முஸ்லிம்களின் கோரிக்கை  இன உறவை பாதிக்குமா? 

Published By: Vishnu

21 Aug, 2023 | 11:26 AM
image

ஏ.எல்.நிப்றாஸ்

முஸ்லிம் - தமிழ் அரசியல் தலைவர்கள் உதாரணமாக, சம்பந்தனும் ரவூப் ஹக்கீமும் ஒரு மேசையில் உட்கார்ந்து சாப்பிடுகின்றார்கள் அல்லது ஒற்றுமைப்பட்டுப் பேசுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கிராமப் புறங்களில் உள்ள சாதாரண தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்படுவதும் இல்லை. அரசியல்வாதிகள் முரண்பட்டுக் கொள்கின்றார்கள் என்பதற்காக, அருகருகே வாழ்கின்ற மூக்கையாவும் முகம்மதுவும் சண்டையிட்டுக் கொள்ளப் போவதுமில்லை. 

வடக்கும் கிழக்கும் இணைந்தால் ஒற்றுமை அதிகரிக்கும் என்றுமில்லை. மாகாணங்களை இணைப்பதோ பிரதேச செயலகங்களைப் பிரிப்பதோ அல்லது ஒரு சில தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எவ்வாறான உறவில் இருக்கின்றார்கள் என்பதை வைத்தோ, இரு இனங்களின் ஒற்றுமையும் உறவும் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் இல்லை.  

உண்மையில், அதுவேறு, இதுவேறு! இரண்டையும் போட்டு ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளக் கூடாது. இதனைக் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது ! 

அதாவது, இனப் பிரச்சினை தீர்வு என்று வரும்போது முஸ்லிம்கள் பங்கு கேட்பது, அவர்களது அபிலாஷைகளை உறுதிப்படுத்தக் கோருவதானது, 'இன உறவை கடுமையாக பாதிக்கும்' என்று சிலர் கருதுவதுண்டு. அது தவறான ஒரு புரிதலாகும். இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

உண்மையிலேயே அரசியல்வாதிகள், குழப்பவாதிகள் சதித்;திட்டங்களை தீட்டாத வரைக்கும் வேறு என்ன நடந்தாலும் சமூக மட்டத்திலான தமிழ், முஸ்லிம் உறவு மிதமாகவே காணப்படும். அற்ப காரணங்களுக்காக கள்ளம் கபடமற்ற சாதாரண மக்கள் முரண்பட்டுக் கொள்வதில்லை என்பதே நாம் கண்ட யதார்த்தமாகும்.    

இப்போது மாகாண சபை தேர்தல் பற்றி பேசப்படுகின்றது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் உச்சத்தை தொட்டுள்ளன. இந்நிலையில் 13இன் அமுலாக்கம் பற்றிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு அரசாங்கம் கோரியிருந்த சூழலில், முஸ்லிம் சமூகம் தனக்குள் ஆக்கபூர்வமான எந்தக் கருத்தாடலையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலை வழக்கமானதும் கூட. 

இப்படியான சூழலில், இனப் பிரச்சினை தீர்வு பற்றி பேசப்படுகின்ற வேளையில், முஸ்லிம்களின் அபிலாஷைகளும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும், அவர்களுக்கும் ஒரு உப தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தால், எழுதினால், சிலர் அதனை தவறாக புரிந்து கொள்ள முற்படுவது மட்டுமன்றி, தவறான வியாக்கியாளங்களை கொடுக்க முனைவதாகவும் தோன்றுவதுண்டு.  

அதாவது, தமிழர்கள் ஆயுத ரீதியாக போராடி பல இழப்புக்களைச் சந்தித்து, படாதபாடுபட்டு அதன் பயனாக ஒரு தீர்வு கிடைப்பதற்கான காலம் கனிந்து வரும்போது, முஸ்லிம்கள் தீடீரென வந்து 'எமக்கும் பங்கு வேண்டும்' என்று கேட்பதை ஒரு குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் வேறு கோணத்திலேயே பார்க்கலாம்.   

'நாம் இவ்வளவு முயற்சிகளையும் செய்து ஒரு தீர்வு கைகூடி வருகின்ற போது, இவர்கள் திடுதிடுப்பென நடுவில் வந்து எமது அபிலாஷைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்வதானது, இது இனப் பிரச்சினை தீர்வை குழப்பும், தாமதப்படுத்தும் ஒரு நடவடிக்கை' என தமிழ் சமூகத்தில் சிலர் கருதலாம். 

சிலர் அதனை பொதுவெளியில் சொல்கின்றனர். சிலர் தமக்கிடையே பேசிக் கொள்கின்றனர். கடந்த காலத்தில் இதுபோன்ற தருணங்களில் 'தமிழர்களுக்கு ஒரு தீர்வோ, ஆறுதல் பரிசோ கிடைப்பதனை முஸ்லிம்கள் விரும்பவில்லையா' என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டமை இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றது. . 

இந்த எதிர்வினையின் உச்சக்கட்ட கற்பனையாக ஒரு கருத்து முன்வைக்கப்படுவதையும் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது முஸ்லிம் சமூகமானது தீர்வுத் திட்டத்தில் இவ்வாறான பங்கு கேட்பதானது, சில விடயங்களில் இழுத்துப் பிடிப்பதானது தமிழ் - முஸ்லிம் உறவுக்கு பாதகமாக அமையும் என்றும், இதனால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுவதுண்டு. 

ஆனால், அது தவறான ஒரு கருதுகோளாகும். ஏனெனில் தமிழ் - முஸ்லிம் உறவு என்பது மிகத் தொன்மையானது. இங்கு இன உறவு என்பது வேறு, தீர்வுத் திட்ட நகர்வுகள் என்பது வௌ;வேறானவை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். 

இனப் பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்படக் கூடிய 13ஆவது திருத்தம், அதிகாரப் பரவலாக்கல், சமஷ்டி உள்ளிட்ட எந்தவொரு ஏற்பாட்டிலும் முஸ்லிம்கள் தங்களுடைய அபிலாஷைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரும் போது, அதனை இன உறவோடு போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. 

இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவு என்பது மிகவும் தொன்மையானது. இந்த உறவு பற்றிய இலட்சக்கணக்கான சம்பவங்கள் நமது மூத்த தலைமுறையினரின் மனக் குறிப்புக்களில் உள்ளன. மதம் என்ற அடையாளத்தை தவிர மற்றெல்லா வழிகளிலும் பல ஒற்றுமைகளைக் கொண்ட ஒரே மொழியைப் பேசும் இரு இனக் குழுமங்களின் நட்பு என்பது ஒருபோதும் இருட்டடிப்புச் செய்ய முடியாதது. 

தமிழர்களின் போராட்டத்திற்கு முஸ்லிம்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி எவ்வாறு உதவிகளைச் செய்தார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அதேபோன்று. புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்கள் முன்கையெடுத்ததாலேயே இந்த உறவு கூரிய நகங்களால் கீறப்பட்டது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். 

ஆயதக் குழுக்கள் செய்த படுகொலைகளுக்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியாது. மறுபுறத்தில், ஆயுதங்கள் முன்கையெடுக்கத் தொடங்கிய பிறகு முஸ்லிம் ஊர்களில் இருந்த சண்டியர்களும், உணர்ச்சி மடையர்களும் குக்கிராம தமிழர்களை நோக்கி அங்குமிங்கும் செய்ததாகக் கூறப்படுகின்ற அட்டூழியங்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் நோக்கி விரல் நீட்டவும் விட முடியாது. இவர்கள் சாதாரண மக்கள் என்ற வகுதிக்குள் உள்ளடங்க மாட்டார்கள். 

சாதாரண தமிழர்களுக்கும் சாதாரண முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இப்போது வரை அது மிதமான ஒரு அளவில் இருந்து வருகின்றது. ஏன், சிங்கள மக்களுடன் கூட இந்த உறவை சிறுபான்மைச் சமூகங்கள் பேணிக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை மறந்து விடக் கூடாது. 

இரு இனங்களுக்கும் இடையிலான அடிமட்ட, பிரதேச வாரியான, சமூக மட்;டத்திலான உறவு உண்மையிலேயே அரசியல்வாதிகளினாலோ முக்கியஸ்தர்களினாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. எங்கோ நடக்கின்ற ஒரு சம்பவத்திற்காக  இஸ்மாயிலும் இளையராஜாவும் சண்டை பிடித்துக் கொள்வது கிடையாது. அதற்கான தேவையும் இல்லை. 

ஆனால், ஆயுதம் தரித்தோரும் ஊர்ச் சண்டியர்களும் கடந்தகாலத்தில் தமது சொந்த இலாபத்திற்காக அல்லது முன்-பின் சிந்திக்காது இன முறுகலை ஏற்படுத்தியது போல, இப்போது அரசியல்வாதிகளும், அமைப்புக்களும் வெளிச் சக்திகளும் குளிர்காய முற்படுகின்றன.  

அரசியல் ரீதியான முரண்பாட்டை அல்லது இரு சிறு குழுக்களுக்கு இடையிலான சிறிய விவகாரத்தை பூதாகரமாக்கி விடுவதற்கு அண்மைக் காலமாக சமூக வலைத்தள முட்டாள் பதிவாளர்களும் முயற்சிப்பதைக் காண முடிகின்றது. இது விடயத்தில் சாதாரண மக்கள் விழிப்பாக இருந்தால் இந்த உறவைப் பேண முடியும். 

ஆகவே, இனப் பிரச்சினை தீர்வு என்ற அடிப்படையில் முன்வைக்கப்படுகின்ற முறையான ஏற்பாடுகளில் முஸ்லிம்கள் தமது பங்கைக் கேட்பதால், இன ஒற்றுமை பாதிக்கப்படும் என்றோ முஸ்லிம்கள் குழப்புகின்றார்கள், தடைபோடுகின்றார்கள் என்றோ புது வியாக்கியானம் கூற யாரும் முற்படக் கூடாது. 

இனப் பிரச்சினையுடன் முஸ்லிம்களுக்கும் தொடர்பிருந்ததை யாரும் மறுக்க முடியாது. இதில் மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை. முஸ்லிம்கள் அரசியல் ரீதியான ஒருமித்த, பலமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க மறுபுறத்தில், இனப் பிரச்சினை விவகாரத்தில் முஸ்லிம்களை ஓரம்கட்டும் நகர்வுகளும் இடம்பெற்றன. 

சுமாதானப் பேச்சுவார்த்தைகள் உள்ளடங்கலாக பல தேசிய முக்கியத்துவமிக்க கலந்துரையாடல்களில்  முஸ்லிம்கள் தனியொரு தரப்பாக பார்க்கப்படவில்லை. ஒரு முக்கியமான ஆவணத்தில் முஸ்லிம்களை ஒரு தனி தேசிய இனமாக குறிப்பிடாமல், 'குழு' என்ற அடிப்படையில் வரையறை செய்திருந்தமை இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.  

முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக இனத் தீர்வு விடயத்தில் தமது நிலைப்பாட்டை காத்திரமான அடிப்படையில் முன்வைத்து வரவில்லை. இப்போது 13ஆவது திருத்தம் பற்றி பேசப்படுகின்ற போது கூட ஒரு கூட்டு நிலைப்பாட்டை முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுக்கவில்லை.  

இப்போது கூட, தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரான ஏ.எல்.எம். அதாவுல்லா மட்டுமே 13 தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிகின்றது. முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் கட்சிகள் எந்த சிபாரிசுகளையும் சமர்ப்பித்ததாக இக்கட்டுரை எழுதப்படும் வரை செய்தி வெளியாகவில்லை. 

இப்படி நிறையவே தவறுகளை முஸ்லிம் தரப்பு செய்துள்ள காரணத்தினாலேயே, திடுதிடுப்பென வந்து தமக்கும் பங்கு கேட்கின்றார்கள் என்ற தோற்றப்பாடு ஏற்படுகின்றது என்பதையும் நாமறிவோம். 

ஆயினும் கூட, இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் அதில் முஸ்லிம் சமூகத்தின் நலன்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை புத்தியுள்ள யாரும் மறுதலிக்க இயலாது. எனவே, இதிலுள்ள நியாயங்களை தமிழ் சமூகம் நேரிய மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right