(நெவில் அன்தனி)
இலங்கை கால்பந்தாட்ட விளையாட்டிற்கு புத்துயிர் அளிக்கும் நன்னோக்குடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாக சபைத் தேர்தலில் தக்ஷித சுமதிபால தரப்பினர் போட்டியிட முன்வந்ததால் கலக்கம் அடைந்தவர்கள் மூவேந்தர்கள் எனக்கூறிக்கொண்டு ஒன்றிணைந்துள்ளனர்.
அது மாத்திரமன்றி தக்ஷித தரப்பினரை தேர்தலில் போட்டியிடுவதை எவ்வாறு தடுக்கலாம் என்ற சூழ்ச்சியிலும் ஈடுபட்டுவருகின்றனர். நேர்மையாக தேர்தலில் போட்டியிட திராணி இல்லாததாலேயே இத்தகைய சூழ்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என இலங்கையின் முன்னாள் தேசிய வீரரும் பயிற்றுநருமான தாமோதரன் சந்த்ரசிறி தெரிவித்தார்.
இலங்கை கால்பந்தாட்டத்தை காப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் ஸ்ரீலங்கா சொக்கர் மாஸ்டர்ஸ் அசோஷியன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய தாமோதரன் சந்த்ரசிறி,
'தக்ஷித சுமதிபால போட்டியிட முன்வந்ததால் அந்த மூவரும் கலக்கம் அடைந்து தங்களை மூவேந்தர்கள் என கூறிக்கொண்டு ஒன்று சேர்ந்துள்ளனர்.
அதற்கு முன்னர் அவர்கள் மூவரும் தனித்தனியாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர். அந்த மூவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியதையும் ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.
'சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களான ரஞ்சித் ரொட்றிகோவும் ஜஸ்வரும் ஊடக சந்திப்புகளை ஏற்பாடு செய்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்ற நிதி சம்பந்தப்பட்ட குளறுபடிகள் தொடர்பாக ஊடகங்கள் முன்னிலையில் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியதை முழு உலகமே அறியும்.
40 பக்க அறிக்கையை ஊடகங்கள் முன்னிலையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஜஸ்வர் மீது ரஞ்சித் ரொட்றிகோ குற்றஞ்சாட்டினார். 480 இலட்சம் ரூபா மோசடி தொடர்பான அறிக்கை ஒன்றைக் காட்டி ரஞ்சித் குழுவினருக்கு எதிராக ஜஸவர் குற்றஞ்சாட்டினார். அவர்கள் சம்மேளன அதிகாரிகளாக இருந்துகொண்டே ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினர். அதனை நாங்கள் சொல்லி மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கையோ, விசாரணை செய்ய ஆணைக்குழுவோ தேவையில்லை. சம்மேளனத்திற்குள் இருந்த நிருவாகிககளே அவற்றை வெளியிடும்போது அவை பொய்யாக இருக்க முடியாது' என்றார்.இது இவ்வாறிருக்க, தக்ஷிதவின் தரப்பினரில் சிலருக்கு அரசியல்வாதிகள் சிலர் நெருக்கடிகளைக் கொடுப்பதாகவும் தாமோதரன் சந்த்ரசிறி குறிப்பிட்டார்.
'தக்ஷிதவின் தரப்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்த வேட்பு மனுக்கனை வாபஸ் பெறுமாறு அரசியல் வாதிகள் சிலர் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதுதான் உண்மையான அரசியல் தலையீடாகும். விளையாட்டுத்துறை அமைச்சர் ஊழல் மோசடிகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கை அரசியல் தலையீடு அல்ல.
அது நாட்டில் உள்ள சட்டதிட்டங்களை பின்பற்றி ஊழல் மோசடிகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கையாகும். ஆனால் எமது வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தான் அரசியல் தலையீடாகும். அதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. மோசடிகளைத் தடுக்கவே அமைச்சும் அரசும் இருக்கின்றன. அது மூன்றாம் தரப்பின் தலையீடு என்று கூறமுடியாது.
அரசியல்வாதிகளைப் பயன்படுத்தி எமது வேட்பாளர்களை அச்சறுத்தி வேட்பு மனுக்களை வாபஸ் பெறச் சொல்வதுதான் அரசியல் தலையீடாகும்' என அவர் கூறினார். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று சிலருக்கு தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை என வீடியோ க்ளிப் ஒன்றில் ஜஸ்வர் கூறியிருந்தது எப்படி எனவும் சந்த்ரசிறி கேள்வி எழுப்பினார்.
'இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாக சபைத் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்தரப்பில் சிலருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் அவர்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் எனவும் வீடியோ க்ளிப் ஒன்றில் ஜஸ்வர் கூறியிருந்தார்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது தக்ஷிதவின் தரப்பில் நால்வருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என எவ்வாறு ஜஸ்வர் கூறமுடியும். அவருக்கு என்ன அதிகாரம், உரிமை இருக்கிறது அவ்வாறான கருத்து வெளியிடுவதற்கு அவருக்கு என்ன அருகதை இருக்கிறது என கேட்க விரும்புகிறேன். இவை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டவை எனத் தெரிகிறது' என்றார்.
ஸ்பெய்ன் கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவருக்கு ஒரு சட்டம், இலங்கையில் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு இன்னுமொரு சட்டமா எனவும் சந்த்ரசிறி வினவினார்.
'மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஸ்பெய்ன் உலக சம்பியனான பின்னர் முன்கள வீராங்கனை ஒருவரின் உதட்டில் முத்தம் இட்டதற்காக அந் நாட்டின் கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவருக்கு பீபா தற்காலிக தடை விதித்தது. நிலைமை அப்படி இருக்கும்போது இலங்கையில் விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினர் மோசடிகளில் ஈடுபட்டவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நிலையிலும் அவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்கள் எந்த பலத்தைக் கொண்டு இப்படி செயற்படுகிறார்கள் என கேட்க விரும்புகிறேன்' என்றார்.
நியாயமும் நேர்மையும் கடைப்பிடிக்கப்படவேண்டும்
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் குழுவினர் நடுநிலைத் தன்மையுடன் நேர்மையாகவும் நியாயமாகவும் செயற்படுவார்கள் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
'இலங்கையில் பாண் துண்டை சாப்பிட்டுவிட்டு ப்ளேன் டீயைக் குடிக்கும் மெய்வல்லுநர்கள் பதக்கங்களை வென்று தேசத்திற்கு புகழீட்டிக்கொடுக்கின்றனர். ஆனால், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு எல்லா வளங்களும் நிதியும் கிடைத்தும்கூட ஒரு சிறந்த அணியை சம்மேளனத்தினால் தெரிவு செய்ய முடியாமல் போயுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் சிறப்பாக இருந்த கால்பந்தாட்டம் இன்று மோசமான நிலையில் இருக்கிறது. எனவே இன்றைய நிலை குறித்து கால்பந்தாட்டத்தை உண்மையாக நேசிப்பவர்கள் சிந்திக்கவேண்டும். குறிப்பாக லீக் உறுப்பினர்கள் நீதிக்கு தலைவணங்குவதா அல்லது அநீதிக்கு தூதுபோவதா என்பது குறித்து சிந்தித்து செயற்படவேண்டும்.
'எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கும் தேர்தல் குழுவினர் நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு தங்களது பணிகளை செவ்வனே ஆற்றி கால்பந்தாட்டத்துறையை காப்பாற்றுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். அவர்களது கைகளில்தான் கால்பந்தாட்டத்தின் எதிர்காலம் தங்கியிருக்கிறது' என்றார் தாமோதரன் சந்திரசிறி.
இந்த ஊடக சந்திப்பில் பேசிய ஸ்ரீலங்கா சொக்கர் மாஸ்டர்ஸ் அசோசியேஷன் ஸ்தாபகர் திலக் பீரிஸ், ஓய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினியின் அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டவர்களுக்கு எதிராக விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்காதிருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM