானிஸ்தான் ஒரு உன்னதமான நாடு. வரலாறு நெடுகிலும் ஆப்கான் மக்கள் அச்சமற்ற சுதந்திர மனிதர்களாகவே இருந்துள்ளனர். தாங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் தமது சுதந்திரத்துக்காகப் போராடவும் அவர்கள் ஒருபோதும் பின் தங்கியதில்லை. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் மாவீரன் அலெக்ஸாண்டர் ஆப்கானிஸ்தான் பற்றிக் குறிப்பிடுகையில் 'ஆப்கானிஸ்தானுக்குள் இலகுவாகப் பிரவேசித்து விடலாம். ஆனால் அங்கிருந்து மீண்டு வருவதென்பது பெரும்பாலும் முடியாத காரியம்' என்று கூறி உள்ளார்.
நவீன உலகின் இருபெரும் வல்லரசுகளான சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதில் இருந்து இந்த கூற்றின் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால், அதற்காக அவர்கள் செலுத்திய விலை என்னமோ அதிகம் தான். 1979 டிசம்பர் 24ல் முன்னாள் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியது. பத்து ஆண்டுகள் கழித்து 1989 பெப்ரவரி 15ல் அது அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களின் சரியான எண்ணிக்கை இதுவரை யாருக்கும் தெரியாது. எவ்வாறாயினும் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட மில்லியன் கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளில் அகதி முகாம்களில் இன்னமும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டுள்ளனர்.
வரலாற்றில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளாத, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஜுனியர், நியூயோக்கிலுள்ள உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி 24 மணிநேரத்துக்குள் தலிபான்கள் மீது போலியாக குற்றம் சாட்டி உலகை அச்சுறுத்தி ஒரு இராணுவ கூட்டணியை உருவாக்கி 27 தினங்களுக்குள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுப்பு நடத்தினார்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான விமானக் குண்டு வீச்சுக்கள், அழிவுகள், நாசங்கள், படுகொலைகள் என்பன தொடர்ந்தன. ஆனால், இந்த அடாவடித்தனங்களை எல்லாம் மீறி முன்னர் சோவியத் யூனியன் எதிர்நோக்கிய அதே விதிக்கு அமெரிக்காவும் முகம் கொடுத்தது. 2001ல் தொடங்கிய இந்தத் தாக்குதல் 2021ல் முடிவுக்கு வந்தது. 2021 ஆகஸ்ட் 30ல் அமெரிக்காவும் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.
இதன் மூலம் வெட்கக் கேட்டை சந்தித்த இன்றைய நிலையில் உலகின் ஒரேயொரு வல்லரசான அமெரிக்கா, தனது நாட்டு வங்கிகளில் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை முடக்கி வைத்ததோடு அந்த நாட்டின் மீது பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்துள்ளது. இது அந்த நாட்டு மக்களுக்கு சொல்லொணா துயரங்களை ஏற்படுத்தி உள்ளது. யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட அந்த நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதும் இதன் மூலம் கடினமான விடயமாகி உள்ளது.
இதனிடையே ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் நீண்டகால வரட்சி அங்கு மனிதாபிமான நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பகுதி விவசாயத்தையும் உணவுப் பாதுகாப்பையும் அடிப்படையாகக் கொண்டது. அங்கு நீர்ப்பாசனம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன் பனிக்கட்டி மலைகள் உருகி வடிந்து அதன் மூலம் அந்த நாட்டின் ஆற்றுநீர் பெருக வேண்டும், கோடை காலத்தில் நீர் நிலைகள் அதனால் செழிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
42 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஆப்கானிஸ்தானில் சுமார் 15.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளதாக ஐ.நா உலக உணவு பாதுகாப்புத் திட்டம் அறிவித்துள்ளது.
இவற்றின் நடுவே, தலிபான் நிர்வாகம் 280 கிலோமீற்றர் (174 மைல்கள்) நீளமான கால்வாய் ஒன்றை நிர்மாணித்து வருகின்றது. இது பூர்த்தி செய்யப்பட்டதும் நாட்டின் வட பகுதி முழுவதும் விவசாயத்துக்கான நீர்ப்பாசனத்தை திசை திருப்பி விநியோகிக்க முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்தத் திட்டம் பூர்த்தி அடைய இன்னும் பல வருடங்கள் செல்லும். இதற்கிடையில் நியாயமற்ற விதத்தில் தமது நீர் நிலைகளில் இருந்து நீர் திசை திருப்பப்படலாம் என அண்டை நாடுகள் சில கவலை வெளியிட்டுள்ளன.
செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கருத்துப்படி ஆப்கானிஸ்தான் மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் உயிர் வாழ்வதற்கான அவசர மனிதாபிமான உதவிகளை நாடி நிற்கின்றனர். போதைப் பொருள் துஷ்யிரயோகப் பிரச்சினைக்கும் இந்த நாடு முகம் கொடுத்துள்ளது.
குடும்பங்களின் நிதி நிலைமைகள் காரணமாக பிள்ளைகளும் சிறுவர்களும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். தூர இடங்களில் வாழும் பிள்ளைகள் பட்டினியோடு பாடசாலைகளுக்கு வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இளைஞர்கள் பாகிஸ்தான் எல்லையூடாக உயிரைப் பணயம் வைத்து தேயிலை, சீனி மற்றும் உலோகப் பொருள்கள் இலத்திரனியல் பொருள்கள் என்பனவற்றை கடத்தி வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்
இவற்றை எல்லாம் தாண்டி பெண்கள் மீது தலிபான்கள் பிரயோகித்து வரும் அர்த்தமற்ற கட்டுப்பாடுகள் தற்போது அனுபவித்து வரும் துயரங்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி உள்ளன. இரண்டாம் நிலை பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியவும் அரச துறைகள் மற்றும் நீதித் துறையில் பணியாற்றவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும், எங்கெல்லாம் பயணம் செய்யலாம் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் கிடைத்துள்ள சில தகவல்களின் படி, சில மாகாணங்களில் தரம் மூன்றுக்கு அப்பால் இன்னும் சில இடங்களில் தரம் ஆறுக்கு அப்பால் பெண்கள் பாடசாலை செல்லக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். ஏற்கெனவே அங்கு பெண்கள் கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இந்த முடிவுகள் இன்னும் பல தலைமுறைக்கு பெண்களை பின்னோக்கித் தள்ளிவிடும்.
தலிபான்களையும் அவர்களது தேசத்தையும் சிதைத்து விட காத்திருக்கும் மேற்குலக ஆர்வத்துக்கு மேலும் தீனி போடும் வகையில், அண்மையில் 100 ஆப்கான் பெண்கள் பல்கலைக்கழக புலமைப்பரிசில் பெற்று, துபாய் செல்லவிருந்த நிலையில், அந்தப் பயணத்துக்கு தலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
துபாயில் செயல்படும் அல் அப்தூர் குழுமத்தின் தலைவர் கலாப் அல் அப்தூர், ஆப்கானிஸ்தானின் 100 பெண்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவர்களை ஆப்கானிலிருந்து அழைத்து வருவதற்கான பிரத்தியேக விமானம் ஒன்றையும் அவர் ஆகஸ்ட் 23ம் திகதி காலையில் அங்கு அனுப்பி இருந்தார்.
'ஆனால் ஏற்கனவே 100 பேருக்குரிய பயணக் கட்டணங்கள் யாவும் செலுத்தப்பட்டிருந்த நிலையில் தலிபான் ஆட்சியாளர்கள் குறிப்பிட்ட பெண்களுக்கு அந்த விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. அவர்கள் துபாயில் தங்கியிருந்து தமது கல்வியைப் பூர்த்தி செய்வதற்கான கட்டணங்கள், தங்குமிட வசதிகள், போக்குவரத்து செலவுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என எல்லாமே செய்யப்பட்டிருந்த நிலையில் தான் அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது' என கலாப் அல் ஹப்தூர் தெரிவித்துள்ளார். தாங்கள் ஆண் துணையோடு பயணிக்க விமான நிலையம் சென்ற போது விமான நிலைய அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களும் உயர் நிலை பாடசாலைகளும் பெண்களுக்கு மூடப்பட்டுள்ளன. ஆனால், இது இஸ்லாமியப் போதனைகளுக்கு முற்றிலும் முரணானது. ஆண் பெண் இரு பாலாருக்கும் ஒரே விதமாக கல்வியின் மகத்துவத்தை போதிக்கும் ஒரு மார்க்கமே இஸ்லாமாகும்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வாபஸ் வாங்கி இரண்டு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் மத்திய ஆசிய நாடுகள் உட்பட உலகின் ஏனைய நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நிலையில் உள்ளன. இந்த பிராந்தியத்தை தலிபான்கள் சிதைத்து விடக் கூடும், தண்ணீர் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சங்களின் மத்தியில் தான் இந்த உறவுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சீனாவும் ரஷ்யாவும் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு செல்வாக்கு நிலையில் இருக்கின்றன என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் ஏனைய நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான உறவுகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகின்றன.
அமெரிக்கப் படைகள் தற்போது ஆப்கானிஸ்தானில் இல்லை என்பது இந்த நாடுகளின் நம்பிக்கைக்கு மற்றொரு காரணமாகும். தலிபான் நிர்வாகத்தோடு, அமெரிக்காவின் பங்காளிகளாகவே மத்திய ஆசிய நாடுகள் தமது ஆப்கானிஸ்தானுடனான உறவுகளை நோக்குகின்றன.
மேற்குலகில் சில நாடுகள் இன்னமும் தலிபான்களுடனான உறவுகள் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இந்த எதிர்ப்புகள் மறைமுகமான ஒரு நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. இன்னும் சில நாடுகள் எது எப்படி இருப்பினும் சரி, தலிபான்கள் கையில் இப்போது ஒரு அரசாங்கம் இருக்கின்றது. எனவே, அவசர தேவைகளின் நிமித்தத்திலேனும் அவர்களுடனான உறவுகள் அவசியமானவை என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளன. ஆனால், தனது இராஜதந்திர அங்கீகாரத்துக்காக உலகம் பேரம் பேசும் வரை ஆப்கானிஸ்தான் பிராந்தியம் காத்திருக்கவும் முடியாது. எந்த வகையிலேனும் இந்தத் தெரிவுகளும் இலகுவானவை அல்ல.
இதேவேளை, பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டோபியஸ் எல்வூட் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அரசை பாராட்டி உள்ளார். நாட்டை அவர்கள் முழுமையாக மாற்றி உள்ளனர் என்று தெரிவித்துள்ள அவர், தலிபான் அரசாங்கத்துடன் பிரிட்டன் ராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில பிரிட்டிஷ்
பாராளுமன்ற உறுப்பி னரும் தற்போதைய பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவருமான எல்வூட், 'தலிபான்கள் ஏற்படுத்திய நிர்ப்பந்தத் தால் மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துள்ள நிலையில், நான் அண்மையில் முற்று முழுதாக மாற்றம் கண்டுள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து அண்மையில் தான் திரும்பி வந்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஹலோ டிரஸ்ட் அமைப்பின் ஏற்பாட்டில் அவர் அங்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமது சட்டபூர்வ நிலையை ஸ்தாபித்துக் கொண்ட தலிபான்கள், இப்போது இராஜதந்திர ரீதியாக அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM