உலக புற்றுநோய் எதிர்ப்பு தினம் கடந்த பிப்ரவரி 4 ஆம் திகதியன்று கடைபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டு உலக புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்விற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வாசகம் ‘எம்மால் முடியும் நம்மால் முடியும்’ (  I can We can). இந்த விழிப்புணர்வு வாசகம் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை பின்பற்றப்படவுள்ளது.

உலக புற்றுநோய் கட்டுப்பாட்டு கூட்டுக்குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், உலகத்தில் 2026 ஆம் ஆண்டிற்குள் 19மில்லியன் மக்கள் புற்றுநோய் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளாக இருப்பர் என்றும், உலகம் முழுவதும் தற்போது 14மில்லியன் மக்கள் புற்றுநோய் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், புற்று நோய் பாதித்த எட்டு மில்லியன் மக்கள் மரணமடைந்திருப்பதாகவும், தற்போது புற்று நோய் பாதிப்புடன் 32 மில்லியன் மக்கள் வாழ்ந்துவருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைத் தான் அதிகமாக இருப்பதாகவும், இதற்கடுத்ததாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் 13  வகையான புற்றுநோயால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 40 சதவீத புற்றுநோய் குணப்படுத்தக்கூடியவை. ஆனால் அவற்றை தொடக்கநிலையிலேயே கண்டறியப்படவேண்டும்.

புகைபிடிப்பவர்களில் 90 சதவீதத்தினர் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதனைத் தொடர்ந்து Red Meat எனப்படும் மாட்டிறைச்சி மற்றும் செம்மறியாட்டு இறைச்சியை சாப்பிடுவர்கள் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். அதே போல் மது அருந்துபவர்கள் வாய் தொண்டை புற்றுநோய், பெருங்குடல் விழுது புற்றுநோய், மார்பக புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் ஆகியவற்றிற்கு பாதிப்படைகிறார்கள்.

அதனால் புற்றுநோய் பாதிக்காதவண்ணம் தங்களின் வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டு வாழ்வதே இதற்கான சரியான வழிமுறையாகும். அதே போல் புற்று நோய் பாதிப்பின் அறிகுறி தெரிந்தவுடன் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் புற்றுநோயின் பாதிப்பிலிருந்து ஒரு தலைமுறையை பாதுகாக்க இயலும். எம்மால் முடியும். நம்மால் முடியும் என்று நம்பிக்கையுடன் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை  முன்னெடுப்போம்.

டொக்டர் சீனிவாசன்

தொகுப்பு அனுஷா.