தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நல்லிணக்க செயன்முறையை தாமதப்படுத்திவிடக்கூடாது

29 Aug, 2023 | 02:54 PM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஒரு வருடத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தோற்றுவிக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் நம்பிக்கையும் தற்போது பின்னடைவைக் காண்பதாக தோன்றுவது ஏமாற்றத்தை தருகிறது. ஜனாதிபதியாக தெரிவானதும் குறுகிய நாட்களில் தேசிய நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்போவதற்கான அறிகுறிகளை விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார்.

மாகாணசபைகளை நிறுவிய 13 வது திருத்தம் நாட்டின் அரசியலமைப்பின் ஒரு அங்கமாக இருப்பதாகவும் அதை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். இலங்கை அதன் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணப்போவதாகவும் அவர் சூளுரைத்தார். 6 மாதங்களுக்கும் அதிகமான காலம் கடந்தும் கூட அது விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மாறாக, உயர்மட்டத்தில் இருந்து மாற்றங்களைச் செய்வதில் ஜனாதிபதிக்கு இருக்கும் வல்லமையில் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகின்ற போதிலும், மாகாணசபைகளின் தேவை குறித்து செல்வாக்கு மிக்க குரல்கள் கேள்வியெழுப்புகின்ற ஒரு நிலை தோன்றி இனப்பிரச்சினைக்கு  தீர்வைக்காணும் முயற்சிகள் நேர்மாறாகிக்கொண்டிருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது.

நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி உறுதிமொழிகளை அள்ளிவீசிய விதம்   அவர் தான் செயற்பட வேண்டியிருக்கும் சூழ்நிலையில் அரசியல் ரீதியில் மிகவும் தந்திரோபாயமாக  செயற்படுகின்றார் என்று ஊகிக்கவைத்தது. பாராளுமன்றம் அவரை ஜனாதிபதியாக தெரிவுசெய்தமை சட்டரீதியானதாகவும் அரசியலமைப்பிற்கு இசைவானதாகவும் இருந்தபோதிலும் நியாயப்பாட்டை இழந்ததாகவே தோன்றியது.

அதனால் அவர் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கவேண்டிய தேவை எழுந்தது. அந்த நேரத்தில் நாடு பிழைத்திருப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவி அவசியமானதாக இருந்தது. போராட்ட இயக்கத்தை புதிய ஜனாதிபதி அடக்கியொடுக்கிய முறை குறித்து மற்றும்படி கடுமையாக கண்டித்திருக்கக்கூடிய சிவில் சமூகக் குழுக்கள் அவற்றின் விமர்சனங்களில் தணிவைக் காட்டின.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மற்றும் இனப்பிரச்சினை போன்ற முக்கிய பிரச்சினைகளை கையாளுவதற்கான அதன் திட்டங்களை முன்வைப்பதில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தின் இயலாமை அல்லது தயக்கம் புயலில் சிக்கியிருக்கும் நாடு என்ற கப்பலுக்கு மிகவும்  பொருத்தமான மாலுமி ஜனாதிபதி விக்கிரமசிங்கவே என்ற எண்ணத்தை தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டேவருகிறது.

நல்லிணக்கச் செயன்முறை தொடர்பில்  இறுதியாக ஜனாதிபதி முன்வைத்திருக்கும் யோசனைகள் உடனடியான அல்லது குறுகிய கால பயன்களைத் தரும் என்ற நம்பிக்கையை தருவதாக இல்லை. பதிலாக அந்த யோசனைகள் நடுத்தர காலம் தொடக்கம்  நீண்டகாலம் வரையான  நோக்கில் கவனம் குவிப்பவையாகவே இருக்கின்றன. இது அடுத்த தேர்தலுக்கு பிறகு தனது திட்டங்களை செயற்படுத்துவதை ஜனாதிபதி மனதிற்கொண்டுள்ளார் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வாசித்த 13 வது திருத்தம் தொடர்பிலான விரிவான  நிலைப்பாட்டு அறிக்கை சுருக்கமான ஒரு சட்டவிளக்கமாக அமைந்தது. அந்த சிக்கல்களை கருத்தில் எடுப்பதாக இருந்தால் அவற்றைக் கட்டவிழ்த்து தமிழ்க்கட்சிகளுடன் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு குறைந்தது ஒரு வருடம் அல்லது அதற்கும் கூடுதலான காலம் எடுக்கும்.

சமூகங்களுக்கிடையில் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான ஒரு அரசியல் செயற்திட்டமாக 13 வது திருத்தத்தை மறுசீரமைப்பது என்பது வெறுமனே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் சாதிக்கக்கூடிய ஒன்று அல்ல. அதற்கு  மிகவும் சிரமம் நிறைந்த பேச்சுவார்த்தைகள் அவசியம். அவற்றுக்கு இரு தரப்புகளினதும் நல்லெண்ணம் அவசியம்.

 ஜனநாயகத் தோல்வி

பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வது ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஒரு கஷ்டமான காரியமாக இருந்ததில்லை. ஜனாதிபதி அவசியம் என்ற கருதிய எந்தவொரு சட்டமூலத்தையும் நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் அதன் பெரும்பான்மை ஆதரவை அரசாங்கம் கொடுத்தே வந்திருக்கிறது. வரியிறுப்பாளர்கள் மீது பாரிய சுமையை ஏற்றிய வரி மறூசீரமைப்பு சட்டமும் இவற்றில் அடங்கும்.

ஆனால், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலமாக சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் வலலமை, மறுசீரமைப்புக்கு சிறுபான்மை இனம் இணங்காத பட்சத்தில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய விவகாரங்களில் ஒரு தீர்வாக இருக்கப்போவதில்லை. உத்தேச சட்டமூலம்  சிறுபான்மை இனத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லையானால், பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடரவே செய்யும்.

இதே காரணத்தை, சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களிடமிருந்து வருகின்ற நெருக்குதல்களுக்கான பதிலாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கும்  பொருந்தும்.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அரசாங்கம் வரைந்திருக்கும் விரிவான சட்டமூலம் அரசாங்கத்தினால் ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றப்படுகின்ற ஒன்றாக நோக்கப்படுமானால், அதற்கு எந்த பெறுமதியும்  இருக்கப்போவதில்லை. அந்த ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் சிறுபான்மையின கட்சிகளின் இணக்கத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே பெறுமதியுடையதாக இருக்கும்.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு தமிழ், முஸ்லிம் சமூகங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் இணக்கம் தேவை. ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலத்துக்கோ அல்லது நிரந்தரமான பொறிமுறையொன்றை அமைப்பதற்கு முன்னதாக ஒரு வருடகாலத்துக்கு அந்த விவகாரங்களைக் கையாளும் என்று எதிர்பார்க்கப்படும் இடைக்காலச் செயலகத்துக்கோ தமிழ் ,முஸ்லிம் கட்சிகள் அவற்றின் இணக்கத்தை தெரிவித்ததற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை.

13 வது திருத்தம் மற்றும் உண்மை ஆணைக்குழு தொடர்பிலான அரசாங்கத்தின் அணுகுமுறையை நோக்கும்போது இனப்பிரச்சினையைக் கையாளுவதற்கான அதன் திட்டத்தை எதிர்காலத்துக்கானதாக குறைந்தபட்சம் தேர்தல்களுக்கு பிறகு ஒரு வருடகாலத்தில் கவனிப்பதற்கான  ஒன்றாக கருதிச் செயற்படுகின்றது என்றே எண்ண வேண்டியிருக்கிறது. தனது வெற்றிக்கும் இருப்புக்குமான சிறந்த வாய்ப்பாக அரசாங்கம் கருதுகின்றதாகத் தோன்றுகின்ற ஜனாதிபதி தேர்தலுக்கானதே  இந்த காலவரையறை.

இதன் காரணத்தினால்தான் ஜனாதிபதி நாட்டின் வடக்கு,கிழக்கிற்கு விஜயங்களை மேற்கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் போன்ற சர்ச்சையில்லாத  விடயங்கள் குறித்து  விபரங்களைக் கூறி  வாக்குறுதிகளை வழங்குகிறார். மன்னாரில் இந்தியவுடனான ரயில் இணைப்பு, கிழக்கில்  திருகோணமலை துறைமுக அபிவிருத்தி ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இதற்கு மாறாக நல்லிணக்கச் செயன்முறையை குறிப்பாக 13 வது திருத்தம் மற்றும் உண்மை ஆணைக்குழு வடிவில் முன்னெடுப்பது அவை குறித்து எச்சரிக்கையாக இருக்கிறவர்கள்  அல்லது அவற்றை எதிர்க்கிறவர்கள்  மத்தியில் ஆதரவை அரசாங்கம் இழக்கவேண்டிய நிலையை தோற்றுவிக்கலாம்.

அரசியல் முதிர்ச்சி அவசியம்

13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கள்  உடனடியாகவே  பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் உள்ள தேசியவாத சக்திகளின் எதிர்ப்புக்குள்ளானது. ஆதிகாரப்பரவலாக்கம் இன அடிப்படையில் நாட்டைப் பிரிவினைக்கு உள்ளாக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது என்று 1950 களில் இருந்து முன்வைக்கப்பட்டுவந்த வாதங்கள் மீண்டும் தற்போது மேலெழுகின்றன.

பெருமளவுக்கு விளம்பரப்படுத்தப்படாத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஒப்பீட்டளவில் பொதுமக்கள் மத்தியில் இருந்து எதிர்மறையான பிரதிபலிப்பு வெளிக்காட்டப்ப டவில்லை.  பெரும்பான்மையான மக்கள் மத்தியில் இவை தொடர்பில் போதிய அறிவு இல்லாதமை இதற்கு காரணமாக இருக்கலாம்.

இந்த பொறிமுறைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு மக்கள் மத்தியில் அரசாங்கம் பிரசாரங்களை முன்னெடுக்கும்போது சர்ர்ச்சை மூளக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அது இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பது தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டங்களை பாதிக்கலாம்.

இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய விவகாரங்கள் அரசியல் சமுதாயத்தில் இருக்கும் தேசியவாத சிந்தனைகொண்ட பிரிவினரால் மீண்டும் களறப்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்த தேசியவாத சக்திகள் பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு பெரிய பின்னவைவைக் கண்டிருந்தன. அதிகாரத்தில் இருந்து ஊழல் முறைகேடுகளைச் செய்தவர்களுடன் இந்த தேசியவாத சக்திகளுக்கு இருந்த தொடர்பை போராட்ட இயக்கத்தவர்கள் அம்பலப்படுத்தினர்.

பாரிய சர்ச்சை மூளக்கூடிய இடமாக வடமாகாணத்தில் உள்ள குருந்திமலை வணக்கத்தலம் விளங்குகிறது. இந்த தலத்துக்கு இந்துக்களும் பௌத்தர்களும் போட்டிபோட்டு உரிமை கோருகிறார்கள்.

இரு மதங்களையும் சார்ந்தவர்களுக்கு இடையில் மோதல்கள் மூளும் சாத்தியமும் இருந்தது. வேறுபட்ட இனங்கள் மற்றும் மதங்களுக்கிடயில் பயமும் அவநம்பிக்கையும் இருப்பதாக நாடு பூராவும்  செய்தி அனுப்பப்படக்கூடிய ஆபத்தும் இருந்தது.

இனரீதியான பீதியும் துருவமயமும் தேர்தல்களின்போது உச்சபட்சத்துக்கு பயன்படுத்தப்படுவது பாரம்பரியமாக இருந்துவருகிறது. மற்றைய சமூகங்கள் பற்றி தங்கள் சமூகத்தின் மத்தியில் பீதியைக் கிளப்புவதைத் தவிர ஆதரவைப் பெறுவதற்கு அரசியல்வாதிகளுக்கு வேறு உருப்படியான மார்க்கமும் இருப்பதாக தெரியவில்லை. இது ஒரு சமூகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லாமல் சகல சமூகங்களக்கும் பொதுவானதாக உள்ளது.

இலங்கையில் இதுகாலவரையில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய மிகவும் தீவிரமான தேசியவாத அரசாங்கம் அதன் உள்ளக குறைபாடுகள் குறிப்பாக தவறான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் ஊழல் காரணமாக வீழ்ச்சியடைந்ததை நாம் கண்டோம். அதிர்ஷ்டவசமாக, தேசியவாத அரசியல்வாதிகள் அபகீர்த்திக்குள்ளாக்கப்பட்டதன் விளைவாக இன ரீதியான வன்செயல்களுக்கு வாய்ப்பு இருக்கவில்லை.

நாட்டை பாதிக்கின்ற பெருவாரியான பிரச்சினைகள் பொருளாதாரம் மற்றும் தேர்தல்கள் மீது கவனத்தைச் செலுத்துகின்ற அதேவேளை  இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கத்துடன் தொடர்புடைய விவகாரங்களையும் கையாளுவதைச் சாத்தியமாக்குகின்றன. இதைச் செய்யவேண்டியது அவசியம். அல்லது இன்னொரு வருடம் வீணாக இழக்கப்படும்.

சரியானதைச் செய்வதற்கும் ஒரு  நேர்மையான எண்ணத்துடன் நடந்துகொள்வதற்கும் இதுவே தருணமாகும். இதை காலந்தாழ்த்த முடியாது. தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கு மாத்திரமல்ல தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்போது சிங்கப்பூரிலும் தென்னாபிரிக்காவிலும் தலைவர்களிடம் காணப்பட்ட அரசியல் முதிர்ச்சி வெளிக்காட்டப்படவேண்டியது இன்றியமையாததாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22