எம்.எஸ்.தீன்
நாட்டில் ஏற்கனவே விதைக்கப்பட்ட இனவாத விஷ வித்துக்களை இன்னும் முற்றாக அழித்துக் கொள்ள முடியாமல் ஜனநாயகத்தின் மீதும், மூவின மக்களின் ஒற்றுமை மீதும் பற்றுக் கொண்டவர்கள் தவிக்கின்றனர். மறுபுறத்தில் இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவித்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்ளும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இனவாத தூண்டுதல்களினால் உணர்ச்சி வசப்பட்டு மோதிக்கொள்ளும் மன நிலையில் இருந்து மூவின மக்களும் மாறியுள்ளார்கள். அதாவது, இனவாதத்தை மக்களிடையே பரப்பி அரசியல் இலாபம் தேடிக் கொண்டதோடு, நாட்டையும் குட்டிச் சுவராக்கியுள்ளனர் என்ற உண்மையையும், கடந்த காலங்களில் நடைபெற்ற இனரீதியிலான மோதல்களிலிருந்தும் மக்கள் சிறந்த பாடத்தை கற்றுள்ளார்கள் என்பதும் தெளிவாகின்றது.
ஆனால், அரசியல்வாதிகள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மக்களிடையே மீண்டும் இனவாதத்தை தூண்டி அரசியல் இலாபம் தேடிக்கொள்ளலாமென்றே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரிக்கு பின்னர் நடைபெறலாம் என்றதொரு அரசியல் நகர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில் ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய கதையாடல்களை ஏற்படுத்தி மக்கள் மனதில் சந்தேகங்களையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதற்குரிய முயற்சிகளை எடுக்கின்றனரா என்று கருத வேண்டியுள்ளது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று தற்கொலை தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன்னதாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் குறித்துப் பேசப்பட்டது. நாட்டில் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளன என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆனால், அது குறித்து அன்றைய அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பினரும் போதிய கவனம் செலுத்தவில்லை.
இத்தகைய பின்னணியில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலை தாக்குதல்கள் நடைபெற்றன. இத்தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தமையால் முஸ்லிம் சமூகத்தின் மீது பல கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம்களின் வீடுகள் பாதுகாப்பு தரப்பினரால் சோதனையிடப்பட்டன.
பாண், பழம் வெட்டும் கத்தியைக் கூட வீடுகளில் வைத்திருக்க முடியாத நிலையில் முஸ்லிம்கள் இருந்தார்கள். வீதிகளில் நடமாடுவதற்கு கூட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. முஸ்லிம்களை ஏனைய சமூகத்தினர் பயங்கரவாதிகளாகவே பார்த்தார்கள். பள்ளிவாசல்களிலும், குர்ஆன் மதரஸாக்களிலும் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். முஸ்லிம் அரசியல்வாதிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தார்கள்.
ஆயினும், இத்தாக்குதலானது தேர்தல் வெற்றிக்காக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனை நிறைவேற்றுவதற்கு தாக்குதல்களை மேற்கொண்ட குழுவினரை பயன்படுத்திக் கொண்டதாகவும் பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் பரவலாக பேசப்பட்டன. இன்று வரை ஏப்ரல் 21ஆம் திகதித் தாக்குதல்கள் பற்றிய உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தாத நிலையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இப்போது மீண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிப் பெற்ற 25 பேர் நாட்டுக்குள் உள்ளார்கள் என ஜனாதிபதிக்கு நெருக்கமானவரும், ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வஜிர அபேவர்தனவின் இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக கருதி இருந்து விட முடியாது. இது விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் அமைப்புக்களும் கூடிய கரிசனை கொள்ள வேண்டும். இதன் உண்மைத் தன்மையையும், அதன் பின்னணியையும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிப் பெற்ற 25 பேர் நாட்டுக்குள் உள்ளார்கள் என்ற பேரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றார்களா அல்லது இத்தகைய கருத்துக்களை மக்களிடையே பரப்பி மக்களை பீதியில் வைத்துக் கொண்டு தேர்தல் வெற்றிக்கான நகர்வுகளை மேற்கொள்ளப் போகின்றார்களா என்று ஆராய வேண்டும்.
வஜிர அபேவர்தனவின் இக்கருத்து பற்றி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது அரசாங்கத் தரப்பினர் எவரும் பதிலளிக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல்தாரிகள் நாட்டில் உள்ளார்கள் என்று தெரிவித்து நாட்டை மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளி ஆட்சியை கைப்பற்றும் திட்டமா இது என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழல் மோசடியாலும், இனவாத அரசியலாலும் நாடு மிக மோசமான வகையில் பொருளாதாரப் பின்னடைவைக் கண்டுள்ளது. ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துக் கொண்டாலும், எந்தவொரு நடவடிக்கைளையும் எடுக்காது ஊழல்வாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளையே அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்படுகின்றன.
இனவாதக் கருத்துக்களும், அது தொடர்பான நடவடிக்கைகளும் மெல்லமெல்ல தீவிரமடைந்து கொண்டு வருவதை அவதானிக்கக் முடிகின்றது. இவ்வாறுதான் 2019 ஏப்ரல் தாக்குதல்களுக்கு முன்னதாக முஸ்லிம்களுக்கு எதிராக பல முனையிலிருந்தும் இனவாதக் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. அத்தகைய கருத்துக்கள் ஒரு திட்டமிடலின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டன.
அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், மறுபக்கத்தில் இனவாத கருத்துக்களும், முரண்பாடுகளும் தோற்றம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனர். இத்தகைய இனவாத செயற்பாடுகள் தீவிரமடையுமாயின் வெளிநாட்டு முதலீட்டாளர்களும், சுற்றுலா பயணிகளும் நாட்டுக்கு வருவார்களா என்று சிந்திக்க வேண்டும். வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இந்த நல்ல சூழலை இல்லாமல் செய்வதற்கே இத்தகைய இனவாத கருத்துக்கள் துணையாக அமையும்.
குருந்தூர்மலை விவகாரத்தால் இலங்கையில் மீண்டும் இனக் கலவரம் தோற்றம் பெறும் சூழல் காணப்படுவதாக இந்திய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இனவாதத்தைத் தூண்டி விட்டு நாட்டில் மீண்டும் யுத்தத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை மிகத் தீவிரமாக முன்னின்று விதைத்தவர்களே நாட்டில் இனவாதம் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றது, அரசாங்கம் அதனை தடுக்க வேண்டுமென்று இன்று சொல்லிக் கொண்டிருப்பதன் பின்னணியில் நிச்சயமாக அரசியல் இருக்கின்றது. கடந்த கால அனுபவங்கள் இதனை எமக்கு தெளிவூட்டுக்கின்றன.
பௌத்த விகாரைக்குரிய காணி என்றும், தமிழர்களின் காணி என்றும், முஸ்லிம்களின் காணி என்றும், அரச காணி என்றும், வடக்கு, கிழக்கு இணைப்பு என்றும் கருத்துக்கள் முன் வைக்கப்படும் அதே வேளையில் அக்கருத்துக்களுடன் இன ரீதியான சிந்தனையும் ஆதிக்கமும் வெளிப்படுதைக் காண்கின்றோம். இக்காணி விவகாரங்கள் அரச உயர் அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்டவை. அவை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன் வைப்பதில் எந்தத் தவறும் கிடையாது.
ஆனால், தமது இனத்தினர் தம்மை வீரனாக கருத வேண்டும் என்பதற்காகவும், அதன் மூலமாக தங்களின் அரசியல் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்ற முறையில் சண்டித்தனமான கருத்துக்களை முன்வைப்பது நாகரிகமற்றதாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் இனத்திற்காக குரல் கொடுக்க வேண்டும். அதற்காகவே அவர்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். தங்கள் இனத்திற்காக குரல் கொடுப்பதை கடமை என்று சொல்லிக் கொண்டு அடுத்த சமூகத்தின் உரிமையை மீற முடியாது. அவ்வாறு மீறும் வகையில் செயற்படுவோரை சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று கருத முடியாது. மக்களின் உணர்ச்சியை தூண்டி அரசியல் இலாபம் தேடுவோரின் செல்வாக்கு நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்காது. இதுவே தர்மத்தின் போதனையாகும்.
ஆகவே, வடக்கு, கிழக்கு இணைப்பும், பிரிவும், குருந்தூர்மலை விவகாரம் மற்றும் மட்டக்களப்பு நாவலடி காணி பிரச்சினை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கும் செயற்பாடுகளை யார் எடுத்தாலும், அவர் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் அதற்கு மூவின மக்களும் தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
இனப் பிரச்சினை, யுத்தம், வறுமை போன்ற எதுவாக இருந்தாலும் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே. ஆதலால், அரசியல்வாதிகளின் பதவிப் பசிக்கும், நாற்காலி போட்டிக்கும் நாம் பலியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இன ரீதியான மோதல்களை ஏற்படுத்தி தேர்தலை பிற்போடுவதற்கும், வேறு காரணங்களை கூறி இன்றைய ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதற்கும் காணி பிரச்சினை உள்ளிட்ட வடக்கு, கிழக்கு இணைப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது. ஜனநாயகத்தை அரசியல்வாதிகளின் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்திற்காக கிடப்பில் போடவும் முடியாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM