11 ஆவது மகளிர் ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நாளை 7ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளன.

2017 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டிகளில் விளையாடவுள்ள அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதி காண் சுற்றுப் போட்டிகளே இலங்கையில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இம் முறை மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 8 நாடுகளின் அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன.

இதில் பங்கேற்கவுள்ள முதல் நான்கு அணிகளான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன ஏற்கனவே ஐ.சி.சி இனால் 2014/16ஆம் ஆண்டுகளின் பருவ காலத்தில் நடத்தப்பட்ட சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இத்தொடரில் விளையாடவுள்ள மிகுதி நான்கு மகளிர் அணிகளையும் தெரிவு செய்வதற்காக இந்த தகுதி காண் சுற்றுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த தகுதிகாண் சுற்றுப்போட்டியில் விளையாடவுள்ள அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், அயர்லாந்து, சிம்பாப்வே, தாய்லாந்து, பப்புவா நியூ கினியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளின் மகளிர் அணிகள் இத்தொடரில் விளையாடவுள்ளன.

இத்தொடரில் பங்கு பெரும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இதில் குழு  ஏ யில் இந்தியா, இலங்கை, அயர்லாந்து, தாய்லாந்து மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகளும் குழு பி யில்  தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பப்புவா நியூ கினியா, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

நாளை 7ஆம் திகதி ஆரம்பமாகும் இத் தகுதிகாண் தொடர் 21ஆம் திகதி வரை நடைபெறும் இப்போட்டித் தொடரின் போட்டிகள் அனைத்தும் கொழும்பிலுள்ள CCC, MCA, NCC, பி சரவணமுத்து ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.

30 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் சுற்றுப்போட்டிகளின் வெற்றி தோல்விகளின் மூலம் பெறப்படும் புள்ளிகளிற்கு அமைவாக தத்தமது குழுக்களில் முன்னிலை பெறும் முதல் 3 அணிகளும் சுப்பர் சிக்ஸ் போட்டிகளுக்கு தகுதி பெறும்.

அவ்வணிகளில் இருந்து, நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு, அதில் இருந்து இரு அணிகள் எதிர்வரும்  21 ஆம் திகதி பி சரவணமுத்து மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.

இத்தொடரில் மகளிர் இலங்கை அணியினை இனோக்கா ரணவீர தலைமை தாங்குகின்றார். 

நாளை பி சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகும் இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப் பரீட்சை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.