மதகுருமார்களின் அரசியலும் அச்சமும்…!

Published By: Vishnu

03 Sep, 2023 | 05:30 PM
image

தேசியன்

இலங்கையின் முதல் அரசியல் படுகொலை என வர்ணிக்கப்படுவது எஸ்.டபிள்யூ ஆர். டி பண்டாரநாயக்க கொலைச்சம்பவம். அவரை  துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவர்  ஒரு பெளத்த பிக்கு. இப்போது வரை இலங்கை அரசியலில் பெளத்த பிக்குகளின் தலையீடு ஒரு தலைவலியாகவே ஆட்சியாளர்களுக்கு உள்ளது.

பண்டாரநாயக்க சம்பவத்துக்குப் பிறகு பிக்குகள் அரசியல் கொலைச்சம்பவங்களுடன் தொடர்பு படவில்லையென்றாலும் பல இனரீதியான வன்முறைகளுக்கும் மரணங்களுக்கும் காரணமாக இருந்துள்ளனர். பெளத்த தர்மத்தை அலட்சியப்படுத்தி புறந்தள்ளி அவர்கள்  கக்கும் பேரினவாத பேச்சுக்கள் பலரை உயிரோடு படுகொலை செய்வதற்கு சமனாகவுள்ளன.  அவர்களைப் பகைத்துக்கொண்டால் சிங்கள பெளத்தர்களையும் அவர்களின் வாக்குகளையும் இழப்பதற்கு சமன் என்பது ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். 

சில காலம் வரை தாம் சொல்லும் அரசியல் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் மக்களை வாக்களிச் சொன்ன பிக்குகள் தாமே அரசியல்வாதிகளாக மாறி  2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் புகுந்தனர்.  ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சியை ஸ்தாபித்து அவ்வாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர்கள் ஒன்பது ஆசனங்களை வென்றெடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகினர்.

எந்த சுகபோக வாழ்க்கையை வெறுத்து இளவரசாக இருந்த சித்தார்த்தர் வனம் சென்றோரோ அவரை பின்பற்றி துறவறம் பூண்ட இவர்கள் சொகுசு வாழ்க்கைக்கு திரும்பினர்.  மத்திய தர வர்க்க சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளும் ஆதரவுமே இவர்களின் ஆயுதங்களாக இருந்தன.  

அதன் பிறகே இலங்கையில் பெளத்த பிக்குகள் பல இனவாத அமைப்புகளை உருவாக்கினர். ஏனென்றால்  ஒரு பக்கம் பிக்குகள் அரசியல்வாதிகளாகிய பின்னர் அவர்களைச் சார்ந்த ஏனையோர் அமைப்புகளை உருவாக்குவதில் பிரச்சினைகள் இருக்கவில்லை. பிற்காலத்தில் ஜாதிக ஹெல உறுமயவும் சிதறுண்டது.  ஆனால் நாடாளுமன்றத்தில் செய்ய முடியாததை அதற்கு வெளியே செய்து இனவாத வெற்றி கண்டனர் இவர்கள்.

இதில்  பிரதானமானவர் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர். இவரின் அணுகுமுறைகளை ஏனைய அமைப்புகளான இராவணா பலய,  சிங்கள ராவய போன்றனவும் கைகளில் எடுத்துக்கொண்டு இலங்கையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களையும் இனவாத கருத்துக்களையும் இன்று வரை வெளிப்படுத்தி வருகின்றன. 

 பெளத்த பிக்குகளைப்போன்று இலங்கையின் ஏனைய மதங்களைச் சேர்ந்த மதத்தலைவர்களும் மத குருமார்களும் அரசியலில் இறங்கவில்லை. ஆனால் அரசியல் பேசி வருகின்றனர். இதில் கூடுதலாக அரசியல் பேசி வருபவர் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை. ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு முன்பதாக அவர் மகிந்த ராஜபக்ச சார்பாக பேசி வந்தார். இது கத்தோலிக்க மக்களை முகஞ்சுழிக்க வைத்தது.

எனினும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குப்பிறகு அவர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரானார். தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் என்றும் அவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்துவதை பலமான ஒரு அரசியல் கரம் செயற்படுகின்றது என்றும் கருத்துக்களை தெரிவித்து வந்தார். 

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் அடிக்கடி செய்தியாளர் மாநாடுகளை நடத்தினார். கத்தோலிக்கர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்கும்படி கூறி அவர்களை சாந்தப்படுத்த முயன்றார். ஏனென்றால் தாக்குதலுக்கு முன்பதாக அவர் யாருக்கு ஆதரவாக இருந்தார் என்பதை மக்கள் அறிவர். 

இப்போதும் திடீர் திடீரென அவர் தனக்கு பொருத்தமில்லாத அரசியல் விவகாரங்களைப் பேசி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளத் தவறுவதில்லை. கடந்த வாரம் அவர் இந்தியா– இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பதென்றால் மக்களது கருத்தை அறியும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் என கூறியுள்ளார்.

இவர் ஏன் இப்படி கூறுகின்றார் இவரின் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்ற கேள்வி இப்போது எழுந்து நிற்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான  முழு விசாரணை அறிக்கையும் கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்படும் என கடந்த திங்கட்கிழமை  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே நாளன்றே மல்கம் ரஞ்சித் இலங்கை – இந்திய உறவுகள் தொடர்பில் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். ஆனால் இலங்கை –சீனா தொடர்பாக மகிந்த ராஜபக்ச காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள், துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டமை குறித்து அவர் வாயே திறந்திருக்கவில்லை. இதை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கருணாகரமும் சுட்டிக்காட்டியிருந்தமை முக்கிய விடயம். 

பேராயர் மல்கம் ரஞ்சித் இந்திய எதிர்ப்பாளராக மாறியுள்ளாரா, அவரை இவ்வாறு பேசத் தூண்டுவது யார், எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தின் போது இவர் இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றமைக்கான காரணம் என்ன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட்டால் வடக்கு பிராந்தியம் பல வழிகளில் வளர்ச்சி காணும். அப்போது அப்பகுதியிலுள்ள மறை மாவட்ட பிரதேசங்கள்   பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் பேராயருக்கு எழுந்தள்ளதோ தெரியவில்லை.

ஒல்லாந்தர் காலப்பகுதியில் வடமாகாணத்தின் மன்னார் பகுதியானது சைவர்களின் பூமியாகவே விளங்கியது. வரலாற்று சிறப்பு மிக்க திருக்கேதீச்சரமானது பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது. அதே வேளை மன்னார் மடு மாதா தேவாலயம் நானூறு வருடங்கள் பழமையானதொரு கத்தோலிக்க திருத்தலமாகும்.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மறை மாவட்டத்தின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டதில் மன்னார் மறை மாவட்டம் உருவானது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட்டால் கடல் வழி தூரத்திலும் ஆழத்திலும்  மிகவும் குறைந்த இராமேஸ்வரம் – தலைமன்னார் வழியாகவே அமையக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. இந்த மார்க்கத்திலேயே இராமாயண காவியத்தில் கூறப்படும் பாலம் அமைந்த இராமர் மணல் திட்டும் கடலுக்கடியில் காணப்படுகின்றது.

ஆகவே இந்த பாலம் அமைந்தால் கத்தோலிக்க தொன்மங்களும் வரலாறும் பாதிக்கப்படக்கூடும் என பேராயர் மல்கம் ரஞ்சித்து ஊகித்திருக்கலாம். ஆனால் அப்படி ஒரு பாலம் அமைந்து விடக்கூடாது என்று நினைக்கும் பேரினவாத சிந்தனையாளர்கள் இந்த காரணத்தை முன் வைத்து அவரை பேசச்சொல்லியிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

பாலம் அமைவதையெல்லாம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும் எனக் கூறும் பேராயரின் அரசியல் அறிவைப் பற்றி இங்கு பேச ஒன்றுமில்லை. அதன் பின்னணியே இங்கு ஆராயப்பட வேண்டியுள்ளது.    பேராயர் மல்கம் ரஞ்சித்  சிங்கள பின்னணியைக் கொண்டவர்.இவரது முழுப்பெயர் பட்டபென்டிகே டொன் அல்பர்ட் மல்கம் ரஞ்சித் என்பதாகும். பட்டபென்டிகே என்பது இலங்கையின் வரலாற்றில் முதலாளிவர்க்க பின்னணியில் வந்த கராவ இனப்பெயராகும்.

ஆகவே அவர் தமிழ் மக்கள் சார்பாக பேசாமலிருப்பதை ஆச்சரியமாகக் கொள்ள முடியாது. மட்டுமின்றி வடபகுதி யுத்தம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், யுத்தத்தில் சேதமுற்ற வடமாகாண தேவாலயங்கள், அங்கு கொல்லப்பட்டவர்களைப் பற்றி இது வரை பேராயர் வாயே திறக்கவில்லையே அது ஏன் என  கருணாகரம் எம்.பி. கேள்வியெழுப்பியமைக்கும் இதுவே காரணம். 

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பாலம் அமைந்தால், பெளத்த நாடான இலங்கையை இந்தியா ஆக்கிரமித்து விடும் என்ற அச்சம் பெளத்த பிக்குகளுக்கு உள்ளது. ஆனால் இந்தியாவில் தான் பெளத்தம் தோற்றம் பெற்றது என்பதை அவர்கள் மறந்து விட்டனர். அதே போன்று, பாலம் அமைந்தால்  தமது அடையாளங்களும் மறைந்து விடுமோ என கத்தோலிக்கர்களை விட பேராயரே அதிகம் அச்சப்படுகின்றார். 

இந்த அச்சத்தை போக்குவதற்கு பிக்குகளை தூண்டி விட்டு அரசியல் செய்கின்றனர் இனவாத அரசியல் பிரமுகர்கள்.  அதே போன்று இப்போது பேராயரையும் யாரோ தூண்டி விட்டிருக்கின்றார்கள் என்று தான் கூற வேண்டியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27
news-image

புது டில்லி சட்ட பேரவை தேர்தல்:...

2025-02-03 16:39:04