கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : முன் நிலையினை கண்டறிதலும் சிகிச்சைகளும்

21 Aug, 2023 | 07:17 PM
image

(கேஷாயினி எட்மண்ட்)

இலங்கை ஏறத்தாழ 22 மில்லியன் மக்களை கொண்டதொரு தீவு. ஒவ்வொரு வருடமும் 32,000 புற்றுநோயாளர்கள் புதிதாக இனங்காணப்படுகின்றனர். இது வயது நிலைப்படுத்தப்பட்ட நிகழ்வு வீதத்தின்படி (Age-Standardized Incidence Rate - ASR)  100,000க்கு 126.9 வீதமாகும். 

பெண்கள் எதிர்கொள்கின்ற மார்பக புற்றுநோய், தைரொயிட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் காணப்படுகின்றது. இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வயது நிலைப்படுத்தப்பட்ட நிகழ்வு வீதத்தின்படி, (Age-Standardized Incidence Rate - ASR) 100,000க்கு 8.3 வீதமாகும்.

2015ஆம் ஆண்டு முதல் இலங்கையின் 4வது இடத்தில் காணப்படுகின்ற இக்கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் மற்றும் புற்றுநோயினை கண்டறிவதற்கான பரிசோதனைகள் சுகாதார அமைச்சின் சுகாதார மருத்துவ அதிகாரிகளினால் வழங்கப்பட்டு வருகின்றன. 

2019 ஆண்டு வெளியான தரவுகளின் அடிப்படையில் 

கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது ஏனைய புற்றுநோய்களுடன் ஒப்பிடும்போது 7 வீதமாக காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் அது குறித்த விளக்கமும் மருத்துவத்துறையில் வளர்ச்சியடைந்து வருகின்ற மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளில் பொதுவாக அதிகமாக காணப்படுகின்றதொரு நோய் இதுவாகும். ஆரம்ப கட்டங்களிலேயே கண்டறியப்பட முடியாமையினாலும் அதற்கான மருத்துவ வசதிகள் இன்மையாலும் இந்நோய் குறித்த விழிப்புணர்வு இன்மையாலும் இப்புற்றுநோய் அதிகளவில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் காணப்படுகின்றது.

கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதியிலுள்ள வாய் புறத்தில் ஏற்படும் புற்றுநோய் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் (சேர்வைகல் கேன்சர்) எனப்படும். இதில் 150 வகையான சாதாரண வைரஸ்கள் காணப்படுகின்றன. இவற்றில் 15 வகையானவை கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டுவிடின், தடுப்பூசி மூலம் தடுக்க முடிந்ததொரு புற்றுநோய் இதுவாகும். இதற்கு 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாய்ப்புக்கள் காணப்படுவதாக மருத்துவம் தெரிவிக்கின்றது. 

பெரும்பாலும் 30 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது என்பதுடன் இது பெரும்பாலும் திருமணத்துக்கு பின்னரே ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்புற்றுநோய் ஏற்படுவதற்கு ஹெச்.பி.வி ((H.P.V – Human Papilloma Virus) எனப்படும் வைரஸ் காரணமாக அமைகின்றது. இதில் ஹெச்.பி.வி 16 மற்றம் ஹெச்.பி.வி 18 என்பன முக்கியமானவை. இவ்வைரஸ் உடலுறவு மூலம் பரவலடைகின்றது. இந்த வைரஸ் தொற்று ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிடின், அது கர்ப்பப்பை புற்றுநோயாக மாறுகின்றது.

இவ்வைரஸ் உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை அழித்துவிடுகின்றது. மேலும் இந்த வைரஸ்களினால் மலக்குடவாய் புற்றுநோய், தோல் புற்றுநோய் போன்றவையும் ஏற்படலாம். இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் சென்று கர்ப்பப்பை புற்றுநோய் செல்களை உருவாக்க குறைந்தது 10 வருடங்கள் ஆகலாம்.

ஆண் - பெண் உடலுறவின் மூலம் இப்புற்றுநோய் ஆண்களுக்கு பரவுவதில்லை. ஆயினும் மேற்குறிப்பிட்டதன்படி வைரஸ் உடலுறவின்போது பரவும் வாய்ப்புண்டு. ஆகவே பொதுவாக மனைவியிடமிருந்து கணவருக்கு பரவுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 

இதன் ஆரம்ப அறிகுறிகளாக ஆணுறுப்பில் மரு போன்று ஏற்படும். இதனை ஜெனிட்டல் வார்ட் என குறிப்பிடுவதுண்டு. மேலும், ஆணுறுப்பில் சிறு புண்கள் மற்றும் சிவப்பு திட்டுக்கள் உருவாகுவதை அவதானிக்க முடியும். இதனை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறப்படாவிடில், பிற்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கலாம்.

புற்றுநோய் முன் நிலையினை கண்டறிதலும் அதற்கான சிகிச்சைகளும்

இக்கர்ப்பப்பை புற்றுநோயினை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான பரிசோதனை முறையே CIN (Cervical Intraepithelial Neoplasia). இப்பரிசோதனையில் மூன்று நிலைகள் காணப்படுகின்றன. முதல் நிலையில் கர்ப்பப்பையின் வாய் பகுதியில் உள்ள எபிலீத்தியம் எனப்படும் செல்களில் மூன்றிலொரு பகுதி பாதிப்படைந்த நிலையில் காணப்படும். இரண்டாம் நிலையில் மூன்றில் இரு பங்குகளும் மூன்றாவது நிலையில் இரு பங்கினை விட அதிகளவிலும் செல்கள் பாதிப்படைந்த நிலையில் காணப்படும். இவை முன் நிலைகள் என குறிப்பிடப்படுகின்றன. 

இந்த நிலையில் கண்டறியப்படும்போது அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை நீக்கப்பட்டால் புற்றுநோய் பரவலினை தடுக்க முடியும்.

பிறப்புறுப்பை தூய்மையாக வைத்துக்கொள்ளல், உடலுறவு கொள்ளும்போது விழிப்புணர்வுடன் இருத்தல் மற்றும் இயல்புக்கு மாறாக வெள்ளைப்படுதல் ஏற்படும்போது மருத்துவ உதவியை நாடல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றும்போது இப்புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க முடியும். பெண்களுக்கு உடல் எடை திடீரென குறைவடைதல், மாதவிடாய் சுழற்சிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இரத்தப் போக்கு ஏற்படுதல், தாம்பத்திய உறவுக்கு பின்னர் இரத்தப்போக்கு ஏற்படுதல் மற்றும் அதிகளவான வெள்ளைப்படுதலுடன் துர்வாடையும் இலேசாக இரத்தம் கலந்தும் வெளிப்படுதல் போன்ற ஆரம்ப அறிகுறிகள் காணப்படும்.

இதற்கான முன் நிலையினை கண்டறிதல் போன்று புற்றுநோய் ஏற்பட்ட பின்னரான பரிசோதனைகளும் காணப்படுகின்றன. HPV DNA எனும் பரிசோதனை மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதனை கண்டறிந்துகொள்ள முடியும். அதேபோன்று ஸ்பெக்குலம் பரிசோதனை (Speculum Examination) ஊடாக கர்ப்பப்பை வாயில் புண்கள் காணப்படுகின்றனவா என்பது குறித்து கண்டறிய முடியும். இதே போன்று கர்ப்பப்பைவாய் திசுக்களை பாப் ஸ்மியர் (Pap smear) பரிசோதனை மற்றும் திசுக்களை உபயோகித்து மேற்கொள்கின்ற திரவநிலை பரிசோதனை (Liquid based Cytology) என்பனவற்றின் மூலமும் கண்டறியலாம். பரிசோதனைகளின் மூலம் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படின் கால்போஸ்கோப்பி பரிசோதனை மூலம் கர்ப்பப்பைவாயை பரிசோதிக்க முடியும். இப்பரிசோதனையில் சாதாரணமற்ற முறையில் காணப்படும் திசுக்கள் எடுக்கப்பட்டு மேலதிக பரிசோதனைக்கு அனுப்பப்படும் இதனை சேர்வைக்கல் பயாப்ஸி என்பர். 

பொதுவாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்ட ஒருவருக்கு சிகிச்சையின் போது கர்ப்பப்பை பெரும்பாலும் நீக்கப்படும். ஆகவே கர்ப்பப்பை நீக்கப்பட்டதன் பின்னர் புற்றுநோய் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைந்தளவு வீதமே காணப்படுகின்றன.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயினை தடுப்பதற்கான வழிகள்

* ஒமேகா 3 மற்றும் கொழுப்பமிலங்கள் நிறைந்த உணவுகளை பெண்கள் அதிகளவு தமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

* உடல் எடையைப் பேணுவதுடன் தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

* அமிலத்தன்மை அதிகம் கொண்ட உணவுகளை தவிர்த்தல் நல்லது.

* மது மற்றும் புகைத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்

* குழந்தைப்பேறுகளுக்கு இடையில் போதியளவான இடைவெளி காணப்படல் வேண்டும்.

* மாதவிடாய்க் காலங்களில் பெண்ணுறுப்பு சுகாதாரத்தினை பேணல் வேண்டும். குறிப்பாக மாதவிடாய் நப்கின்களை 3 மணி நேரத்துக்குள்ளாக மாற்ற வேண்டும்.

* மலசலகூட சுகாதாரத்தினை பேணுவதுடன் திருமணமான மற்றும் இளம் பெண்கள் மூன்று வருடங்களுக்கொரு முறை இதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ளதை போன்று ஆரம்ப நிலையில் கண்டறியப்படின் இதனை நிவர்த்திசெய்ய முடியும்.

இதேவேளை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை 09 வயது முதல் 13 வரையான வயதெல்லைக்குள் பெண் பிள்ளைகளுக்கு வழங்க வெண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இவ்வயதெல்லையில் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிகளவில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வயதெல்லைக்குள் தடுப்பூசி வழங்கப்படும்போது ஒரு முறை வழங்கப்படல் போதுமானது. இந்த வயதெல்லைக்குள் தடுப்பூசியினை பெற முடியாதவர்கள் 13 - 15 வயதுக்குள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். ஆயினும் இரு முறை தடுப்பூசி போட வேண்டியிருக்கும். முதல் தடுப்பூசி மருந்திற்குப் பின்னர் ஆறு மாதகால இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசி போடப்பட வேண்டும். 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனில் 03 தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக முதல் முறை உடலுறவினை மேற்கொள்ளும் முன்னர் இத்தடுப்பூசிகள் இடப்படல் வேண்டும். வரும் முன் காப்பவர்களாக செயற்பட்டால் கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து எம்மை காத்துக்கொள்ள முடியும். ஹெச்.பி.வி பரவல் ஆரம்பித்த பின்னர் தடுப்பு மருந்து பயனளிக்காது. முறையான சிகிச்சை மூலமே குணப்படுத்தலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளெபரோபிளாஸ்ரி எனும் கண் இமைகளின் அழகிற்கான...

2024-07-13 10:33:23
news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59
news-image

அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய்...

2024-07-05 17:10:12
news-image

நான்ஆல்கஹாலிக் ஸ்டீடோஹெபடைடிஸ் எனும் கொழுப்பு கல்லீரல்...

2024-07-05 00:50:06
news-image

ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை...

2024-07-03 15:25:15
news-image

பிராங்கியாடிஸிஸ் எனும் மூச்சு குழாய் தளர்வு...

2024-07-02 23:38:44
news-image

உடல் எடை குறைப்பதற்கான நவீன சிகிச்சை

2024-07-01 19:29:59
news-image

மருந்துகளின் பக்க விளைவுப் பாதிப்புக்கும் சிகிச்சை

2024-06-29 16:15:38
news-image

ஹைட்ரோகெபாலஸ் எனும் மூளையில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-06-28 17:55:25
news-image

குருதியில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்த...

2024-06-28 14:20:41