வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தைப்பூச சிறப்பு பூஜைகள் இடம்பெற்று விசேட நிகழ்வாக அன்னதானமும் வழங்கப்படுமென ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.

அங்கு தைப்பூச வழிபாடுகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் மீளச்செல்ல முடியாத நிலையிலேயே கடந்த சில வருடங்களாக படைத்தரப்பினரின் அனுமதியைப்பெற்று வைகாசி விசாகப் பொங்கல் மற்றும் தைப்பூசத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

தைப்பூச வழிபாட்டிற்கான சகல வேலைகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயத்தில் குடிநீர்வசதி, மலசலகூட வசதி ஆகிய முதலுதவிகளை படையினர் மேற்கொள்ளவுள்ளனர்.

வயாவிளான் கிராமம் சிறுசிறு பகுதிகளாக ஆங்காங்கே விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவை விவசாய நிலங்களாகும். முக்கிய குடியிருப்புப் பகுதி உட்பட பெரும் பகுதி இன்னும் விடுவிக்கப்படாமலேயே உள்ளது. இக் கிராமம் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டிய முயற்சியில் கிராம மக்களும் வயாவிளான் பொது அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன.

இதேவேளை, தைப்பூச பழிபாட்டில் கலந்துகொள்ள வருகைதரும் மக்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வயாவிளான் மத்திய கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடுமாறும் அங்கிருந்து பேருந்துகள் மூலம் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். இவற்றுக்கான சகல ஏற்பாடுகளையும்  ஆலய பரிபாலன சபையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.