குருந்தூர் மலையில் "கொதிக்கும்" இனவாதம் !

Published By: Digital Desk 3

26 Aug, 2023 | 04:34 PM
image

ஆர்.பி.என்.

*  1956 ஆம்  1983 ஆம் ஆண்டுகளில்  நாட்டுக்கு  ஏற்பட்ட அவப்பெயர் !  

* ஒருவருக்கு ஒருவர் சளைக்காத இனவாதக் கருத்துக்கள் !

* மதத்தின் பெயரால் தூண்டப்படும் வன்முறை!

நாட்டில் பொருளாதாரப்  பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை , குடிநீர்ப்பிரச்சினை என  அனைத்து விதமான பிரச்சினைகளும்  தலைதூக்கி வரும் நிலையில்,  இனவாதத்தைத் தூண்டி அதில் குளிர்காய  சில அரசியல்வாதிகள் முனைகின்றனரா? அல்லது மீண்டும் கறுப்பு ஜூலை போன்றதோர் நிலைமைக்கு வழிவகுக்கின்றனரா? என்ற சந்தேகம் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.  

இதேவேளை,  முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு  நாட்டில் இனக்கலவரம் ஒன்றை  உருவாக்கி விடுவார்களோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்கள் முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் இன்று இனக்கலவரத்தைத்  தூண்டும்  வகையில் பகிரங்கமாக தெரிவித்து வரும் கருத்துக்கள்,  நாட்டின் எதிர்காலம் தொடர்பிலும் மிகுந்த கவலையை தோற்றுவித்துள்ளது. அனைத்து  மதங்களும் வன்முறைக்கு எதிராகவும்  அமைதி, சமாதானத்தை முன்னிறுத்தியுமே தமது போதனைகளை போதித்து வரும் நிலையில், மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்ட எத்தனிப்பதும், அதன் மூலம் தங்கள் மறைமுக நிகழ்ச்சிநிரலை  செயற்படுத்த முனைவதும் மிகவும் கண்டனத்துக்குரியதாகும் என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

1956ஆம்  1983ஆம் ஆண்டுகளில்   ஏற்பட்ட  இனக்கலவரங்கள்

ஏலவே நாட்டில் 1956ஆம்  1983ஆம் ஆண்டுகளில்   ஏற்பட்ட  மோசமான இனக்கலவரங்கள் காரணமாக இலங்கை சர்வதேச ரீதியில் பாரிய அவப்பெயரை  கேட்க நேர்ந்ததுடன், பல வழிகளிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்க நோக்கியது. அதிலிருந்தும் மீளுவதற்கு  ஆண்டுகள் பல கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  இந்தப் பின்னணியில் உருவான உள்நாட்டு யுத்தம்  காரணமாக நாடு சுமார் மூன்று தசாப்த காலம்  இருண்ட  சூழலை எதிர்நோக்க நேரிட்டது. அத்துடன் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கிய நிலையிலேயே யுத்தம் முடிவுக்கு வந்தது.

யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும்  அதன் சுவடுகள் அழியாமல் தொடர்ந்து கொண்டே உள்ளன. இலங்கையின் வரலாற்றில் இது மறக்க முடியாத உண்மையாகும்.

இன்றைய வேகமான சூழல் மாற்றத்தால் தமிழ், முஸ்லிம், கிறிஸ்த்தவ, சிங்கள மக்கள் தமக்கிடையே அவ்வப்போது நிலவிய  கசப்பான சம்பவங்களை மறந்து சற்று நிம்மதி பெருமூச்சு விடும் நிலையில், திடீரென அவர்கள் மத்தியில் விதைக்கப்படும் கொடூர இனவாதக் கருத்துக்கள் மீண்டும் குட்டையை குழப்புவதாகவே அமைந்துள்ளது. இதுவே இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய சவாலாகும்.  குறிப்பாக  நீண்ட காலம் மௌனமாக இருந்த முன்னாள் அமைச்சர்  மேர்வின் சில்வா தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது போன்று அண்மையில் கருத்தொன்றை கூறியிருந்தார்.

குருந்தூர் மலையில் கட்டப்பட்டுள்ள விகாரை 

தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது

அதாவது, வடக்கு,  கிழக்கில் விகாரைகள் மீது கை வைக்க  முயன்றால்  அவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவேன் என்று கூறியிருந்தார். இது சிங்கள பௌத்த நாடு, இங்கு தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என்றும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். களனியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் இவ்வாறு  அவர் தெரிவித்த மோசமான கருத்துக்கள் சிறுபான்மை மக்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்தை தோற்றுவித்திருந்தன. படித்த நாகரீகமான  சிங்கள மக்களும்  அவரது கூற்று தொடர்பில் முகம் சுழிக்கவே செய்தனர். சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மூலம் நன்கு அறியப்பட்டவர் மேர்வின் சில்வா. எனினும், நாட்டில்  கருத்து சுதந்திரம் உள்ளது என்பதற்காக  எதையும் எவரும் பேசலாம் என்று கருதக்கூடாது.  நாட்டின் சட்ட திட்டங்கள் தொடர்பிலும் இவ்வாறானவர்கள் சிந்திக்க வேண்டியது இன்றியமையாதது.

மேர்வின் சில்வாவின் கருத்துத் தொடர்பில் கடுமையான கண்டங்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில், நானும் எதற்கும் சளைத்தவன் அல்ல  என்பது போன்று  பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில,  'குருந்தூர் மலையில் 18 ஆம் திகதி பொங்கல் விழா நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, புத்த சாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலையில்  ஒன்று கூட வேண்டும்' என்று  அழைப்பு விடுத்தார்.   இந்தவிதமான பின்னணியில் இரு குழுவினருக்குமிடையில் கலவரம் மூண்டுவிடும் என்று கூறி, பொலிஸார்  பொங்கல் விழாவை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் பொங்கல் விழாவுக்கு எதிராக தடை உத்தரவை கோரியிருந்தனர்.

பொலிஸாரின்  மனு  நீதிமன்றத்தால்  நிராகரிப்பு 

இதனை நிராகரித்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் , புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,  அப்பிரதேச மக்கள் தமது மத வழிபாடுகளில் ஈடுபடலாம் என தனது உத்தரவில் கூறியிருந்தார்.  இதையடுத்து, பொங்கல் விழா திட்டமிட்ட வகையில்  நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அவர்களின் நிபந்தனைகளை அனுசரித்து நடத்த ஏற்பாடானது. இதன் தொடர்ச்சியாக, அப் பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பன் மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தன.

அதேவேளை, தென்பகுதியிலிருந்தும் ஐந்து பஸ்களில் ஏற்றி வரப்பட்ட நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள், அப்பகுதியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ள விகாரைகளில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இந்நிலையில்,  தமிழ் மக்களின் பொங்கல் வழிபாட்டு இடத்துக்கு வந்த பிக்கு ஒருவருக்கும், அங்கு பிரசன்னமாகி இருந்த தமிழ் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைமையையடுத்து குறித்த பிக்கு பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டார். இதில் முக்கிய விடயம் என்னவென்றால், வந்தவர்கள் அப்பாவி சிங்கள மக்களாவர் குழந்தைகள், வயோதிபர்கள் என பலரும் காணப்பட்டனர் . அதேவேளை,  பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரை  காணக்கிட்டவில்லை. மறுபுறம் பொங்கல் விழா எந்தவிதமான நெருக்கடியும் இன்றி நடந்து  முடிந்தது.

வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து கோவில்களுக்கும் மிகுந்த பக்திபூர்வமாக சென்று எந்த விதமான இடையூறுகளுமின்றி மகிழ்ச்சியாக வழிபட்டுவரும் சிங்கள மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் எதற்காக இந்த வகையான விரோத உணர்வை வளர்க்க வேண்டும் என்பதுதான் புரியாத புதிராகவுள்ளது. இருந்தபோதிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் கூட  தங்கள் அரசியல் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள மதம் போன்ற  மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விடயங்களை தேடி பிடித்து  அதில் குளிர்  காய முனைகின்றனர். எனினும், அப்பாவி மக்கள் அதனை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லாதிருப்பது தான் மோதல்கள் உருவாகக் காரணமாகி விடுகிறது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை (23) உரையாற்றிய  வேலுகுமார் எம்.பி. குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலும் பிரஸ்தாபித்துள்ளார். அதாவது, குருந்தூர் மலை விவகாரம் இலங்கையில் மீண்டும் இனக்கலவரத்தை தோற்றுவிக்கும் என இந்திய புலனாய்வு பிரிவினர், இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மக்களை பலிகடாவாக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். குறித்த விவகாரம் நாட்டின் முக்கிய பேசுபொருளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சரத் வீரசேகரவின் கருத்துக்கள்

இது ஒருபுறமிருக்க, முன்னாள் பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தலைவரும், அரச தரப்பு எம்.பி யுமான சரத் வீரசேகரவின் கருத்துக்கள் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு பழகிப்போன ஒன்று, அவ்வப்போது  தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பில் அவர் தெரிவிக்கும் இனரீதியான கருத்துக்கள் மிகுந்த சர்ச்சைக்குரியனவாக இருந்து வருகின்ற போதும் அது தொடர்பில் அரசாங்கம்  கண்டுகொள்ளாதிருப்பதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இவை அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவையாக பார்க்கப்பட்ட போதிலும், எந்தளவு தூரம் அவை நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பேணும் என்பது கேள்விக்குறியானது. குருந்தூர் மலையில் அடிப்படைவாதிகள் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ள சரத் வீரசேகர எம்.பி, சிங்கள பௌத்தர்களின்  பொறுமைக்கும் எல்லை உண்டு. முல்லைத்தீவு  நீதிமன்ற நீதிபதி ஓர்  மனநோயாளி. இவர் பௌத்தர்களுக்கு இடமளிக்கமாட்டார். ஆனால் பொங்கல் பொங்க இடமளிப்பார்  என்று கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் செவ்வாயன்று கேள்வி நேரத்தின்போது,  மத விவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே சரத் வீரசேகர எம்.பி,   இவ்வாறு கூறியுள்ளார்.  

குறித்த வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ள நிலையில் நீதிபதியையும்  நீதிமன்றையும் விமர்சிக்கும் நடைமுறை இலங்கையை தவிர வேறு எந்த நாட்டிலும் இருக்காது என்றே கூற வேண்டும். கருத்து சுதந்திரம் இருக்கும் போதிலும் அது ஓரினத்தை மனத்தை நோகடிக்கும் அளவுக்கு அல்லது அச்சுறுத்தும் அளவுக்கு  பயன்படுத்தப்படுவது எந்தளவு தூரம் நியாயமானது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். சட்டம் சகலருக்கும் சமமானதாகும். 

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு 

அந்தவகையில் அண்மையில் இந்திய நீதிமன்று வழங்கிய தீர்ப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது. கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி, சூரத் பெருநகர நீதிவான்  நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

மார்ச்  23 ஆம் திகதி அன்று அவதூறு வழக்கை விசாரித்த சூரத் பெருநகர  நீதிமன்றம், மார்ச் 23 ஆம் திகதி  ராகுல் குற்றவாளி என அறிவித்ததுடன், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. மார்ச் 24 ஆம் திகதி அன்று  ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது. தீர்ப்புகள் முறையாக பின்பற்றப்படும் இடத்தில் மாத்திரமே நீதித்துறை மீதான மதிப்பும் கௌரவமும் உயரும்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் மொழி ரீதியான சிந்தனைகளுக்கு அப்பால் தேசிய அளவில்   சிந்திக்க வேண்டியது இன்றைய நாகரீக உலகுக்கு அவசியமானதாகும்.  மதத்தின் பெயரால் வன்முறைகள் உருவாகுமானால் அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாவது மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் தவறான புரிதலுக்கும் வழிவகுத்துவிடும். அண்மையில் இனம், மதம் மற்றும் மொழி ரீதியான வன்முறைகளால் இந்திய மாநிலமான மணிப்பூர்  தீ பற்றி எரிந்ததுடன் நூற்றுக்கணக்கான  உயிர்களும் காவு கொள்ளப்பட்டன. இது சர்வதேச ரீதியான கண்டனத்துக்கு வழிவகுத்தது. இலங்கைக்கு இது முதல் அனுபவமல்ல. அந்த வகையில் எந்தத் தரப்பில் இருந்து வந்தாலும் இனவாதக்  கருத்துக்கள், செயல்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியமானதாகும்.  

இலங்கையை பொறுத்த மட்டில் ஆட்சியை கைப்பற்ற மற்றும்  தக்கவைத்துக் கொள்ள இனவாத கருத்துக்கள் பரப்பப்படுவது அநாகரிக அரசியல் பாரம்பரியமாகவே தொடர்கிறது. இந்தநிலை மாறாத வரை இந்த  நாடு உருப்படும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதே யதார்த்தம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Factum விசேட கண்ணோட்டம்: தேர்தலுக்குச் செல்லும்...

2024-06-13 10:04:03
news-image

Factum கண்ணோட்டம்: ரைசியின் மரணத்தின் மூலம்...

2024-06-12 18:03:09
news-image

இலங்கை ஒருகாலத்தில் செய்தது போல இஸ்ரேல்...

2024-06-12 10:58:31
news-image

தேர்தல் நிச்சயமற்ற தன்மையே பொருளாதார மீட்சியை...

2024-06-11 15:21:50
news-image

தமிழ் பொது வேட்பாளர் குறித்த கரிசனைகளை...

2024-06-10 18:29:19
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழ் கட்சிகளுக்குள்...

2024-06-10 18:24:08
news-image

அரசாங்கத்தின் மறைமுக எச்சரிக்கையை உணரவில்லையா கம்பனிகள்?...

2024-06-10 17:59:48
news-image

இடம்பெயர்ந்து வரும் பாலஸ்தீனியர்கள் போல வந்து...

2024-06-10 16:19:25
news-image

இரத்தினபுரி மாவட்ட தமிழர் அரசியல்…! :  ...

2024-06-10 10:50:01
news-image

ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

2024-06-10 10:38:40
news-image

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த தமிழ்...

2024-06-10 10:27:47
news-image

வெளியிடப்படாத நவாஸ் ஆணைக்குழு அறிக்கை ஏற்புடைய...

2024-06-09 17:31:23