(நா.தனுஜா)
- இலங்கையின் பல்பரிமாணப் பாதிப்புச் சுட்டெண் 0.206 ஆகக் கணிப்பீடு
- மொத்த சனத்தொகையில் 55.7 சதவீதமானோர் நலிவுற்றநிலையில் உள்ளனர்
- உயர் பாதிப்புக்கள் புத்தளத்திலும் குறைந்தளவு பாதிப்புக்கள் மாத்தளையிலும் பதிவு
- பெரும்பான்மையானோரை நலிவடையச்செய்திருக்கும் காரணியாகக் கடன்சுமை கண்டறிவு
இலங்கையில் கல்வி, சுகாதாரம், இயற்கை அனர்த்தம் மற்றும் வாழ்வாதார நெருக்கடி போன்ற பல்பரிமாணத் தாக்கங்களின் விளைவாக நாட்டின் மொத்த சனத்தொகையில் 12.34 மில்லியன் பேர் நலிவுற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வறுமை, அபிவிருத்தி முன்முயற்சி ஆகியவற்றின் புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனித அபிவிருத்தி முன்முயற்சி ஆகியவற்றினால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகள், கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'பல்பரிமாணப் பாதிப்புக்களைப் புரிந்துகொள்ளுதல்: இலங்கை மக்கள் மீதான தாக்கம்' என்ற தலைப்பிலான அறிக்கை வெள்ளிக்கிழமை (1) வெளியிடப்பட்டது.
பல்பரிமாண அடிப்படையில் மக்களை நலிவுற்றவர்களாக உணரவைக்கும் காரணிகள் மற்றும் அவை பொதுமக்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் கடந்த 2022 நவம்பர் மாதம் முதல் 2023 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் தேசிய குடித்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் 25,000 குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாய்வின் பிரகாரம் கடன்சுமை, கல்வியைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் என்பன பெரும்பாலான மக்களை நலிவாக உணரச்செய்யும் காரணிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன. அதேபோன்று கடந்தகாலத்தில் பொருளாதாரத்தின்மீது தொடர்ச்சியாக ஏற்பட்ட அழுத்தங்கள் ஏற்கனவே கட்டமைப்பு ரீதியில் நிலவிய பலவீனங்களை மேலும் மோசமாக்கியதுடன், அது கடந்த ஆண்டு மிகமோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி என்பன வறுமையால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை உயர்வு, உணவுப்பாதுகாப்பின்மை உயர்வு, அவசியமான மருந்து மற்றும் உபகரணப் பற்றாக்குறையின் விளைவாக சுகாதாரக்கட்டமைப்பில் பாதிப்பு, கல்வி நிலையில் சீர்குலைவு, பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு உயர்வான அச்சுறுத்தல், காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றுக்கு வழிவகுத்திருப்பதுடன் இவை தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பல்பரிமாணப் பாதிப்புக்களைப் புலப்படுத்துவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 25,000 குடும்பங்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட இவ்வாய்வு கல்வி, சுகாதாரம் மற்றும் அனர்த்தங்கள், வாழ்க்கைத்தரம் ஆகிய மூன்று பிரதான குறிகாட்டிகளை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வியில் பாடசாலை வரவு மட்டம், ஆண்கள் கல்விபயிலும் ஆண்டுகள், பெண்கள் கல்விபயிலும் ஆண்டுகள் ஆகிய விடயங்களும், சுகாதாரம் மற்றும் அனர்த்தங்களில் உடலியல் நிலை, உணவு, குடிநீர் வசதி, முகங்கொடுத்த அனர்த்தம், அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கான இயலுமை ஆகிய விடயங்களும், வாழ்க்கைத்தரத்தில் சொத்துக்கள், கடன், வேலைவாய்ப்பின்மை, முறைசாரா தொழில்கள் ஆகிய விடயங்களும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி இலங்கையின் பல்பரிமாண பாதிப்புச் சுட்டெண் 0.206 ஆகக் கணிப்பிடப்பட்டுள்ளது. (இச்சுட்டெண் 0 - 1 வரை மதிப்பிடப்படுவதுடன், இங்கு 0 என்பது எவரும் பாதிக்கப்படவில்லை என்பதையும், 1 என்பது அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறிக்கின்றது.
எனவே இக்கணிப்பீட்டின்படி இலங்கையின் மொத்த சனத்தொகையில் 55.7 சதவீதமானோர் பல்பரிமாணப் பாதிப்புக்களால் நலிவுற்ற நிலையில் உள்ளனர். இதனை வேறு விதத்தில் கூறுவதாயின், 22.16 மில்லியன் சனத்தொகையில் 12.34 மில்லியன் பேர் நலிவுற்றிருப்பதாகவும், 10 பேருக்கு 6 பேர் என்ற விகிதத்தில் நலிவுற்றிருப்பதாகவும் கூறமுடியும்.
மேற்குறிப்பிட்டவாறு கல்வி, சுகாதாரம், அனர்த்தங்கள் மற்றும் வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட பல்பரிமாணப் பாதிப்புக்களால் நலிவுற்றிருக்கும் 12.34 மில்லியன் பேரில் பெரும்பான்மையைக் குறிக்கும் 10.13 மில்லியன் பேர் பின்தங்கிய பிரதேசங்களிலேயே வாழ்கின்றனர்.
குறிப்பாக 71.8 சதவீதம் எனும் உயர் பாதிப்புக்கள் புத்தளம் மாவட்டத்திலும், 41.5 சதவீதம் எனும் குறைந்தளவு பாதிப்புக்கள் மாத்தளை மாவட்டத்திலும் பதிவாகியுள்ளன. அதேபோன்று அதிக குடித்தொகையைக்கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முறையே 1.23 மில்லியன் பேர், 1.37 மில்லியன் பேர் பல்பரிமாணப் பாதிப்புக்களால் நலிவுற்ற நிலையில் உள்ளனர். எனவே பின்தங்கிய பிரதேசங்களை இலக்காகக்கொண்டு அவசியமான கொள்கை மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று இந்த ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பெரும்பான்மையானோரை நலிவடையச்செய்திருக்கும் காரணிகளில் கடன்சுமை முக்கியமானது என்றும், இது மொத்த சனத்தொகையில் 33.4 சதவீதமாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் அவர்களில் பலர் உணவு, மருத்துவ வசதி, கல்வி போன்ற அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காகக் கடன்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறதொரு பின்னணியில் நாடளாவிய ரீதியில் நலிவடைந்திருக்கும் சமூகப்பிரிவினருக்கு அவசியமான உதவிகளை வழங்கக்கூடியவகையில் நிலைபேறானதும் செயற்திறன்மிக்கதுமான கொள்கைகளை வகுப்பதுடன் தீர்மானங்களை மேற்கொள்ளல், சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை முன்னெடுக்கும்போது நலிவுற்ற சமூகப்பிரிவினர் தொடர்பான குறிகாட்டிகளில் அதிக கவனஞ்செலுத்தல், முறையான திட்டமிடல் மற்றும் நேர்த்தியான வள ஒதுக்கீட்டின் மூலம் விசேட தேவையுடையோர் மத்தியில் மீளெழுச்சித்தன்மையை வலுப்படுத்தல், குடும்பங்கள் முகங்கொடுக்கும் கடன்சுமையால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை இழிவளவாக்குவதற்கு ஏற்றவாறான நிலைபேறான உத்திகளைக் கையாளல், காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முற்கூட்டிய ஆயத்த செயற்திட்டத்தைத் தயாரித்தல், காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படாத நீர்வழங்கல் கட்டமைப்பினை உருவாக்கல், தரமான கல்வி வழங்கலுக்கான முதலீட்டை விரிவுபடுத்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்த ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM