(எம்.மனோசித்ரா)
- ஜனவரி - ஜூலை வரை 17 148 உயர் தொழில் தகைமையுடையோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்
- வைத்தியர்கள் உட்பட மருத்துவதுறைசார் ஊழியர்கள் , அதிகாரிகள் வெளிநாடு செல்வதால் எதிர்கொள்ள நேரிட்டுள்ள நெருக்கடிகளுக்கு இதுவரை மாற்று தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பொது நிர்வாக அமைச்சுக்கு மே மாதம் அனுப்பிய கடிதத்துக்கும் பதில் இல்லை - பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர்.என்.விக்கிரமராச்சி
கொவிட் தொற்று அதன் பின்னர் ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களால் சுதந்திரத்தின் பின்னர் கடந்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது.
இதனால் எவ்வித பாகுபாடுமின்றி நாட்டு மக்கள் அனுபவித்த துன்பங்களை மீண்டும் மீண்டும் விபரித்து தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை. இவ்வாறு பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் , அதிலிருந்து மீள்வதற்கு நிதி மாத்திரமின்றி மனித மூலதனமும் இன்றியமையாத ஒன்றாகும்.
மனித மூலதனம் வெளியேறுதலானது பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் நிலைப்பாடாகவுள்ளது. இந்த மனித மூலதன வெளியேற்றத்தை இரு வகைப்படுத்தலின் கீழ் பார்க்கலாம். அவற்றில் ஒன்று பயிற்சி அல்லது திறன்கள் அற்ற தொழிலாளர்களாகும்.
மற்றையது மூளைசாளிகளாகும். அதாவது வைத்தியர்கள் , பேராசிரியர்கள் , பொறியியலாளர்கள் போன்றவர்களாகும். இவற்றில் முதலாவது வகைப்படுத்தலின் அடிப்படையில் வெளிநாடுகளுக்குச் செல்லல் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருகிறது. ஆனால் மூளைசாளிகளின் வெளியேற்றமானது சுகாதாரம் , கல்வி உள்ளிட்ட முக்கிய சேவைகளை பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு பெறும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையின் படி தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளோர் எண்ணக்கை 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் , 2022இல் 154.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2021இல் 122 264 ஆகக் காணப்பட்ட வெளிநாடு சென்றுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 2022இல் 311 056 ஆக அதிகரித்துள்ளது. கல்வி கற்ற உயர் தொழில் தகைமையுடைய 14 307 பேர் கடந்த ஆண்டு வெளிநாடு சென்றுள்ளனர்.
உயர் தொழில் தகைமையுடைவர்கள் , நிடுநிலை தகைமையுடையவர்கள் , அலுவலக வேலைகளுடன் தொடர்புடையவர்கள் , பயிற்சி பெற்றவர் , குறைந்தளவு பயிற்சி பெற்றவர்கள் , பயிற்சி பெறாதவர்கள் மற்றும் வீட்டுப்பணிப்பெண்கள் என்ற வகைப்படுத்தலின் கீழ் கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக 311 056 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளின் இதன் வளர்ச்சி போக்கினை கீழுள்ள அட்டவணையின் ஊடாகக் காணலாம்:
ஆனால் தற்போது சகல துறைகளும் எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடி யாதெனில் அந்தந்த துறைகளில் தொழில் சார் நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் லெ;வதாகும். மேற்கூறப்பட்ட உயர் தொழில் தகைமையுடையோர் என்ற வகைப்படுத்தலில் சுமார் 583 வகைகளின் கீழ் கடந்த 7 மாதங்களில் 17 148 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. கடந்த ஆண்டில் ஒட்டு மொத்தமாகவே 14 513 பேர் சென்றுள்ள நிலையில் , இவ்வாண்டின் அரையாண்டில் அந்த எண்ணிக்கையை விட மேலும் 3000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வெளியேறியுள்ளவர்களில் பெருமளவானோர் பொறியியலாளர்களாவர். மேலும் பொது முகாமையாளர்கள் , கணக்கியலாளர்கள் , அளவியலாளர்கள் , விற்பனை நிர்வாகிகள் , நிர்வாக அதிகாரிகள் , மென்பொருள் பொறியியலாளர்கள் , தொழில் நிர்வாக அதிகாரிகள் , சமையல் கலை நிபுணர்கள் , உதவி மேற்பார்வையாளர்கள் , சிவில் பொறியியலாளர்கள் , வைத்தியர்கள் , ஆலோசகர்கள் , விசேட நிபுணர்கள் , இயந்திரவியல் பொறியியலாளர்கள் , விமான பொறியியலாளர்கள் , உதவி ஆசிரியர்கள் , விமானிகள் , தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப வியலாளர்கள் என பலதுறைசார் நிபுணர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியர்கள் நாட்டிலிருந்து செல்வதால் சகலவிதமான மருத்துவ சேவைகளும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக வைத்திய சங்கங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இதய நோய் அறுவை சிகிச்சை பிரிவு , சிறுவர்களுக்கான சத்திரசிக்சை பிரிவு , மகப்பேற்றுப் பிரிவு , புற்று நோய் சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில் இவ்வாண்டில் கடந்த 7 மாதங்களில் 404 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு முழுவதிலும் 123 வைத்தியர்கள் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக சுகாதார அமைச்சிடம் கோரப்பட்ட தகவல்களுக்கு போதுமான பதில்கள் கிடைக்கவில்லை. சுகாதார அமைச்சிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் மருத்துவதுறைசார் ஊழியர்கள் உட்பட 192 பேர் மாத்திரமே வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு இவ்வாறு மருத்துவறை சார் அதிகாரிகளும் , ஊழியர்களும் வெளிநாடு செல்வதால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இதுவரையிலும் எவ்வித மாற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) வைத்தியர் ஆர்.என்.விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக எம்மால் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறான பதிலே கிடைத்துள்ளது. அது மாத்திரமின்றி ஊழியர் பற்றாக்குறையால் சுகாதாரத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் கடந்த மே மாதம் 31ஆம் திகதி பொதுநிர்வாக அமைச்சுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் , இருந்தும் எவ்வித மாற்று திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படப்படவில்லை என்றும் வைத்தியர் ஆர்.என்.விக்கிரமாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு திறைசேரி எதிர்கொண்ட அந்நிய செலாவணி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாடுகளில் சென்று தொழில் புரிவதற்காக சம்பளமற்ற 5 ஆண்டு விடுமுறையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்தது. அதன் பின்னர் சகல அரச துறைகளிலும் உத்தியோகத்தர்கள் வெளிநாடு செல்லும் வீதம் அதிகரித்துள்ளது.
இதனால் இன்று கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ள போதிலும் , அந்த தீர்மானத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து இதுவரையில் சிந்திக்கவில்லை என்று தொழில் அமைச்சு கூறுகின்றது. வைத்தியர்கள் , மருத்துவதுறைசார் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளடங்களாக 500க்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் , இது தொடர்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சுகாதார அமைச்சரால் நேரடியான பதில்கள் வழங்கப்படுவதில்லை.
இதே வேளை பல்வேறு தொழில் வல்லுனர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையால் ஏற்றுமதித்துறை தற்போது பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை சுட்டிக்காட்டுகின்றது. தேசிய ஏற்றுமதியாளர்கள் சபையின் தலைவர் ஜயந்த கருணாரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில் ,
'நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் , அறிவுடையவர்கள் இலங்கையை விட்டு வெளியேறுகின்றனர். 2 மாதங்களுக்கு முன்னர் அறிவித்தல்களை வழங்கி உடன் வெளியேறுகின்றனர். ஆனால் 2 மாதங்களில் எம்மால் பதிலீடுகளை வழங்க முடியாது. எமது தொழிற்துறையை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறையொன்று இல்லாமலுள்ளது என்றார்.
இந்த திறமைசாளிகளின் வெளியேற்றத்தில் பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் , ஆசிரியர்கள் , உதவி ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் உள்ளடங்குகின்றனர். அந்த வகையில் இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் தெரிவிக்கையில் ,
இந்த அழகிய இயற்கை வளமும் , மனித வளமும் காணப்படும் நாட்டிலிருந்து திறமைசாளிகள் வெளியேறுவதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. நாட்டின் ஆட்சி முறைமையில் நம்பிக்கை இழப்பு , பொருளாதார முறைமையில் நம்பிக்கை இழப்பு , தங்களது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப தொழில் வாய்ப்புக்களை பெறுவதில் நம்பிக்கை இழப்பு , தொழில் வாய்ப்புக்களைப் பெற்றாலும் அதற்குரிய ஊதியமும் வசதி வாய்ப்புக்களும் கிடைக்குமா என்பதில் நம்பிக்கையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதில் செல்வாக்கு செலுத்துகின்றன.
இவற்றுக்கு மேலதிகமாக ஆட்சியாளர்கள் செய்த தவறுகளால் நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளை தாங்கிக் கொள்வதற்காக இவர்கள் மீது நியாயமற்ற முறையில் வரிச்சுமை சுமத்தப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் மிக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்ட நாடாக ஜப்பான் காணப்படுகிறது. ஆனால் பாதிப்புக்களைக் கண்டு அஞ்சி அங்குள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை.
அந்நாட்டு பிரஜைகள் துன்பங்களுக்கு மத்தியிலும் அங்கேயே தங்கியிருந்து கடுமையாக உழைத்ததன் பயனாகவே இன்று ஜப்பான் அபிவிருத்தியடைந்த நாடாகியிருக்கிறது. இதனால் அங்குள்ள மக்களுக்கு ஜப்பானின் ஆட்சி முறைமையிலும் , பொருளாதார முறைமையிலும் வலுவான நம்பிக்கை காணப்படுகிறது.
எனவே இலங்கையிலிருந்து திறமைசாளிகள் வெளியேற்றத்தை தடுக்க வேண்டுமெனில் ஆட்சியாளர்களும் , ஆட்சியில் செல்வாக்கு செலுத்துபவர்களும் சிந்தித்து சிறந்த ஆட்சிக்காகவும் , சிறந்த பொருளாதாரத்துக்காகவும் செயற்பட வேண்டும். அவ்வாறு சிந்தித்து செயற்படத் தவறினால் நாட்டிலிருந்து திறமைசாளிகள் வெளியேறுவதை தவிர்க்க முடியாது என்றார்.
மூளைசாளிகளின் வெளியேற்றம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள பொருளாதார நிபுணர் ரெஹாணா தௌபிக் ,
துரதிர்ஷ்டவசமாக மூளை சாலிகள் வெளியேற்றம் என்பது இலங்கைக்கு புதிதல்ல. இதற்கு முன்னர் பல்வேறு இடப்பெயர்வு அலைகளை எதிர்கொண்டிருந்த நாம் தற்போது இந்த பிரச்சினைக்கும் முகங்கொடுத்து வருகின்றோம். தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் போன்ற பல திறமையான தொழிலாளர்கள் நாட்டின் நிலை குறித்து மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நிச்சயமற்ற மற்றும் நிலையற்ற பொருளாதார நிலையில் மக்கள் வாழ விரும்பவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறார்கள். எனவே அவ்வாறானவர்கள் பசுமையான இடங்களைத் தேடிச் செல்கின்றனர்.
பொருளாதார நெருக்கடிகளின் போது இந்த வகையான மனித மூலதனம் வெளியேறுவது பொதுவானது. மனித மூலதனம் வெளியேறுதல் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக இளம் மற்றும் திறமையான தொழிலாளர்கள் அல்லது வரிவிதிப்பு மூலம் பொருளாதாரத்துக்கு பங்களிக்கக்கூடியவர்களின் வெளியேற்றத்கைக் குறிப்பிடலாம்.
18-29 வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவீதமானோர் இடம்பெயரத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவர்களின் பொருளாதார அபிலாஷைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்கின்றார்.
இவ்வாறிருக்க அண்மையில் நுகேகொட - அனுலா வித்தியாலய பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , '1970 - 1980களில் ஆடை தொழிற்துறையில் பிரவேசிப்பதற்கு தயாரானதைப் போன்று தற்காலத்தில் பல்வேறு தொழிற்துறைகள் ஊடாக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் தயாராக வேண்டும் என தெரிவித்தார்.
'இன்று நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாதளவுக்கு நவீன அறிவியல் மாறப்போகிறது. குறிப்பாக ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவு , ரொபோடிக் தொழிநுட்ப நுண்ணறிவு , ஆற்றல் சேமிப்பு , எரி சக்தி சேமிப்பு உள்ளிட்ட அனைத்தையும் முன்னோக்கிக் கொண்டு சென்றால் நாட்டின் பொருளாதாரமும் மாற்றமடையும். வாழ்க்கை முறைமையும் மாற்றமடையும்.
இந்த 5 - 6 தொழிநுட்பங்களால் அனைத்தும் மாற்றமடையும். இதற்கு இப்போதே தயாராக வேண்டும். அந்த இலக்கை அடைய எமது கல்வி முறைமையில் மாற்றங்கள் அவசியமாகும். பல பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆங்கில மொழியில் தேர்ச்சியை அதிகரித்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.' என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறு தொழிநுட்பத்தை நோக்கிய இலக்கு நோக்கி பயணிப்பதற்கு அறிவாற்றல் மிக்க மனித வளம் இன்றியமையாதது என்பதை ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு அனுபவம் மிக்கவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு முறையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். மாறாக இவ்விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் பாரா முகமாகவே காணப்படுமானால் இன்றைய சந்ததி மாத்திரமின்றி , இனிவரும் சந்திகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM