சுபத்ரா
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல, HAI YANG 24 HAO என்ற சீனக் கடற்படை கப்பல் கடந்த 10ஆம் திகதி காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தது.
138 மாலுமிகளுடன் வந்த 129 மீற்றர் நீளம் கொண்ட அந்தக் கப்பல், மூன்றாவது நாள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சென்று விட்டது.
அந்தக் கப்பல் புறப்படும் போது தான், சீனக் கப்பலின் வருகைக்கு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியத் தரப்பில் கவலை வெளியிடப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியது.
இந்தியாவின் எதிர்ப்பினால் தான், சில நாட்கள் தாமதமாக அந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்தது என்றும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
அடுத்தடுத்த நாட்களில், இந்தியா எதிர்ப்பு வெளியிட்டது, HAI YANG 24 HAO என்ற கப்பலுக்கு அல்ல, அது மற்றொரு கப்பலுக்கு என்றும் கூறப்பட்டது.
ஆனால் HAI YANG 24 HAO என்ற கப்பலை சாதாரணமாக மதிப்பிட்டு விட முடியாது. சீனாவின் விசேட ஆய்வுக் கப்பல் அது.
HAI YANG 24 HAO என்பதன் தமிழ் மொழியாக்கம் “பெருங்கடல் 24” ஆகும்.
ஆனால், இந்தப் பெயரில், சீன கடற்படையின் ஆய்வுக் கப்பல்கள் எதுவும் இருப்பதாக பகிரங்கத் தரவுகளில் இல்லை. சீனாவின் படைத்தளபாடங்கள் தொடர்பான தரவுகள் எல்லாமே பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. இரகசியமான கப்பல்கள், விமானங்களும் இருக்கின்றன.
அதுபோல ஒரே பெயரில் வெவ்வேறு குழப்பமான போர்க்கப்பல்களையும் சீனா பயன்படுத்துகிறது. சிலவற்றுக்கு பெயரிடாமலும் பயன்படுத்துகிறது.
கொழும்பு வந்ததாக கூறப்படும் HAI YANG 24 HAO கப்பல், அவ்வாறான ஒன்றாகத் தான் கருதப்படுகிறது.
இந்தக் கப்பல் கடந்த ஜூன் 10ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் கேப் டவுண் துறைமுகத்துக்குச் சென்றது.
ஆரவாரமின்றி அந்தக் கப்பல் கேப்டவுண் துறைமுகத்துக்குள் நுழைந்தது என்று ஆபிரிக்க துறைமுகங்கள், கப்பல்கள் பற்றிய தகவல்களை வெளியிடும் இணையம் ஒன்று படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், இலங்கை கடற்படை வெளியிட்ட தகவலில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் போர்க்கப்பல் என்றே குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர, அது எந்த வகையை சேர்ந்தது என்ற தகவல்கள் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை.
சீனாவின் இந்த விசேட ஆய்வுக் கப்பல், அதன் உண்மைத் தகவல்களைத் கொடுத்து, கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசித்ததா என்ற சந்தேகமும் உள்ளது. எவ்வாறாயினும், இந்தக் கப்பலின் பயணம் ஒரு முன்னோட்டம் தான்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி சீனக் கடற்படையின் Shi Yan 6 என்ற ஆய்வுக் கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது.
17 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் தரித்து நின்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள இந்தக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலின் வருகை உறுதி செய்யப்பட்டு, இந்தியாவுக்கும் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் தான், அங்கிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இலங்கை கடற்படை கடந்த 16ஆம் திகதி வரை, சீனக்கப்பல் வருவது குறித்து பாதுகாப்பு அமைச்சு தமக்குத் தெரியப்படுத்தவில்லை என்றே கூறிக் கொண்டிருந்தது.
சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6, ஒக்டோபர் 25ஆம் திகதி கொழும்பு வரும் என்றும், நாரா எனப்படும், தேசிய கடல் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகாமையுடன் இணைந்து அது ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் 16ஆம் திகதியே கடற்படைப் பேச்சாளர், கூறினார்.
ஆனால், ருகுணு பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, தங்களின் சொந்த ஆராய்ச்சிக்காக கடல் நீர் மாதிரிகளைப் பெறுவதற்காகவே சீனக் கப்பல் வருவதாக நாரா அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த ஆய்வின் போது, சீன ஆய்வுக் கப்பலில் தங்களின் ஆய்வாளர்கள் இணைந்து பணியாற்றுவதற்கு அனுமதி கோரியதாகவும இதுவரை அந்த அனுமதி வழங்கப்படவில்லை என்றும், ருகுணு பல்கலைக்கழக சமுத்திரவியல் மற்றும் கடல் வளங்கள் துறை தெரிவித்துள்ளது.
சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 தொடர்ந்து 17 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் தரித்து நிற்பதை இந்தியா விரும்பவில்லை.
இதுகுறித்த இந்தியா இராஜதந்திர ரீதியான எதிர்ப்பை பதிவு செய்திருப்பதாக புதுடெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச சந்தித்து பேச்சு நடத்திய போது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கவலைகளை இலங்கை அரசாங்கம் உணர்வுபூர்வமாக எடுத்துக் கொள்ளும் என்று உறுதியளித்திருந்தார்.
ஆனால், ஒரே மாதத்தில் சீன ஆய்வுக் கப்பல்களுக்கு, இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்ததை இந்தியா அதிர்ச்சியுடன் கவனிக்கிறது.
2014ஆம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் சென்றதால், அப்போதைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்துக்கும் புதுடெல்லிக்கும் இடையில் இராஜதந்திர மோதல்கள் உருவாகின. அதனால் தான், 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிக்க இந்தியா தனது புலனாய்வு அமைப்பின் ஊடாக வேலை செய்தது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பின்னர், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வரவில்லை. நல்லாட்சி அரசின் காலத்தில், சீன நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்துக்கு வர அனுமதி கோரிய போதும், ரணில் விக்கிரமசிங்க அதனை நிராகரித்து விட்டார்.
ஆனால், கடந்த ஓகஸ்ட் மாதம், சீனாவின் செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தட கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங்-5 இந்தியாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துச் சென்றது. அதற்குப் பின்னர், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடந்த ஒரு வருடமாக எந்தவொரு வெளிநாட்டுப் போர்க்கப்பலுக்கும் அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.
செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தட கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 6 அம்பாந்தோட்டைக்கு வருகை தருவதற்கு அனுமதி கோரிய போதும், அது அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.
தற்போது சீனாவின் விசேட ஆய்வுக் கப்பல் கடந்த வாரம் கொழும்பு வந்து சென்ற நிலையில், மற்றொரு ஆய்வுக் கப்பல் ஒக்டோபரில் கொழும்பு வரவுள்ளது.
இதற்கு இந்தியாவிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியிருப்பது ஆச்சரியம் இல்லை.
ஏனென்றால், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் 25இற்கும் அதிகமான ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கப்பல்கள் தொடர்ச்சியாக நடமாடிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான கப்பல்களால், தங்களின் பாதுகாப்பு திட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று இந்தியா மாத்திரமல்ல, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளும் அச்சம் கொண்டிருக்கி்ன்றன.
கடந்த ஆண்டு யுவான் வாங் 5 கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த போது, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், பதவிக்கு வந்து ஒரு மாதமே ஆகியிருந்தது.
அதற்கு முன்பிருந்த கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கம் அளித்த அனுமதியின் அடிப்படையில் தான், சீன கப்பலை அம்பாந்தோட்டையில் அனுமதித்ததாகவும், அதனை நிராகரித்தால் சீனா நெருக்கடி கொடுக்கும் என்று கூறி ரணில் அரசாங்கம் சமாளித்திருந்தது.
அதே ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் போய், இந்தியாவின் கரிசனைகளை உணர்வு பூர்வமாக அணுகுவதாக வாக்குறுதி கொடுத்து விட்டு, சீன ஆய்வுக் கப்பல்களுக்கு அனுமதியை கொடுத்திருக்கிறார்.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதால் சர்வதேச கப்பல் பாதையின் ஊடாக பயணிக்கும் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களை நாடுவது இயல்பு.
2020ஆம் ஆண்டு தொடக்கம், 2023 ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில், 160 வெளிநாட்டுப் போர்க்கப்பல்களும், 5 ஆய்வுக் கப்பல்களும் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்திருக்கின்றன.
கொழும்பு துறைமுகத்துக்கு 107 கப்பல்களும், திருகோணமலை துறைமுகத்துக்கு 35 கப்பல்களும், வந்திருக்கின்ற நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு குறித்த காலப்பகுதியில் 10 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தான் வந்திருக்கின்றன.
இந்தக் காலகட்டத்தில் இலங்கைக்கு வந்த பெரும்பாலான போர்க்கப்பல்கள் இந்தியா மற்றும் ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமானவை.
ஆனால், இவற்றின் வருகையின் போதோ, அமெரிக்க, பிரெஞ்சு போர்க்கப்பல்களின் வருகையின் போதோ சர்ச்சைகள் உருவாகுவதில்லை.
கடந்த ஜூன் மாதம் இந்தியக் கடற்படையின் விகார் என்ற நீர்மூழ்கி கப்பல் கொழும்பில் தரித்துச் சென்றது. ஜப்பானிய கடற்படையின் நாசகாரி ஒன்று, கொழும்பு துறைமுகத்தில் திருத்தப் பணிகளையும் மேற்கொண்டது.
ஆனால், சீன கடற்படையின் நீர்மூழ்கிகள், ஆய்வுக் கப்பல்களை இந்தியா நெருங்க விடாமல் தடுக்கப் பார்க்கிறது.
இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க- போர்க்கப்பல்கள், விமானங்களின் வருகையினால் ஏற்படக் கூடிய இராஜதந்திர நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக, ஒரு நிலையான நடைமுறை கோவையை உருவாக்கியிருக்கிறது அரசாங்கம்.
இந்த நடைமுறைக் கோவைக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்து ஒரு மாதமாகியும், அது இன்னமும் அரசாங்கத்தினால் செயற்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
எவ்வாறாயினும், வரும் செப்டெம்பர் மாதம் அந்த நடைமுறையை அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கிறது. இல்லையென்றால், சீனக் கப்பலின் வருகையால் இந்தியாவுடனான உறவுகளில் குழப்பம் ஏற்படும் என்பது அரசாங்கத்துக்கு தெரியும்.
ஆனால், இலங்கை அரசாங்கத்தின் அந்த நிலையான நடைமுறை கோவையை இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அது பாரபட்சமானதென அந்த நாடுகள் கருதினால் இந்த நடைமுறைக் கோவையினால் எந்த பயனும் கிடைக்காது.
இவ்வாறான நிலையான நடைமுறை விதிகள், எந்த மனநிலையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது அது வெளியிடப்பட்ட பின்னரே தெரியவரும்.
ஏனென்றால் இலங்கையை தனது மிதக்கும் தளமாகவே இந்தியா பார்க்கிறது. அதற்குள் பிற தரப்புகள் ஊடுருவுவதை விரும்பவில்லை.
இதனை மனதில் கொள்ளாமல் உருவாக்கப்பட்டால், அந்த நிலையான நடைமுறை விதிகள் கூட நிலையற்றதாகி விடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM