தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சசிகலா நடராஜன், தான் எதற்காக முதலமைச்சர் பதவியை ஏற்றேன் என தன்னிலை விளக்கமொன்றை அளித்துள்ளார்.

குறித்த விளக்கத்தில் ஜெயலலிதா இறந்தவுடனே, கட்சியின் பொதுச் செயலராகவும், முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு ஓ. பன்னீர்செல்வம், தன்னை வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் நடந்த நிகழ்வின் போது இதனை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் அதிமுகவினர் தொடர்ந்து தன்னைச் சந்தித்து வைத்த கோரிக்கையால் கட்சியின் பொதுச் செயலராகப் பொறுப்பேற்றேன். அதேபோல், இப்போதும், கட்சியின் பொதுச் செயலராகவும், முதலமைச்சராகவும் ஒருவரே இருக்க வேண்டும் என்ற கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே முதல்வர் பதவியை தான் ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அத்தோடு மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் கனவை முழுமையாக நிறைவேற்றுவதோடு, மக்களுக்கான ஆட்சியாக தனது ஆட்சி அமையுமென்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் விரிசல் வராதா என்று கனவு கண்ட அரசியல் எதிரிகளின் எதிர்பார்ப்புகளைப் முறியடித்துள்ள நிர்வாகிகளுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், கட்சிக்கு சோதனை வந்த போதெல்லாம், ஜெயலலிதா அவர்கள் முதல்வராகத் இருக்க முடியாத நிலையில், கட்சித் தலைமைக்கு விசுவாமாகத் திகழ்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம் என அவரை பாராட்டியும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.