இந்தியா பார்வையாளராக இருக்கப்போவதில்லை
அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்
வெளியக சுயநிர்ணய ஆதரவை கோர தயங்கப்போவதில்லை
சிங்கள, பௌத்த நிகழ்ச்சி நிரலுக்கு முற்றுப்புள்ளி தேவை
(ஆர்.ராம்)
தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் திட்டமிட்ட கெடுபிடிகள் நீடிப்பதற்கு இடமளிக்க முடியாது என்று குறிப்பிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், அந்நிலைமைகள் தொடர்ந்தால் அஹிம்சை வழியில் மக்கள் தமது உரிமைகளுக்காக அணி திரண்டு போராடும் நிலைமைகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் தேரர்கள் பௌத்த நிர்மாணங்களை மேற்கொள்வதற்கு தொடர்ச்சியாக முனைப்புக்களை செய்து பதற்றமான சூழல்களை உருவாக்கி வருகின்றமை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுக்களின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் 13ஆவது திருத்தச்சட்டம், அதிகாரப்பகிர்வு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்றார்கள். ஆகவே, அவர்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கு உள்ளக சுயநிர்ணய உரிமையை கோருவதற்கு உரித்துடையவர்கள்.
அதன் அடிப்படையில், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று நிரந்தரமானதாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தினை மையப்படுத்தியும், இந்திய இலங்கை ஒப்பந்தம், 13ஆவது திருத்தச்சட்டம் ஆகியவற்றை அமுலாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைவாக முன்மொழிவை அனுப்பி வைத்துள்ளேன்.
அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்
அதேநேரம், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் சம்பந்தமான ஜனாதிபதியுடனான உரையால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்திய படையினர் மற்றும் தேரர்கள் உள்ளிட்டவர்களின் கெடுபிடியான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தோம்.
அத்தோடு, மேற்படி தரப்பினரின் செயற்பாடுகளால் சரித்திர ரீதியாக தாம் வாழ்ந்த பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் பெருவாரியாக வெளியேறியுள்ளதோடு, தற்போதும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலைமையானது வடக்கு, கிழக்கில் செறிவாக வாழும் தமிழ் மக்களின் பரம்பலை மாற்றி பெரும்பான்மை மக்களை பெருவாரியாக அதிகரிக்கச் செய்வதற்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகும்.
இந்த நிகழ்ச்சி நிரல் தொடர முடியாது என்பதையும் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். அப்போது, குறித்த விடயங்கள் உடன் நிறுத்தப்படும் என்ற உறுதிமொழி அரசாங்கத்தினால் எமக்கு வழங்கப்பட்டது. எனினும், அந்த நிலைமைகள் தற்போதும் தொடருகின்றன.
குறித்த செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. அவ்விதமான நிலைமைகள் நீடிக்குமாயின், அஹிம்சை வழியில் தமிழ் மக்கள் அணி திரண்டு போராடும் நிலைமையே ஏற்படும். அந்த நிலைமையை தவிர்க்க முடியாது.
இந்தியா பார்வையாளராகாது
தமிழ் மக்களை பொறுத்தவரையில், அவர்களின் உள்ளக சுயநிர்ணய உரித்துடையவர்கள். இந்த விடயம் ஐக்கிய நாடுகள் சாசனங்களின் ஊடாகவும், 1983ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் விடயங்களில் கரிசனைகளைக் கொண்டு, 1987ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கொண்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, இந்திய - இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகளாகியுள்ள நிலையில், அந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தாதிருக்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக அதனை மீறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் பார்வையாளராக இருக்கப்போவதில்லை. இந்தியா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கோரிக்கைகளை நாம் அழுத்தமாக முன்வைப்பதற்கு தயாராகவே உள்ளோம்.
தயங்கப்போவதில்லை!
மேலும், தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகளும் ஆக்கிரமிப்புக்களும் பதற்றமான சூழல்களும் தொடரும் நிலையில், அவரின் உரித்துக்கள் மறுதலிக்கப்பட்டால், ஐ.நா சாசனங்கள் மற்றும் கட்டமைப்புக்களின் உதவியுடன் நாம் வெளியக சுயநிர்ணய உரித்தினை கோருவதற்கான நிலைமையொன்று ஏற்படும்.
அவ்விதமான நிலைமைக்குள் எம்மை தள்ளிச் செல்லாமல், அரசாங்கம், தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமாகவும், சாந்தி, சமாதானமாகவும், தங்களுடைய விடயங்களை தாங்களே பார்த்துக்கொள்ளும் வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது.
இந்த விடயத்தில், எமது மக்கள் விரும்பாத எந்தவொரு விடயத்தினையும் தீர்வினையாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதில் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமில்லை.
தமிழ் மக்கள் 1956ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆணைக்கு அமைவாக, சமஷ்டி அடிப்படையில் நியாயமான நிரந்தர தீர்வு அமைய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM