அதீத போதை மருந்துப் பயன்பாட்டினால் விளையும் மரணங்களையும், நோய்களையும் மேலும் இன்னோரன்ன பிரச்சினைகளையும் தவிர்க்கும் வகையில், கனடாவில், கண்காணிப்பின் கீழான போதை மருந்து பாவனையாளர் நிலையம் ஒன்று திறக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை கனேடிய சுகாதார அமைச்சர் ஜேன் ஃபில்பொட் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே கனடாவில் கடந்த 2003ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. வைத்தியர்கள் கண்காணிப்பின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில், சட்டவிரோதமாகக் கொள்வனவு செய்யப்படும் போதை மருந்தையும் போதைப் பொருள் பாவனையாளர்கள் பயன்படுத்தலாம். எனினும், ஏற்றப்படும் போதை மருந்தின் அளவை அங்கு பணியாற்றும் வைத்தியர் ஒருவரே தீர்மானிப்பார்.

இந்தத் திட்டத்தால் போதைப்பொருள் பாவனையால் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்ததும், தேவையற்ற பாலியல் குற்றங்கள் தவிரக்கப்பட்டதால் நோய்த் தொற்று போன்ற பிரச்சினைகளும் குறைந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இதேபோன்றதொரு நிலையத்தை கியூபெக் மாகாணத்திலும் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.