குழந்தையின் அழுகைச் சத்தத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத வைத்தியசாலை பணியாளர் ஒருவர், அந்தப் பிஞ்சுக் குழந்தையின் காலை உடைத்த சம்பவம் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கண்காணிப்புக் கெமராவிலும் பதிவாகியுள்ளது.

ஜனவரி மாதம் 25ஆம் திகதி பிறந்த குழந்தையொன்று, சில பல உடல் உபாதைகள் காரணமாக, ரூர்கி வைத்தியசாலையில் ஜனவரி 28ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. 

வைத்தியசாலை ஊழியர் ஒருவர் ஓய்வெடுப்பதற்காக இந்தக் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த வார்டினுள் சென்று அமர்ந்தார். அங்கே தனிமையில் இருந்த அந்தக் குழந்தை பசியினால் கதறியழ ஆரம்பித்தது. ஓரிரு நிமிடங்களில், குழந்தையின் அழுகைச் சத்தத்தைக் கேட்கப் பொறுக்காத அந்த வைத்தியசாலை ஊழியர் குழந்தையருகே சென்று, குழந்தையின் காலை தனது பலங்கொண்ட மட்டும் இழுத்தார்.

குழந்தை அழ அழ, அவர் தனது காரியத்திலேயே கண்ணாக இருந்தார். இதனால் குழந்தையின் கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது.

பின்னர் சிகிச்சைக்காக அந்தக் குழந்தை பரிசோதிக்கப்பட்டபோது அதன் ஒரு காலில் முறிவு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் ஓரிரு மணி நேரங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும் என்று வைத்தியர் கருதினார். அதன்பேரில் ஆய்வு நடத்தியபோதே குறித்த நபர் குழந்தையின் காலை முறித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, குழந்தையின் காலை முறித்த வைத்தியசாலை ஊழியர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபர் தலைமறைவாகிவிட்டார்.