‘ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஒருமித்த நாட்டுக்குள் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப்பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டை பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியமாகும். சகல பிரஜைகளும் சமமாக கருதப்பட்டு ஒவ்வொரு சமூகத்துக்கும் சுயமரியாதையுடன் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விழுமியம் மிக்க சமூகத்துக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின் இரண்டாம் கட்ட நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை காலி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு காலி நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்தும் விவகாரத்தில் தெற்கில் எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக அறிவித்ததையடுத்து நான்கு பெளத்த மாநாயக்க தேரர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அத்துடன் பெளத்த தேரர்கள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்துக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறான எதிர்ப்புக்கள் மேலெழுந்ததையடுத்து 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் விடயத்தில் இழுபறி நிலைமை ஏற்பட்டிருந்தது. தற்போது பொலிஸ் அதிகாரமற்ற 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு மீண்டும் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடி உள்ளமை தொடர்பில் தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. 13ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவாதப்பொருளாக்கியுள்ளமையினால் தெற்கில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். நீண்ட அரசியல் அனுபவமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை விவாதப்பொருளாக்கியுள்ளமையினால் உறங்கிக்கொண்டிருந்த தென்னிலங்கை கடும் போக்கு சக்திகள் மீண்டும் உயிர்பெற்றுள்ளதாகவும் அரசியலமைப்பில் ஏற்கனவே பாராளுமன்ற பெரும்பான்மை ஆதரவுடன் உள்ளீர்க்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மீண்டும் பாராளுமன்ற அனுமதியை கோரியுள்ளமை அநாவசியமான விடயம் என்றும் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியிருக்கின்றார்.
இதேபோன்றே சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாருக்கு அதிகாரத்தை வழங்கப்போகின்றார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக கூறிக்கொண்டு அதிகாரப்பகிர்வுக்கு எதிர்ப்புக்களை ஜனாதிபதி வலுப்படுத்தி தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் கருத்து கூறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஐ அமுல்படுத்தப் போகின்றேன் எனக்கூறி வேண்டுமென்றே குட்டையை குழப்பிக்கொண்டிருக்கின்றார் என்று சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக ஜனாதிபதி பகிரங்கமாக தெரிவித்தமையே தெற்கில் எதிர்ப்பலைகள் உருவாவதற்கு காரணம் என்ற தோரணையிலேயே இவர்களது கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. தற்போதைய நிலையில் இத்தகைய செயற்பாடு தேவையற்றதொன்று என்பதாகவே இவர்களது கூற்றுக்கள் அமைந்துள்ளன.
உண்மையிலேயே 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் விடயத்தில் நாட்டிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் ஓர் நிலைப்பாட்டுக்கு வருமேயானால் இத்தகைய எதிர்ப்புக்களை இல்லாதொழிக்க முடியும். ஏனெனில் எமது நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது சிங்கள இனவாத தரப்புக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது வழமையானதொரு செயற்பாடாகவே காணப்படுகின்றது.
பெளத்த சிங்கள பேரினவாத சக்திகள் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை வழங்குவதை விரும்புவதாக இல்லை. அந்த மக்களுக்கு தீர்வுகள் வழங்கப்படுமானால் அது சிங்கள பெளத்த தேசிய வாதத்துக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்று இந்த சக்திகள் எண்ணிவருகின்றன.
ஒருபக்கம் சிங்கள பெளத்த இனவாத சக்திகளின் எதிர்ப்பலை காணப்படுகின்ற நிலையில், சுயநல அரசியல் நோக்கத்துக்காக சிங்கள மக்களை தூண்டிவிடும் செயல்பாட்டில் சில அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றமையையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆதரித்து வருகின்றது. 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இருந்து வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சர்வகட்சி குழுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த பாராளுமன்றத்திலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் கூறியிருந்தார்.
தற்போது தனது ஆட்சியில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகார பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். பெளத்த பிக்குக்கள் மத்தியில் காலியில் உரையாற்றியபோது அவர் இதனை திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை பாராட்டத்தக்க செயற்பாடாகவே அமைந்துள்ளது.
ஏனெனில் ஐக்கிய மக்கள் சக்தியானது 13ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் ஒரே கொள்கையை கொண்டுள்ளது. காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதிலிருந்து அந்தக்கட்சியின் நிலைப்பாடு தெளிவாகின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் என்று கோருகின்றது. ஆனாலும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படக்கூடாது என்ற விடயத்தில் அந்தக்கட்சி உறுதியாக இருக்கின்றது.
தற்போது 13ஆவது திருத்த விடயத்தில் முரண்பாடான நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுனகட்சியே உள்ளது. அரசாங்கத்தின் பிரதான அங்கத்துவக்கட்சியான பொதுஜன பெரமுன 13ஆவது திருத்த விடயத்தில் மாறுபட்ட கொள்கையை கொண்டிருக்கின்றது. அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக் ஷ 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு காண தயார் என்று கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயம் தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷவிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இதற்கு இணங்கியிருந்தார்.
அதற்கு முன்னரும் இந்தியாவிடமும் 13க்கு அப்பால் சென்று தீர்வு காண தயார் என்று மஹிந்த ராஜபக் ஷ உறுதி வழங்கியிருந்தார். ஆனால் தற்போது அந்தக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் 13 குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். 13ஐ அமுல்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளதுடன் அதனை நடைமுறைப்படுத்துவதானால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தலாம் என்றும் யோசனை முன்வைத்துள்ளார்.
13 தொடர்பில் ஜே.வி.பி.யும் முரண்பட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது. ஆனாலும் தமிழ் மக்களுக்கு 13ஆவது திருத்தம் தீர்வை வழங்குமானால் அதனை எதிர்க்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கொண்டுள்ளதாகவே தெரிகின்றது.
இவ்வாறான நிலையில் தற்போது 13ஆவது திருத்தம் தொடர்பில் பொதுஜன பெரமுன தீர்க்கமான முடிவொன்றுக்கு வருமானால் அதனை அமுல்படுத்துவது ஒன்றும் கடினமாக காரியமாக அமையப்போவதில்லை.
ஏனெனில் ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி , சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி , மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன 13ஐ அமுல்படுத்துவதற்கு ஆதரவாக உள்ளன. பொதுஜன பெரமுனவும் இணக்கத்துக்கு வருமானால் அதனை அமுல்படுத்துவதற்கான சூழல் உருவாகும்.தெற்கின் எதிர்ப்புக்களையும் இல்லாது செய்ய முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM