ராகு - கேது பெயர்ச்சி (2023 - 2025) ராசி பலன்கள்

16 Aug, 2023 | 05:27 PM
image

ராகு - கேது பெயர்ச்சி (2023 - 2025)

பொது பலன்கள்

எதிர்வரும் 08.10.2023 அன்று மாலை 03.40 மணிக்கு ராகு பகவான், மேஷ ராசியிலிருந்து மீன ராசியிலுள்ள ரேவதி 4ஆம் பாதத்துக்கும், கேது விருச்சிக ராசியிலிருந்து கன்னி ராசியிலுள்ள சித்திரை நட்சத்திரத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள். 

இதன் மூலம் கால புருஷ தத்துவப்படி, ஆறாம் இடத்தில் கேதுவும், பன்னிரெண்டாம் இடத்தில் ராகுவும் அமர்ந்து ஒன்றரை ஆண்டுகாலம் பலன் தருகிறார்கள். எப்பொழுதும் எதிரெதிர் திசையில் இருவரும் பயணம் செய்வதால் தனித்தனியே பலன்களை தருவார்கள்.

உலக நாடுகளின் வளர்ச்சி, வர்த்தகம், ஆன்மிகம், இதற்கு இருவரும் பொறுப்பாக இருப்பதால் எதிலும் திறம்பட செயல்படும் சுறுசுறுப்புகள் இருக்கும். போதைப்பொருட்களை அழித்துவிடுவது, கடத்தல்காரர்கள் பிடிபடுவது, காவல் துறையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். 

சிறு குற்றத்துக்கு பல நாடுகளில் பெரிய தண்டனையை அடைய வேண்டிவரும். யோக மார்க்கத்துக்கு செல்வதற்கான பல விடயங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் அமையும். முதலீடு இல்லாத கமிஷன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தங்கம் விலை மேலும் உயரும். 

புதிய கப்பல்கள் அறிமுகப்படுத்தப்படும். மீன் வளம் பெருக நடவடிக்கைகள் உண்டாகும். மலை பிரதேசங்களில் அடிக்கடி அக்னி மூலம் சில அழிவுகள் உண்டாகும். பனிப்பாறைகள் உருகி திடீர் வெள்ளம் உண்டாகும். மருத்துவமனைகளில் நவீனமாக்கப்பட்ட உதவிகள் கிடைக்கும். 

மறைமுக வியாபாரம் பல நாடுகளில் சூடுபிடிக்கும். புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடித்து குணப்படுத்தப்படும். வெளிப்புற தோற்றத்தை வைத்து எதை செய்தாலும் தோல்விகளாக இருக்கும். புதிய நோய் பரவி பல நாடுகள் பாதிக்கப்படும். 

மேஷம்

வளமான சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்ளும் மேஷ ராசி வாசகர்களே!

இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களின் வாழ்வில் உன்னதமான நிலையை அடையச் செய்யும். உறுதியும் தெளிவும் கொண்டு செயற்படுவீர்கள். உங்களின் ராசிக்கு ராகு பன்னிரெண்டிலும், கேது ஆறாமிடத்திலும் அமர்வது நற்பலன்களை தரும். 

ராகுவால் விரையஸ்தானம் கெட்டுப்போகும். இதனால் தேவையற்ற விரைய செலவுகள் குறையும். அதுபோல வெளிநாடு செல்ல முயற்சிகளை செய்து வருபவருக்கு நல்ல வேலையுடன் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு சுற்று பயணங்கள் செல்லவும் வாய்ப்பு அமையும். 

முதியவர்களாக இருந்தால் நல்ல ஓய்வையும், குடும்ப நபர்களுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பையும் பெறுவீர்கள். உங்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நடக்கும். கேது ஆறாமிடத்தில் அமர்வது உடல் நலனின்றி இருப்பவர்களும் நீண்ட நாட்கள் என்ன நோய் என்று ஆராய முடியாமல் இருப்பவர்களும் நோயறிந்து, வைத்தியம் செய்து சரி செய்துகொள்வீர்கள். காரணமில்லாத கடன் சுமைகள் குறையும். 

உங்களை வெறுத்து ஒதுக்கியவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களை ஏமாற்றி வருபவரை அடையாளம் கண்டுகொள்வீர்கள். ஆன்மிக தகவல்கள் உங்களுக்கு நல்ல பலனை தரும். சட்ட ரீதியான சவால்களை சந்திக்க வேண்டிவரும். நிரந்தரமான வருமானத்துக்கு வழியைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு விளக்கெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு வர, சிறப்பான மேன்மை உண்டாகும்.

ரிஷபம்

தெளிவான விடயங்களை கையாண்டு மேன்மை பெறும் ரிஷப ராசி வாசகர்களே!

இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் ராகுவும், பூர்வ புண்ணியஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டுகாலம் பலன் தருகிறார்கள். உங்களின் தொழிலில் பல காலம் முன்னேற்றமின்றி இருந்த நிலை மாறி சற்று முன்னேற்றம் உண்டாகும். 

குரு விரையஸ்தானத்தில் இருப்பதால் தங்க நகைகளை அடகு வைத்து தொழில் செய்ய வேண்டிய நிலை உருவாகும். இது முதலீடாக இருந்தாலும், தொழிலில் சிலருக்கு முன்னேற்றத்தை தரும். 

ஆக்கபூர்வமாக சிந்தித்து செயற்படும் திறனை வளர்த்துக்கொள்வீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆற்றலும், அறிவு மேன்மையும் உண்டாகும். தனியார் துறையில் நல்ல சம்பளமும், நல்ல வளத்துடனும் வேலை வாய்ப்பை பெறுவீர்கள். சிலருக்கு உத்தியோகத்திலிருந்து புதிய இடமாற்றமும், இடமாற்றத்தால் வீண் அலைச்சலும் உண்டாகும். 

கேது உங்களுக்கு பூர்வ புண்ணியஸ்தானத்தில் இருப்பது உங்களின் புத்திரன், புத்திரியால் கல்வி மேம்பாட்டுக்கு புதிய கடன் படும் நிலை வரும். இதுவும் சுப செலவாக அமையும். 

சிலருக்கு திருமணம் நடத்துவதற்கு தேவையான பணம் தயாரிக்க வேண்டிவரும். எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் நல்ல பலனைத் தரும்.

பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுகள் சமரசமாக இருக்காது. ஏதாவது தடையை அடைய வேண்டிவரும். சிலருக்கு முயற்சிகளில் கால தாமதமானாலும், விரைவில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பெண்களின் வாழ்க்கை சுபிட்சமாக அமையும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர, உங்களின் காரியம் தடையின்றி நடக்கும். விநாயகர் வழிபாடு, விநாயகர் உருவப்படம் பொறித்த டொலரை வைத்துக்கொள்வது நல்லது.

மிதுனம்

வெளிப்படையான பேச்சால் சாதிக்கும் மிதுன ராசி வாசகர்களே!

இந்த ராகு - கேது பெயர்ச்சி 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டு காலம் தொழில் ஸ்தானத்தில் ராகுவும், சுகஸ்தானத்தில் கேதுவும் அமர்வது, கேத்திரத்தில் அமர்வது நற்பலன்களை பெற்றுத் தரும். எதிர்பார்த்த நற்செய்திகள் உங்களை தேடி வரும். 

முக்கிய காரியங்களுக்காக சிலர் வெளியூர் சென்று வருவீர்கள். எந்த முடிவும் உடனே எடுக்காமல் யோகித்து செயற்படுவீர்கள். அன்பர்களுக்கு வேலைக்கான விசா விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள். சுமையாக இருந்த காரியங்கள் வெகு விரைவில் நடந்தேறும்.

மீனவர்களுக்கு நல்ல வருமானமும், புதிய படகுகள் வாங்க உதவிகளும் கிடைக்கும். அரசியலில் சிறந்த ராஜதந்திரியாக இருந்து செயற்படுவீர்கள். சுகஸ்தானத்தில் கேது அமர்வதால் தாயார் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 

உங்களின் உடல் நலனில் இனந்தெரியாத சில உபாதைகள் உண்டாகும். விரைவில் சரியாகும். ஒரு வேலையை பல முறை சென்று பார்க்கும்படி அமையும். வாகனம் பழுது நீங்குதல், புதிய வாகனம் வாங்குவது போன்றவை நடக்கும். எதிர்பார்த்த காரியத்தில் உங்களின் நண்பரின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். 

பொருளாதாரத்தில் சிலருக்கு தன்னிறைவு உண்டாகும். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துகொள்வீர்கள். சட்ட ரீதியான எந்த விடயங்களையும் துணிச்சலுடன் செய்து வெற்றி காண்பீர்கள். ஆன்மீக நாட்டத்தில் கவனம் செலுத்துவீர்கள். 

மனைவி உங்களிடம் சிறு மனவருத்தம் கொண்டாலும், அது நீடிக்காது. பொருளாதார முன்னேற்றத்துக்கு வழி கிடைக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி காலங்களில் நாக தேவதைகளுக்கு விளக்கேற்றி, அரளி பூ அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்வதன் மூலம் சகல காரியங்களும் வெற்றியை தரும்.

கடகம்

சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் கடக ராசி வாசகர்களே!

இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டு காலம் வளமாக வாழ்வதற்கு உரிய பலன்களை தருவார்கள். அட்டம சனி தாக்கம் குறைய ராகு - கேது பக்க பலமாக அமைவார்கள். உங்களின் முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்ந்து ராசியை பார்ப்பது, விடாமுயற்சிகளால் சகல காரியங்களையும் வெற்றிகொள்ள, முன்னேற்றம் உண்டாகும்.

காரியத்தில் கவனம் செலுத்தி உறுதியுடன் செயற்பட்டு மேன்மை அடைவீர்கள். பேச்சிலும் செயலிலும் தேவையான வளர்ச்சியை அடைவீர்கள். திடீர் வேலைவாய்ப்பும், பொருளாதாரத்தில் மேன்மையும் உண்டாகும்.

உங்களின் தனிபட்ட திறமையை வளர்த்துக்கொள்ள உதவி கிடைக்கும். அரசியலில் சில தடைகள் வந்தாலும், நல்ல உறுதியான செயற்பாடுகளால் முன்னேற்றம் உண்டாகும். 

பாக்கியஸ்தானத்தில் ராகு அமர்வது தொழிலில் நல்ல வாடிக்கையாளர்களை பெறுவது, கவர்ச்சிகரமாக பேசி வளம் பெறுவது போன்றவற்றில் திறமை உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். 

தெய்வ வழிபாடுகள், தீர்த்த யாத்திரை உங்களை தெளிந்த மனநிலையில் செயற்பட வைக்கும்.  அத்தோடு, உங்களின் முயற்சி வெற்றியை பெற்றுத் தரும். இதுவரை வராமல் இருந்த தொகையை வரவழைக்கும் வாய்ப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். 

அரசியலிலும் பொது வாழ்விலும் தடைகள் நீங்கி, உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். தன்னலம் இல்லாத உங்களின் சேவைக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் அரவணைப்பு உங்களை ஊக்கப்படுத்தும். உழைப்பு ஒன்றின் மூலம் நல்ல நிலைக்கு வருவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்து, நல்லெண்ணெய் தீபமிட்டு அரளி பூ மாலை போட்டு, தேசிக்காய் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் அனுகூலமாக அமையும்.

சிம்மம்

காலத்தை நிர்ணயித்து கடமையைச் செய்யும் சிம்ம ராசி வாசகர்களே!

இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டு காலம் உங்களின் வளம் பெறச் செய்ய, பல உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். 

கேது தனஸ்தானத்திலும், ராகு அட்டமஸ்தானத்தில் அமர்வது நல்ல பலன் இல்லை என்றாலும், ஓராண்டு காலம் குருவின் பாதுகாப்பு இருப்பதால், பெரியளவில் கெடு பலன்கள் இருக்காது. இருப்பினும், அதிகம் பேசுவதை தவிர்த்துவிடுவதும், பேசும் பேச்சில் எச்சரிக்கையுடன் இருப்பதும் நல்லது.

ஆக்கபூர்வமான காரியங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வளம் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும் நிலை உண்டாகும். அதிக செலவுகளை குறைத்துக்கொண்டு, தொழிலில் கவனம் செலுத்துவீர்கள்.

விளையாட்டுத்துறையில் சிலருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். கலைத்துறையினருக்கு  முயற்சிக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியலிலும், அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்கும் தடைகள் நீங்கி, வருமானமும், வரவேண்டிய உதவித் தொகையும் கிடைக்கப் பெறுவீர்கள். 

அட்டம ராகு, குரு வீடு என்பதால் குருவின் குணத்தை ஒத்து தொடர்ந்து உங்களின் செயல்கள் அமையும். பிணயம் இடுவது, கூட்டுத்தொழில் மூலம் இணைந்து கைசாத்திடுவது உங்களின் எதிர்கால நலனை பாதிக்கும். இவ்விடயங்களில் அதிக விழிப்புணர்வு தேவை.

திருமணத்தில் தடைகள் வந்து தேவையற்ற செயல்களுக்கு வழிவகுக்கும். எனினும் உங்களின் ராசியை குரு பார்ப்பது நல்ல காலமாக அமையும். எதையும் தாங்கிக்கொண்டு செயற்படுவீர்கள். புதிய யுக்தியை கையாள்வதும் செயல்களில் மாற்றம் கொண்டு வருவதும் உங்களின் வளர்ச்சிக்கு நன்மையை உண்டாக்கும். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு கலைத்துறையில் நற்பெயர் கிடைக்கும். பேச்சாற்றல் இருக்குமளவுக்கு திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

பரிகாரம்: விநாயகர் வழிபாட்டோடு, பீஜ மந்திரம் உச்சரித்து தொடர்ந்து வேண்டிக்கொள்ள நல்ல காலமும், திடமான வளம் பெறும் நல்ல வாய்ப்பும் அமையப் பெறுவீர்கள்.

கன்னி

திட்டமிட்டு செயற்பட்டு, பலனைப் பெறும் கன்னி ராசி வாசகர்களே!

இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டுகாலம் கன்னி ராசியில் கேதுவும், ஏழாமிடத்தில் ராகுவும் அமர்ந்து பலன் தருவார்கள். எதையும் ஷண நேரத்தில் செய்து முடிக்கும் தைரியமும் துணிச்சலும் உண்டாகும்.

கடந்த கால கஷ்டங்களிலிருந்து மீண்டு, இனி உங்களின் செயற்பாடுகளை துரிதப்படுத்திக்கொள்வீர்கள். சிறு பாதிப்பை கூட தாங்கிக்கொள்ளமாட்டீர்கள். உறுதியான முடிவுகளை எடுக்க தயக்கம் காட்டமாட்டீர்கள்.

உறவுகள் உரிமை எடுத்துக்கொண்டால் ஏற்பீர்கள். வாதம் செய்தால் துண்டித்துக்கொள்வீர்கள். கணவன் - மனைவி உறவு பலப்படும். அடிக்கடி சிறு சண்டைகள் வந்து மறையும். தெற்கு திசை பயணம் பயனுள்ளதாக அமையும்.

பச்சை நிற ஆடை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி நற்பலனை கொடுக்கும். நண்பர்களின் சேர்க்கைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முக்கிய விடயங்களில் உங்களின் தலையீடுகளை குறைத்துக்கொள்வீர்கள். 

கேதுவின் செயல்களால் உங்களின் திடமான நம்பிக்கைக்கு வழி கிடைக்கும். நூதனமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். சரியான நேரத்தில் காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

சிலர் சமயோசிதமாக செயற்பட்டு, அனைத்து விடயங்களிலும் நன்மை அடைவீர்கள். திட்டமிட்டபடி, கலைஞர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சிகளை செய்து முடிப்பீர்கள்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சில பொறுப்புகள் தேடி வரும். காரியத் தடைகள் நீங்கி வளம் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். தொழிலில் பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும். 

பரிகாரம்: வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து நாகம் தலையில் கூடிய அம்மன், கருமாரி, நாக தேவதைகளை வணங்கி, நெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள மேன்மை உண்டாகும்.

துலாம்

விடாமுயற்சியும் விவேகமும் கொண்டிருக்கும் துலாம் ராசி வாசகர்களே!

இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டுகாலம், உங்களின் ராசிக்கு விரையஸ்தானத்தில் கேதுவும், ஆறாமிடத்தில் ராகுவும் அமர்வது நற்பலனை பெற்றுத் தரும். உங்களின் வாழ்க்கையில் பல லட்சிய கனவுகளை கடந்து வந்தீர்கள்.

இனி அதில் சிம்ம சொப்பனமாக திகழும் காலமாக உங்களுக்கு அமையும். கடந்த காலத்தில் இருந்த பல கஷ்டங்கள் விலகி, உங்களின் தீராத கடன் தீர்ந்து, நல்லவை கிடைக்க வழிபிறக்கும். பாதியில் நின்ற காரியங்கள் செயற்பட தொடங்கும்.

முதலீடு இல்லாத கமிஷன் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். பாத எரிச்சல் சம்பந்தமாக உடல் உபாதை உண்டாகும் என்பதால் உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக, இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் முழு கவனம் தேவை. 

பன்னிரெண்டில் கேது அமரும்போது வெளிநாட்டு வேலை, பொன், பொருள் சேர்க்கை, வெளிநாட்டு கூட்டுத்தொழில் வாய்ப்புகள் சிலருக்கு அமையும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் நன்மைகள் உண்டாகும்.

உங்களின் ராசியை குரு பார்க்கும் காலம் வரையில் எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியலில் சிலருக்கு புதிய அனுபவமும், சிறு பதவிகளும் கிடைக்கும். 

முதியவர்கள் தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். மளிகை கடை, சமையல் பொருட்களின் விற்பனை மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். கலைத்துறையினர் சில வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கப் பெறுவீர்கள். எதையும் பொறுமையுடன் செய்வீர்கள். பெண்கள் முக்கியத்துவம் உள்ள பணிகளைச் செய்து பாராட்டை பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விளக்கெண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்து வர, உங்களின் சகல விதமான காரியங்களும் வெற்றியை தரும்.

விருச்சிகம்

தனித் திறமை கொண்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!

இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டுகாலம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் கேதுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்து பலனளிக்கிறார்கள். 

ஏற்கனவே உங்களுக்கு அர்த்தாஷ்டம சனியுடன், குரு பார்வை இல்லாத நிலையில் ராகு ஐந்தாமிடத்தில் அமர்வது, உங்கள் ராசிக்கு கெடுபலன்களை தந்தாலும் கூட, உங்களின் ராசிநாதனின் பலம் உங்களை ஊக்கப்படுத்தும். செவ்வாய் பலம் பெற்ற ஜாதகர்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.

மனவலிமையுடன் செயற்பட்டு காரியத்தை தடையின்றி செயற்படுத்துவீர்கள். சொந்த முயற்சிகளால் பல காரியங்களை சரியாக செய்வீர்கள். காவல்துறை, இராணுவ ஊழியராக பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அதிகார தொல்லை இருக்கும்.

இந்த காலகட்டத்தில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் மாறல் போன்ற பாடல்களை கேட்பது, படிப்பது மூலம் உங்களின் சகல பிரச்சினைகளும் சரியாகும். உங்களுக்கு ஆதரவாக கேது லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது, தேவைகளுக்கு தகுந்தபடி பொருளாதார வளம் கிடைக்கப் பெறுவீர்கள்.

எதையும் விரும்பி செய்தால் வளம் பெறுவீர்கள். குடும்பத்தில் எப்பொழுதும் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் கூடுதல் முதலீடு இன்றி, கூட்டுத் தொழில் தவிர்த்து, தனித்து செயற்படுவதன் மூலம் வளம் பெறுவீர்கள்.

அவசர முடிவுகளை எடுக்காமல் நிதானமாக யோசித்து செயற்படுவதன் மூலம் நற்பலனை பெறுவீர்கள். தேவைகளுக்கு ஏற்ப நன்மை கிடைக்கும்.

பரிகாரம்: வைரவர் வழிபாடு சனிக்கிழமைகளிலும், சுப்ரமணியர் வழிபாடு, செவ்வாய்க்கிழமைகளிலும், தட்சிணாமூர்த்தி வழிபாடு, வியாழக்கிழமைகளிலும் தொடர்ந்து செய்து வேண்டிக்கொள்ள நன்மைகளை பெறுவீர்கள்.

தனுசு

விருப்பத்துக்கேற்ப செயற்பாடுகளை உருவாக்கும் தனுசு ராசி வாசகர்களே!

இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டுகாலம் சுகஸ்தானத்தில் ராகு அமர்ந்து, தொழில் ஸ்தானத்தில் கேது அமர்ந்து நன்மையை தருகிறார்கள். அதன் மூலம் எதையும் தொடர்ந்து வழிநடத்திச் செல்லும் வல்லமையைப் பெறுவீர்கள்.

கேந்திரத்தில் ராகு, கேது அமர்வது உங்களுக்கு நன்மையை தரும். அத்துடன் உங்களை ஊக்கப்படுத்தும் சனி யோக சனியாகவும், உங்களின் ராசிநாதன் குரு பார்வை பெறுவதும் உங்களுக்கு மேலும் நன்மையை பெற்றுத்தரும்.

எதை செய்தாலும் அதில் கவனம் செலுத்துவீர்கள். பணபலமும் ஆட்பலமும் தொடர்ந்து கிடைக்கப் பெறுவீர்கள். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சுகஸ்தானத்தில் ராகு அதிக அலைச்சலை கொடுத்தாலும், அதன் மூலம் கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். சொல்லிலும் செயலிலும் வலிமையை பெறுவீர்கள். அரசியலிலும் உங்களின் செல்வாக்கு உயர்வைத் தரும். பதவி, அந்தஸ்து, தனித்திறமை கொண்டு நற்பலன்களை அடைவீர்கள்.

உங்களின் நட்பு வட்டாரத்தில் பிரிந்த நண்பர்கள் மீண்டும் இணைவார்கள். கடந்த கால பல இழப்புகளை சரி செய்யும் வாய்ப்புகள் அமையும். கலைத்துறையில் சாதனை படைப்பீர்கள். பலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.

முக்கிய வழிகளில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வங்கி மூலம் கடன் பெறுதல், தொழிலில் முதலீடுகளை வலுப்படுத்துதல், உறுதியான நல்ல செயற்பாடுகள் மூலம் ஆதாயம் அடைதல், நல்ல வளர்ச்சிக்கு வழி கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி, நன்மை பெறுவீர்கள். சாதுர்யமான பேச்சுகள் மூலம் உங்களின் காரியத்தை செயல்படுத்தி வளம் பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன் வழிபாடும் செய்யுங்கள். உங்களுக்கு தொழிலிலும் சகல காரியங்களிலும் நன்மைகளை பெற்றுத் தரும். 

மகரம்

துணிச்சலுடனும் விவேகத்துடனும் காரியமாற்றி வரும் மகர ராசி வாசகர்களே!

இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டுகாலம் மூன்றில் ராகுவும், பாக்கியஸ்தானத்தில் கேதுவும் அமர்வது பல காலம் காத்திருந்த காரிய அனுகூலம் பெற நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.

எதையும் முன்கூட்டியே யோசித்து செயற்படுவீர்கள். அரசியலில் இருந்து பல சாதனைகளை செய்யக்கூடிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் சுறுசுறுப்புடன் செயற்படுவீர்கள். 

பொது வாழ்வில் மற்றவருக்கு உதவி செய்வதில் முக்கியத்துவம் பெறுவீர்கள். மூன்றாமிடத்தில் ராகு யோக ராகுவாக அமர்ந்து ராசியை பார்ப்பது உங்களுக்கு தைரியத்தையும் துணிச்சலையும் பெற்றுத் தரும்.

எதையும் சாதித்துக் காட்டும் திறமை வெளிப்படும். கலைத்துறையில் புதிய சாதனைகளை உருவாக்கும் சந்தர்ப்பம் உண்டாகும். குரு வீட்டில் ராகு இருப்பது, மறைமுகமான பல நன்மைகளை பெறுவீர்கள். வெளிநாட்டு வேலை முயற்சிகள் நன்மை தரும். 

விசா கிடைக்காமல் தாமதமானவர்களுக்கு விரைவில் விசா கிடைக்கும். கணவன் - மனைவி ஒற்றுமை உண்டாகும். பகையாளி கூட உறவாடுவார்கள். எதிரிக்கு கூட நீங்கள் உதவி செய்வீர்கள்.

பாக்கியஸ்தானத்தில் கேது அமர்வதால், உங்களின் லட்சிய கனவுகளை செயற்படுத்தும் வாய்ப்பை பெறுவீர்கள். 

ஆன்மிக வழிபாடுகள் செய்வது, மகான்களை சந்திப்பது, குருமார்களின் ஆசீர்வாதம் பெறுவது. தீர்த்த யாத்திரை சென்று வருவது, கோவில் திருப்பணிகளில் பங்குபற்றி சேவை செய்வது போன்ற நல்ல வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

தந்தை வழியில் சொத்து விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு கடல் கடந்து பயணம் செய்யும் சந்தர்ப்பம் அமையும். தொழிலிலும் உத்தியோகத்திலும் முன்னேற்றம் பெற்று வளம் பெறுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் நாகம்மன் வழிபாடு செய்யுங்கள். அஷ்ட நாக தோத்திரம், கருட காயத்ரி மந்திரங்களை சொல்லுங்கள். வாழ்வில் வளம் பெறுவதுடன், பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள்.

கும்பம்

வலிமையும் திடநம்பிக்கையும் கொண்டிருக்கும் கும்ப ராசி வாசகர்களே!

இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டுகள் தன ஸ்தானத்தில் ராகுவும், அட்டமஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து பலன் தருவார்கள். 

இரண்ரெட்டு ஸ்தானத்தில் ராகு - கேது அமர்வது நாக தோஷத்தை தரும் என்பதால் திருமண தடைகளையும், பொருளாதார மேன்மையில் சிறு தடைகளையும் தருவார்கள்.

குடும்பத்தில் உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். புதிய திட்டங்களில் இடையூறுகளை உருவாக்கும் என்றாலும், உங்களின் தனாதிபதி குரு வீட்டில் ராகு அமர்ந்து, குருவின் செயல்களை செய்வதால், பணத்தட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

முக்கிய காரியங்களில் பிறரின் துணையின்றி செயற்படுவீர்கள். சிலருக்கு மருத்துவ செலவுகள் வந்து மறையும். கடன் தொல்லை நீங்கும். 

எட்டாமிடத்து கேது வீண் அலைச்சல், காரிய தடைகளை உண்டாக்கும் என்றாலும், உங்களின் ராசிக்கு நட்பு கிரகமான புதன் வீட்டில் அமர்வதால் பெரிய பாதிப்புகளை தரமாட்டார். இருப்பினும், பிணயம் இடுவது, உறுதி அளிப்பது, பிறருக்காக எதையும் ஏற்றுக்கொள்வது போன்ற சில காரியங்களை தவிர்ப்பதன் மூலம் வரும் கஷ்டங்களிலிருந்து விலகி வளம் பெறலாம். 

வெளிநாட்டுக்கு செல்வது உங்களின் சொந்த முயற்சிகள் மூலமாக நடக்கும். பொது வாழ்வில் சிலருக்கு நல்ல பதவி கிடைக்கும். இதன் மூலம் சிலருக்கு வேலைப்பளுவுடன் இடமாற்றமும் உண்டாகும். உங்களின் தேவைகளுக்கு தகுந்தபடி பொருளாதார நிலை உண்டாகும்.

பரிகாரம்: வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மாரியம்மன் வழிபாடும், சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடும், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் நவகிரக வழிபாடும் செய்துவர, உங்களின் வேண்டுதலுக்கு நற்பலன்கள் உண்டாகும்.

மீனம்

ஆன்மிகத்திலும், பொது நலனிலும் மன அமைதி பெறும் மீன ராசி வாசகர்களே!

இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் உங்களின் ராசியில் ராகுவும், ஏழாமிடத்தில் கேதுவும் அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளில் பலன் தருவார்கள். ஜென்ம ராகுவால் சிலருக்கு ஞாபக மறதிகள் வரும் என்பதால் நாளைய தினம் செய்யவேண்டிய விடயங்களை எழுதி வைத்துக்கொண்டு செயற்படுவதன் மூலம் திட்டமிட்டபடி காரியங்களை செயற்படுத்தி வெற்றி காண்பீர்கள்.

எதிர்கால திட்டங்களுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். குரு வீட்டில் ராகு இருப்பதால், உங்களுக்கு குரு தரும் அனைத்து பலன்களையும் ராகு வழங்குவார்.

முக்கிய பிரமுகருடனான சந்திப்பு மூலம் உங்களின் நீண்டகால பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எடுத்து வைக்கும் காரியங்கள் எதுவாக இருந்தாலும், அதற்கு தகுந்த உதவிகளும் நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

சாதுர்யமான பேச்சு மூலம் சிலருக்கு காரிய அனுகூலம் கிடைக்கும். ஏழாமிடமான சாதக ஸ்தானத்தில் கேது அமர்ந்து பாதகத்தை கொடுப்பது, உங்களுக்கு நன்மை உண்டாக்கும். தடைப்பட்ட திருமண காரியம் நடக்க ஆரம்பிக்கும். புத்துணர்வுகளுடன் செயற்படுவீர்கள். 

அரசியல் சம்பந்தமாக விடயங்களில் ஆர்வம் இல்லை என்றாலும் சிலருக்கு அதில் ஈடுபாட்டினை ஏற்படுத்தும். உடன்பிறந்த சகோதரர்களின் உறவுகள் புதுப்பிக்கபட்டு நட்புறவு கொள்வீர்கள்.

கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் உயர்கல்வியில் மேன்மை பெற்று வளம் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

பரிகாரம்: வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியரை தரிசியுங்கள். கருடன் மூல மந்திரத்தை சொல்லி வாருங்கள். உங்களின் அனைத்து காரியங்களும் வெற்றியை தரும். பொருளாதார நிலையில் உயர்வு உண்டாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்