நாகப் பாம்பு ஒன்றை முத்தமிடும் வித்தையைச் செய்ய முயன்ற 21 வயது இளைஞரை பாம்பு கொத்தியதில் அவர் பலியானார்.

சோம்நாத் மாத்ரே என்ற இவர் மும்பையைச் சேர்ந்தவர். ஏற்கனவே பாம்புகளுடன் பரிச்சியமுள்ளவரான இவர், பாம்புகளை வைத்துப் பல வித்தைகளைக் காட்டியிருக்கிறார்.

அவரது முகநூல் பக்கத்தில், பாம்புகளுடன் அவர் விளையாடும் படங்களும், பாம்புகளை முத்தமிடும் படங்களும் தரவேற்றப்பட்டுள்ளன.

கடந்த 2ஆம் திகதி, நாகப் பாம்பு ஒன்றை முத்தமிடும் சாதனையைச் செய்ய சோம்நாத் முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, குறித்த நாகப்பாம்பு சோம்நாத்தைக் கொத்தியதில், பாம்பின் விஷம் ஏறி அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும், அவை பலனின்றி 5ஆம் திகதி மரணமடைந்தார். 

இதையடுத்து, இதுபோன்ற விபரீத விளையாட்டுக்களுக்கும் சாகசங்களுக்கும் வனத்துறையினர் அனுமதிக்கக்கூடாது என்று விலங்கு நல ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.