திறக்கிறது இன்னுமொரு அறிவுத் திருக்கதவு

26 Aug, 2023 | 01:44 PM
image

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

ஓரறிவில் தொடங்கிய உயிரின பரிணாமப் பயணம் ஆறறிவு மனிதன் எனும் இலக்கை அடைவதற்கு எடுத்துக்கொண்ட ஆண்டுகள் ஆயிரமாயிரம். அந்த ஆயிரமாயிரம் ஆண்டுகளில் மனிதன் தான் எதிர்கொண்ட சவால்களையும், அவற்றினால் பெற்ற அனுபவங்களையும், அறிவையும் கொண்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையை தகவமைத்துக்கொண்டான். ஆனால் தனது அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய பின் மனம் போன போக்கில் தடம் மாறி பயணிக்கும் மனிதன் துன்பங்களை எதிர்கொள்கிறான். தனது வாழ்வின் நோக்கம் அறியாது தள்ளாடுகிறான். உடல் ரீதியான துன்பங்களும் மனத்துன்பங்களும் அவனை அமைதியிழக்கச் செய்கின்றன.

மனிதன் தனது வாழ்க்கைப் பாதையில் தடம் மாறி தடுமாறும் போதெல்லாம் அவனை சரியான வழியில் இட்டுச் செல்ல இயற்கை ஓர் உகந்த மனிதரை தேர்ந்தெடுக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்வு முழுவதும் ஒரு மெழுகுவர்த்தியைப் போல் தங்களை உருக்கிக்கொண்டு மற்றவர்களின் இருண்ட வாழ்க்கைக்கு ஒளி தருகிறார்கள். அவர்களை நாம் 'ஞானிகள்' என்றும் 'மகான்கள்' என்றும் போற்றுகிறோம்.

அவ்வாறு அகிலத்தின் அக இருளை அகற்ற 1911ஆம் ஆண்டு ஆடித் திங்களில் அவதரித்த விடிவெள்ளி வேதாத்திரி.  

1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி சென்னைக்கு அருகில் அந்த காலத்தில் ஒரு சிற்றூராக இருந்த கூடுவாஞ்சேரி என்னும் ஊரில் கை நெசவு தொழிலை செய்து வந்த வரதப்ப முதலியார், சின்னம்மாள் தம்பதியினருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. ஆறு பெண் குழந்தைகளுக்குப் பின் ஏழாவதாக பிறந்த ஆண் குழந்தையும் தனது ஏழாவது வயதில் இயற்கை எய்திவிட, நோன்புகள் பல நோற்று எட்டாவதாக வராது வந்த மாமணியாய் அவர்களுக்கு கிடைத்த செல்வம் அந்த ஆண்குழந்தை. அவர்கள் இல்லத்துக்கு தற்செயலாய் வந்து தங்கிய ஒரு மகானின் அறிவுறுத்தலின்படி, தங்களுடைய செல்வ மகனுக்கு 'வேதாத்திரி' என்று பெயர் சூட்டினார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் முழு மனித குலத்துக்கே அவர் தவப்புதல்வராவார் என்று அந்த ஏழைப் பெற்றோர் அன்று அறிந்திருக்கவில்லை.

மிதமிஞ்சிய ஏழ்மை காரணமாக தனது ஏழாவது வயதிலேயே தந்தைக்குத் துணையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டார் வேதாத்திரி அவர்கள்.

சுற்றிலும் வறுமையையும் நோயையும் மரணத்தை­யும் கண்ட வேதாத்திரி அவர்களின் சின்னஞ்சிறு மனதில் பென்னம்பெரிய கேள்விகள் தோன்றின. வறுமை ஏன் ஏற்படுகிறது? கடவுள் யார்? நான் யார்? உயிர் என்றால் என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அறியும் தேடலில் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்.

சுயமாக சிந்திக்கத் தொடங்கிய பருவம் தொட்டு அவருடைய சிந்தையெங்கும் பிறர் நலமே நிறைந்திருந்தது. ஏழ்மையில் உழன்றாலும் எண்ணங்­கள் என்னவோ ஏகாந்தத்தில் பயணித்தன.

மனித அவலங்களை மாற்றுவதற்கான தேடலும், தீவிர சிந்தனையும், ஆழ்ந்த தவமும் வேதாத்திரியம் என்னும் வாழ்க்கைக் கல்வியாக வடிவம் பெற்றது. எல்லோருக்குமான உடல் மனப் பயிற்சிகள், மனிதன் மாண்புற வாழ வழிகாட்டும் வாழ்க்கை நெறி... இவையே வேதாத்திரியம்.  

மனிதர்கள் யாவரும் உடல்நலம் பெற்று, மனவளம் காத்து, நட்பு நலம் பேணி சிறப்புற வாழ எளிய முறை உடல் மன பயிற்சிகளை வடிவமைத்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் அதற்கு 'மனவளக்கலை யோகா' என பெயரிட்டார். 

இந்த பயிற்சிகள் உலகெங்கும் பரவி ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் அமைதி பெற்று அந்த அமைதி உலக அமைதியாக உருவெடுக்க வேண்டும் என்னும் பெரும் நோக்கில் 1958ஆம் ஆண்டு சென்னையில் உலக சமுதாய சேவா சங்கம் என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். தெருக்கள் தோறும் மனவளக்கலை தவ மையங்கள், ஊர்கள் தோறும் அறிவுத்திருக் கோயில்கள். இதுவே மகரிஷி அவர்களின் பெருங்கனவு.

அந்தக் கனவு மெய்ப்பட்டு வருவதை இன்று நாம் கண்கூடாக காண்கின்றோம். உலகெங்கும் உலக சமுதாய சேவா சங்கத்தின் இணைப்பு பெற்ற ஆயிரமாயிரம் மனவளக்கலை தவ மையங்­களும், அறிவுத்­ திருக்கோயில்களும் உருவாகி வருகின்றன.

1958இல் தொடங்கிய அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருட்பணி 2006ஆம் ஆண்டு அவர் இவ்வுலகிலிருந்து உடலளவில் விடைபெறும் வரை தொடர்ந்தது. அதன் பின் அவர் சூக்குமமாய் நிறைந்து வழிநடத்த உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் அருள்நிதி. பத்மஸ்ரீ SKM மயிலானந்தன் ஐயா அவர்களின் சீரிய வழிகாட்டலில் ஆயிரமாயிரம் வேதாத்திரிய தொண்டர்களின் அயராத முயற்சியில் பல்லாயிரம் தவ மையங்களாக, பல நூறு அறிவுத் திருக்கோயில்களாக மலர்ந்து மனிதரை புனிதராக்கும் ஆசானின் அருட்பணி தொடர்கிறது.

2004ஆம் ஆண்டு இலங்கை மனவளக்கலை மன்றம் தலைவர் அ. மதுரைவீரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு மணம் பரப்பத் தொடங்கியது. ஐந்து அறங்காவலர்களுடன் இலங்கை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை ஆரம்பமானது. 

இன்று நாடெங்கும் பல நூறு தவ மையங்கள் தோன்றி அறப்பணி ஆற்றி வருகின்றன. இன, மதம், மொழி, பாலின பேதமற்று பெரியவர்கள், சிறியவர்கள், மாணவர்கள் என பல்லாயிரம் பேர் மனவளக்கலை பயிற்சிகளை பயின்று, தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் தங்கள் வாழ்வில் மகத்தான மாற்றங்களை அனுபவித்து வருகிறார்கள்.

பேதங்களைக் கடந்த இந்த மானுடக் கல்வியை மனித இனம் தனதாக்கிக்கொண்டால் ஒவ்வொரு தனி மனிதனும் பெறுகின்ற அமைதி உலக அமைதியாக பரிணமித்து மனிதர் யாவரும் மனது இதமானவராகி இந்த அகி­லம் அமைதிப் பூங்காவாக அருள் மணம் வீசும். மனித வாழ்வு மதிப்புமிக்கதாக, அர்த்தம் மிக்கதாக மாறும்.

இலங்கையில் முதலாவது அறி­வுத் திருக்கோயில் யாழ்ப்­பாணத்தில் 2016ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. இரண்டா­வது அறிவுத் திருக்கோயில் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் ஆகஸ்ட் 27ஆம் திகதி நாளை ஞாயிற்றுக்கிழமை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் பத்மஸ்ரீ எஸ்.கே.எம். மயிலானந்தம் அவர்களால் திறந்துவைக்கப்பட இருக்கிறது.

காலை 6:30 மணிக்கு நடைபெறவிருக்கும் அறிவுத் திருக்கதவு திறப்பைத் தொடர்ந்து, வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் பிரதான மண்டபத்தில் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை அமர்வு காலை 10.30 முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை அமர்வு மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறும். 

தமிழகத்தி­லிருந்து வருகை தரும் மனவளக்கலை அன்பர்கள் மற்றும் மனவளக்கலை பேராசிரியர்கள் உரையாற்ற­விருக்கிறார்கள். விழாவின் முத்தாய்ப்பாக தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் சிறப்புரை இடம்பெறவிருக்கிறது.

அத்தோடு அற்புதமான ஆக்கங்களைத் தாங்கி வரும் 'வேதாத்திரிய வித்தகம் 23' என்னும் விழா சிறப்பு மலர் வெளியிடப்பட இருக்கிறது.

அனைவரையும் இந்த சிறப்பான விழாவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு இலங்கை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை அன்புடன் அழைக்கிறது.

திறப்பு விழாவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் அனைத்து வசதிகளையும் கொண்ட கொழும்பு அறிவுத் திருக்கோயிலில் தமிழக பேரா­சிரியரால் நடத்தப்படும் மனவளக்கலை பயிற்சிகள் ஆரம்பமாகின்றன. 

பயிற்சிகளில் கலந்துகொள்ள விரும்புவோர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள திறப்பு விழா நிகழ்ச்சிகளின்போது தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

தனிமனித அமைதி மூலம் அமைதி மிகு உலகம் காண்போம் வாரீர்!

- அருள்நிதி ப.சு. செல்வரட்ணம்

துணைத் தலைவர் - மனவளக்கலை ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் தேர்வு 

உலக சமுதாய சேவா சங்கம் கொழும்பு மண்டலம்

இலங்கை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலை­யக பகு­தி­களில் நடத்­தப்­பட்ட நாட­கங்களில் இஸ்­லா­மி­யர்­க­ளது...

2023-09-18 17:26:42
news-image

இன்று விநாயகர் சதுர்த்தி

2023-09-18 10:28:22
news-image

தம்பாட்டி பிரதேசத்தின் அடையாளமான பண்டாரவன்னியன் நாடகக்கூத்து

2023-09-17 20:44:06
news-image

திறக்கிறது இன்னுமொரு அறிவுத் திருக்கதவு

2023-08-26 13:44:38
news-image

கொழும்பு அழகியற் பல்கலைக்கழக மண்டபத்தில் கர்நாடக...

2023-08-24 17:28:58
news-image

பக்தர்களின் நலம் காக்கும் நாச்சியாபுரம் ஸ்ரீ...

2023-08-17 14:31:20
news-image

இறை வழிபாட்டின் முக்கியத்துவம்

2023-08-15 13:01:05
news-image

ஆடி அமாவாசை விரதம் யார் இருக்க...

2023-08-14 18:18:54
news-image

தர்ப்பண பூஜை

2023-08-14 18:20:29
news-image

ஆடி அமாவாசை

2023-08-14 18:28:54
news-image

சித்தர்களின் அருளைப் பெறுவதற்கான சூட்சுமங்கள்

2023-07-28 16:25:07
news-image

பிரபல ஓவியர் மாருதி காலமானார்

2023-07-28 15:06:33