ஏ.எல்.நிப்றாஸ்
அழகு கிறீம்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் 'இரண்டே வாரத்தில் முகத்தில் உள்ள தழும்புகள், பருக்கள் எல்லாம் நீங்கி முகம் பிரகாசமாகி அழகாகி விடுவீர்கள்' என்றுதான் ஆண்டாண்டு காலமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், இரண்டே வாரத்தில் யாரும் அப்படி வெண்மையாக மாறியதாக சரித்திரமில்லை.
இரண்டே வாரத்தில் முகம் புதுப்பொலிவு பெற்றுவிடும் என்பது உண்மையாக இருந்திருந்தால், அழகு கிறீம்களை பயன்படுத்தியோர் எல்லோரும் மூன்றாவது வாரத்திலேயே அழகிகளாக, அழகன்களாக மாறியிருப்பார்கள் அவற்றை விற்பனை செய்கின்ற நிறுவனங்கள் எல்லாம் இழுத்து மூடப்பட்டிருக்கும். ஆனால், அப்படியெதுவும் நடந்ததில்லை.
அதாவது, இரண்டு கிழமைக்குள் (பக்கவிளைவுகள் எதுவுமின்றி) உங்களை அழகியாக்கி விட முடியாது. சரி, அப்படிச் செய்து விட்டாலும் கூட, அதற்கு பிறகு அந்த கிறீம்களை விற்பதற்கு புதிய வாடிக்கையாளர்களை அந்த நிறுவனம் தேட வேண்டும். ஆகவே, 'இரண்டு வாரங்களில் முகத்தில் உள்ள பிரச்சினைகள் தீரும்' என்று சொல்லிச் சொல்லியே பத்து, இருபது வருடங்களாக அந்த நிறுவனங்கள் மிகத்தந்திரமாக வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பதே நிதர்சனமாகும்.
இது, முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகளுக்கு மட்டுமன்றி, ஏகப்பட்ட பிரச்சினைகளும் சூட்சுமங்களும் நிறைந்த உலக அரசியலுக்கும் பொருந்தும். மிகக் குறிப்பாக இலங்கையின் ஆளுகைக்கும், பெருந்தேசிய மற்றும் சிறுபான்மை அரசியலுக்கும் கனகச்சிதமாக பொருந்தக் கூடிய ஒரு உவமானமாகும்.
ஒவ்வொரு காலத்திலும் ஆட்சியாளர்களும் சரி, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் சரி, மக்களை ஏதோ ஒரு விடயத்தின்பால் பராக்குக்காட்டி, பொய்யான கதைகளைக் கூறிக் கொண்டு, ஒரு நாடக பாணியிலான அரசியலின் ஊடாக காலத்தை இழுத்தடித்து வருவதைக் காண்கின்றோம். இருப்பினும் இந்தப் பின்னணியில், மக்களின் பிரச்சினைகள் 'பிச்சைக்காரனின் புண்' போலவே இருக்கின்றன.
தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குறிப்பாக இனப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாக பல தசாப்தங்களாக கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக அவர்கள் முயற்சி செய்தார்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், அது நடைமுறைச் சாத்தியமாகவில்லை.
ஒவ்வொரு கிறீமிலும் அதிருப்தியுற்று மாறி மாறி எல்லா கிறீம்களையும் பாவிக்கின்ற ஒருவரைப் போல, ஒவ்வொரு அரசாங்கத்திடமும் நம்பிக்கையுடன் பேசி, பல மாதங்கள் கடந்த பிறகு கடைசியில் அந்த முயற்சியில் தமிழ் அரசியல்வாதிகள் மனம் வெறுத்துப் போவதையும் தமிழ் மக்கள் நம்பி ஏமாறுவதையும் தொடர்ந்தும் கண்ணுற்று வருகின்றோம்.
இதைவிட மோசமான நிலையிலேயே முஸ்லிம் சமூகம் இருக்கின்றது எனலாம். ஒவ்வொரு வகையான கிறீமை விளம்பரம் செய்கின்ற பல்தேசியக் கம்பனிகள் போல, முஸ்லிம் அரசியல் தலைவர்களும், அணிகளும் வேறுபட்ட அரசியல் சித்தாந்தங்களை முஸ்லிம் சமூகத்தினிடையே சந்தைப்படுத்தி வருகின்றன. பாடல்களும் பசப்பு வார்த்தைகளும் இங்கு விளம்பரங்களாகின்றன.
தமக்குப் பின்னால் முஸ்லிம் மக்கள் அணிதிரண்டால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கலாம் என முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறி வருகின்றார்கள். 'எங்களுடைய கிறீம் மட்டுமே பயன்தரக் கூடியதும் பாதுகாப்பானதும்' என்று கூறுகின்ற கம்பனி விளம்பரங்களைப் போல இவர்களின் பரப்புரைகள் உள்ளன. ஆனால், 30 வருடங்களாக முஸ்லிம்களின் பிரச்சினைகள் அப்படியேதான் இருக்கின்றன.
இதேவேளை, பெருந்தேசியக் கட்சிகளின் அரசியல் என்பது அழகு கிறீம்களை போன்றது மட்டுமன்றி, கடுமையான பக்க விளைவுகளை தரக் கூடிய மாத்திரைகளை விற்பனை செய்கின்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒத்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
அதிகாரத்திற்கு வர நினைக்கின்ற ஒவ்வொரு பெருந்தேசியக் கட்சிகளும் 'தமக்கு மக்கள் ஆணை தந்தால் எல்லாப் பிரச்சினைகளையும் இரண்டே மாதத்தில் தீர்த்து வைப்போம்' என்கின்றார்கள். ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு அரசாங்கமும் 'இதோ ஒவ்வொரு சமூகத்தின் அபிலாசைகளும் கூடிய விரைவில் தீர்க்கப்பட்டு விடும்' என்று சொல்லிக் கொண்டே வருகின்றார்கள்.
ஆனால், அந்தப் பரப்புரைகளுக்கு சமமான நன்மைகள், தீர்வுகள் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது. மாறாக, நாட்டில் உள்ள பிரச்சினைகள் காலத்திற்கு காலம் வேறு வடிவில் உருவெடுக்கின்றன. புதுப்புது குழப்பங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. ஒரு நோய்க்கு உள்ளெடுக்கப்படுகின்ற மாத்திரைகள் பக்கவிளைவாக இன்னுமொரு நோயை ஏற்படுத்தி விடுவதைப் போல, நாட்டில் எதிர்வினைச் சம்பவங்கள் நடந்தேறுவதைக் காணலாம்.
இப்போதும் நாட்டில் இந்த நிலைமைகளை கூர்ந்து பார்ப்பதன் மூலம் அவதானிக்கலாம். அதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு பற்றி பேசி வருகின்றார். அந்த வகையில் 13ஆவது திருத்தத்தை பெருமளவுக்கு அமுல்படுத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக கருதலாம் அல்லது அப்படியான ஒரு விம்பம் உள்ளது.
ஆனால், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே ஒரு தரப்பினர் இதனை எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஜனாதிபதி தரப்பில் இருந்து காத்திரமான பதிலடி எதுவும் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதைவிட மிக முக்கியமான விடயம், நாட்டில் அண்மைக்காலமாக மேலெழும் இனவாத செயற்பாடுகளும் பயங்கரவாதம் பற்றிய அச்சமூட்டல்களும் ஆகும்.
அரசாங்கம் பொதுவில் நல்லிணக்கம் பற்றியும், இனங்களின் ஒற்றுமை பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றது. அதற்கு சமாந்தரமாக இனப் பிரச்சினை தீர்வு பற்றிய உரையாடல்களும் இடம்பெறுகின்றன. மறுபுறத்தில், அதற்கு முற்றிலும் தலைகீழான நடவடிக்கைகளை சில அரச நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் மத குருக்களும் சமகாலத்தில் மேற்கொண்டு வருவதையும் காண்கின்றோம்.
குருந்தூர்மலை பிரதேசம் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் நில ஆக்கிரமிப்பு உத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கள அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதற்கு பதிலாக தமிழ் அரசியல்வாதிகள் சவால்விடும் பாணியில் கூறுகின்ற கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
இவையெல்லாம் இன முறுகலை, முரண்பாட்டை தோற்றுவிக்கும் என்பது தெட்டத்தெளிவான விடயமாக இருக்கின்ற போதும், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில், சமூகங்களுக்கு இடையில் இன முறுகல் ஏற்படலாம் என்ற பாணியிலான சமூக வலைத்தளப் பதிவுகளும் பரப்பப்பட்டு வருகின்றன.
நீதிபதிக்கு மனநோய் என்று கூறுகின்ற சரத் வீரகேசரவுக்கும், தமிழர்களின் தலையை கொய்து கொண்டு வருவேன் என்று கூறுகின்ற மேர்வினுக்கும் வாய்ப்பூட்டு போடப்படவில்லை. இனவாத கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. மாறாக, அவ்வாறானவர்களுக்கு 'சலங்கை கட்டி' விடுகின்ற வேலையைதான் இனவாதிகள் செய்து கொண்டிருப்பதாக தெரிகின்றது. இப்படித்தான் கடந்த காலத்தில் முஸ்லிம்களும் நெருக்குவாரப்படுத்தப்பட்டனர் என்பது நினைவு கொள்ளத்தக்கது.
இது இவ்வாறிருக்க, பயங்கரவாத அமைப்பொன்றில் பயிற்சி பெற்ற சிலர் இலங்கையில் இருப்பதாகவும், குருந்தூர்மலையை மையப்படுத்தி இனக் கலவரம் வெடிக்கலாம் என்றும் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக பாராளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.
ஆனால், அப்படியான முரண்பாடுகள் குறித்து சர்வதேச புலனாய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கவில்லை என்று பின்னர் அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும், அறிக்கை விடுவதற்கு அப்பால், களத்தில் இறங்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஏதாவது காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பதுதான் இங்குள்ள வினாவாகும்.
இனப் பிரச்சினை தீர்வு, 13ஆவது திருத்த அமுலாக்கம் போன்ற விடயங்களை ஜனாதிபதி தரப்பு முன்னெடுத்து வருகின்ற காலப் பகுதியில், நில ஆக்கிரமிப்பு, மத மேலாதிக்க சிந்தனை ஆகியவற்றின் ஊடாக இன முரண்பாட்டை ஏற்படுத்த முற்படுவதும், மக்கள் நிம்மதியாக வாழ எத்தனிக்கின்ற வேளையில் மீண்டும் ஏதோ ஒரு அடிப்படையில் பயங்கரவாத பூச்சாண்டி காட்ட முற்படுவதும் தற்செயலான சம்பவங்கள் என்ற முடிவுக்கு வந்து விட முடியாது.
நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பொருளாதார குறிகாட்டிகள் பலவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உள்நாட்டு பொறிமுறையை மேம்படுத்துவதை விட வெளிநாட்டு கடன்களை நம்பி இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதால், இந்த மீட்சி எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது நிச்சயமற்றதாக உள்ளது
அதேநேரம், மீண்டும் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன் பல பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. மீண்டும் ஒரு பொருளாதார 'முட்டுச் சந்தை' நோக்கி பயணிக்கின்றோமா என்ற கவலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனலாம்.
இந்தப் பின்னணியில் நாட்டில் இடம்பெறுகின்ற சில சம்பவங்கள் இந்த யதார்த்தங்களை விட்டும் மக்களை வேறு திசைக்கு பராக்கு காட்டும் முயற்சிகளா, அபத்தமான ஏமாற்று அரசியலா என சிந்திக்க வேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி, சிறுபான்மை மக்களின் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், அடுத்த தேர்தல் வரை மக்களை கொதிநிலையில் வைத்திருந்து, பேய்க்காட்டி, அரசியல் செய்வதற்கும் இன, மத முரண்பாடுகளும் பயங்கரவாதம் குறித்த கதைகளும் திட்டமிட்டு அவிழ்த்து விடப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழாமலில்லை.
அழகு கிறீம்களுக்குப் பின்னாலுள்ள பில்லியன் டொலர் வியாபார உத்தியைப் பற்றிச் சிந்திக்காமல், அவை முற்றுமுழுதாக தங்களது முகத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மட்டுமே சந்தைக்கு வருகின்றன என முட்டாள்தனமாக நம்புகின்ற பதின்ம வயது யுவதிகளைப் போல, நாட்டில் நடக்கின்ற சம்பவங்கள் எல்லாம் மக்கள் நலனை மட்டுமே நோக்காகக் கொண்டவை என நினைத்துக் கொண்டு மக்கள் கண்மூடித்தனமாக இருக்க முடியாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM