தலைமன்னார் - மாத்தளை நடைபவனியும் மலையக தமிழர்களின் பிரச்சினைகளும்

Published By: Vishnu

15 Aug, 2023 | 05:30 PM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

பெருமளவுக்கு விளம்பரம் இல்லாமல் இலங்கையின் வடமேற்கு கரையோரத்தில் தலைமன்னாரில் இருந்து தொடங்கிய ஒரு நடைபவனி  மலையகத்தில் மாத்தளையைச் சென்றடைந்திருக்கிறது. இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்வதற்கு தென்னிந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் 200 வருடங்களுக்கு முன்னர் கடந்துவந்த காட்டுப்பாதையின் தடத்தில் இந்த நடைபவனி இடம்பெற்றது.அந்த நீண்ட பயணத்தின் அடையாளபூர்வமான மீள் அரங்கேற்றம் கடந்த இரு வாரங்களாக நடைபெற்றது.

ஆனால், சிரமம் நிறைந்த நடைபவனியில்  சொற்ப எண்ணிக்கையானவர்களே தலைமன்னாரில் இருந்து இறுதியில் மாத்தளை வரை தொடர்ந்து வந்தார்கள். அந்த பாதையில் முன்னைய நூற்றாண்டுகளில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மாண்டுபோனார்கள். தென்னிந்தியாவில் இருந்து குழுக்கள் குழுக்களாக Infrastructure சில குழுக்களில் நாற்பது சதவீதமானவர்கள் இடை வழியில் மரணமடைந்தார்கள்.

நவீன யுகத்தில் அதே மார்க்கத்தில் கடந்த இரு வாரங்களாக நடைபவனியில் வந்தவர்கள் இன்னொரு யுகத்தின் காணாமல்போனோரின் புதைகுழிகளைக் கொண்டிருக்கும் மண்ணையே தங்கள் பாதங்கள் மிதித்துக்கொண்டுவந்தன என்பதை அறிவார்கள். நீண்ட மார்க்கத்தில் பல்வேறு இடங்களில் நடைபவனியில் இணைந்துகொண்டவர்களுக்கு செம்மையாக அமைக்கப்பட்ட வீதிகள், அந்த வீதியோரங்களில் கடைகள், உணவகங்கள் மற்றும் தங்கிச்செல்வதற்கு விடுதிகள் என்று நவீன வசதிகள் எல்லாம் இருந்தன. அவர்களுக்கு பலரின் ஆதரவும் அனுசரணையும் இருந்தது.

பெருந்தோட்டங்களில் தொடர்ந்து வேலைசெய்துகொண்டிருக்கும் மக்களை  தற்போதைய பொருளாதார நெருக்கடி இலங்கைச்சமூகத்தின் வேறு எந்த பிரிவினரையும் விட படுமோசமாக பாதித்திருக்கிறது. அவர்களுக்கு ஆதரவாகவே நடைபவனி இடம்பெற்றது. ஆயிரம் ரூபா அற்ப வேதனத்துக்கான அவர்களின் போராட்டம் தேசிய பொருளாதாரத்தை கொவிட் பெருந்தொற்று பலவீனப்படுத்துவதற்கு முன்னர் தொடங்கியது.

வைரஸ் பரவுவதை தடுக்க அரசாங்கம் ஊரடங்கை பிறப்பித்தபோதிலும் அது விவசாயத்துறைக்கு பிரயோகிக்கப்படவில்லை. தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்துகொண்டேயிருந்தனர். இறுதியில் ஐந்து வருடங்களுக்கும் கூடுதலான காலப் போராட்டத்துக்கு பிறகு 2021 ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா வேதனத்தைப் பெற்றபோது பணவீக்கத்தினால் அதன் உண்மையான பெறுமதி குறைந்துவிட்டது.

அத்துடன்  அந்த ஆயிரம் ரூபாவை முழுமையாகப்  பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.  அதாவது குறைந்தபட்சம் எத்தனை நாட்களுக்கு தொழிலாளர்கள் வேலைசெய்தால், குறைந்தபட்சம் எத்தனை கிலோ எடை தேயிலை கொழுந்தை அவர்கள் பறித்தால் அந்த ஆயிரம் ரூபா கிடைக்கும் என்று நிபந்தனைகள் நடைமுறையில் உள்ளன. இத்தகைய நிபந்தனைகளை விதிக்காவிட்டால் தங்களது தொழிற்துறையை இலாபகரமாக நடத்தமுடியாது என்பதே பெருந்தோட்டக் கம்பனிகளின் நிலைப்பாடாக இருக்கிறது.

நீண்டகாலப் போராட்டத்துக்கு பிறகு தோட்டத்தொழிலாளர்கள் பெற்ற ஆயிரம் ரூபா இன்று 500 ரூபாவுக்கு சமமானதாத வந்துவிட்டது. ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் வேலை செய்தாலும் அந்த ஆயிரம் ரூபாவை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவது சாத்தியமில்லை.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறையாக பெருந்தோட்டத்துறையே விளங்குகிறது. தோட்டத்தொழிலாளர் சனத்தொகையில் ஐம்பது வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள் என்று உலக வங்கியின் ஆய்வுகள் கூறுகின்றன.

இத்தகைய விரக்தியான -- நம்பிக்கையிழந்த சூழ்நிலையில் தோட்டத்தொழிலாளர்களில் சிலரே நடைபவனியில் கலந்துகொள்ளக்கூடியதாக இருந்தது என்பதில்  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. குறைந்தபட்சம் குறிப்பிட்ட எண்ணிக்கையான நாட்கள் வேலை செய்தால் மாத்திரமே ஆயிரம் ரூபா கிடைக்கும் என்பதால் அதை இழந்து நடைபவனியில் பங்கேற்க பல தொழிலாளர்களினால் இயலாது. இரு வாரகால நடைபவனியில் பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தை அடையாளபூர்வமாக பிரதிநிதித்துவம் செய்தவர்களில் பலரும் சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களேயாவர்.

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டமைப்பு  என்ற பெயரின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபவனிக்கு தேசிய கிறிஸ்தவ பேரவை வேறு சிவில் சமூக அமைப்புக்களுடன் சேர்ந்து ஆதரவளித்தது.

" நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு மலையக தமிழ் மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் இலங்கையின் ஏனைய சமூகங்களுக்கு நிகராக முழுஅளவிலான குடிமக்களாக தாங்களும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும். சமத்துவம், பாரபட்சமின்மை, பாதுகாப்பு, சமூகத்தின் நலன்களையும் அடையாளத்தையும் பேணிப்பாதுகாக்கக்கூடிய அரசியல் மற்றும் நிருவாக ஏற்பாடுகளை வேண்டிநிற்பதாகவே கோரிக்கைகள் இடையறாது முன்வைக்கப் பட்டுவருகின்றன.

கௌரவம், சுயமரியாதை, சமாதானம் மற்றும் பாதுகாப்புடன் வாழ்வதற்கு தேவையான குரலையும் அதிகாரத்தையும் சமூகம் கொண்டிருக்கவேண்டும் என்பதற்காகவும் நுவரேலியா மாவட்டத்தில் மிகவும் செறிவாகவும் நாட்டின் ஏனைய பல பாகங்களில் சிதறியும் வாழும் இந்த மக்கள் தங்கள் அலுவல்களை தாங்களே கையாளுவதற்கு வழிவகுப்பதற்காகவுமே இந்த கோரிக்கைகள் முன்வைக்ப்படுகின்றன " என்று அந்த கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உட்பட மலையக தமிழ் சமூகத்தின் தற்போதைய நிலைக்குக்கு காரணம் அவர்களின் விருப்புக்கு மாறாக பெரும் எண்ணிக்கையானோர் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டமையும் நாடற்றவர்களாக் கப்பட்டதும் குடியுரிமை தொடர்பிலான நிச்சயமற்றாதன்மை மற்றும் வாக்குரிமையின்மை ஆகியவையேயாகும். இவை அந்த சமூகத்தின் சமூக,பொருளாதார நல்வாழ்வை பெரிதும் பாதித்துவிட்டது.

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்துகொண்டு வேலைசெய்யும் மக்களே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரிவினராவர். அவர்களே

நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரிவினராக உள்ளனர். ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது பெரும்பாலும் மனித அபிவிருத்திக் குறிகாட்டிகள்  சகலதிலும் அவர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள். இது அவர்கள் தங்களது பெருந்தோட்ட முதலாளிகளில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் என்ற நிலையில் இருந்து ஏனைய சமூகத்தவர்களுடன் சமத்துவமான உரிமைகள் கொண்ட முழுமையான குடிமக்கள் என்ற நிலைக்கு மாறுவதை பாரதூரமாக பாதித்திருக்கிறது.

இந்த மண்ணில் வாழும் சகலரும் ஒரு தாயின் மக்கள் என்றே தேசிய கீதம் குறிப்படுகிறது.தேசிய கீதத்தின் சொற்களை நினையாப்பிரகாரம் தவறுதலாக உச்சரித்தால் கூட கடுமையான கண்டனங்கள் கிளம்புகின்றன. அவ்வாறு உச்சரிப்பவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது. அந்தளவுக்கு  அந்த சொற்கள் மதிக்கப்படுகின்றன. ஆனால், ஒரு சுதந்திர தேசமாக இலங்கை  பிறந்த நாளில் இருந்தே தேசிய கீதத்தின் அடிப்படை  உணர்வு மீறப்படுகிறது.

தேசத்தின் சிறுவர்களில் ஒரு பிரிவினர் நாட்டை விட்டு  வெளியேற்றப்பட்டார்கள்.பெரிதாக போற்றப்படும் கன்னங்கராவின் இலவசக்கல்வி கொள்கையில் வறிய தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் உள்வாங்கப்படவில்லை.1980 வரை அவர்களின் கல்வி தோட்ட முகாமைத்துவத்தின் கைகளில் விடப்படடது. தொழிற்சங்கப் போராட்டத்தை தொடர்ந்தே அவர்களின் கல்விக்கான வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, நாட்டின் வேறு பாகங்களில் உள்ள பாடசாலைகளுடன் ஒப்பிடும்போது தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விவாய்ப்புகள் தரங் குறைந்தவையாகவே இன்னமும் உள்ளன. ஆனால் பெருந்தோட்டங்களில் வேலைசெய்யும் தமிழ் மக்கள் எந்தப் பாவத்தையும் செய்யவில்லை.

பதிலாக அவர்கள் தோட்டங்களில் மிகவும் இடர்மிகு சூழ்நிலைகளில் கடுமையாக உழைக்கும் அவர்கள், சுதந்திரம் பெற்ற வேளையில் ஆசியாவின் மிகவும் சுபிட்சமிகு நாடுகளில் ஒன்றாக இலங்கையை கட்டியெழுப்பியதில் வெற்றிகண்டார்கள். அதுவே இலவச கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தவும் உதவியது. வெளியேறிய பிரிட்டிஷார் கிழக்கின் சுவிட்சர்லாந்தாக இலங்கை மாறும் என்று கூறினார்கள். தாங்கள் போற்றிப்பேணுகின்ற விழுமியங்களுக்கு ஏற்றமுறையில் நடந்துகொள்ளத் தவறியமைக்காக பிரிட்டிஷாரும் பொறுப்புக்கூற வைக்கப்படவேண்டும்.

அண்மைய இந்திய வம்சாவளி தமிழர்கள் குடிமக்களாக நாட்டில் வாழ்வதற்கு இருந்த உரிமையை நிராகரித்ததே சுதந்திர இலங்கையின் அரசாங்கம் 1948 ஆம் ஆண்டில் முதலில் எடுத்த தீர்மானங்களில் ஒன்று. அந்த நேரத்தில் அவர்களே நாட்டின் மிகப்பெரிய இனத்துவ சிறுபான்மைச் சனத்தொகையாக இருந்தார்கள்.இலங்கைத் தமிழர்களையும் விட அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.

உண்மையில் கூறுவதானால், பத்து இலட்சத்துக்கும் அதிகமானவர்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் ஏனைய அடிப்படை மனித உரிமைகளையும்  நிராகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில்  இலங்கைத் தேசத்தின் சகல பிரிவினரும் உடந்தையாக இருந்தனர். அரசியலமைப்பு அவர்களுக்கு பாதுகாப்பையோ அல்லது சட்டத்தின் ஆட்சியையயோ வழங்கவில்லை. பெரிதாகக் கூறப்படும் பிரிட்டிஷ் நீதிமுறை கூட அவர்களுக்கு நீதி வழங்கத் தவறியது.

அன்று நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இறுதியாக நாடக்கூடியதாக இருந்த மேன்முறையீட்டு நீதிமன்றமான பிரிவி கவுன்சில் சட்டத்தை நேர்மையாக பிரயோகிக்கத் தவறியது. அந்த நேரத்தில் இலங்கை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இசைவாக செயற்பட்டு பிரிவி கவுன்சில் பிரச்சினையை மழுப்பி அரசியலமைப்பின் 29 வது சரத்தின் பிரயோகத்தை நிராகரித்தது.

ஒரு சமூகத்தின் மீது வேறு எந்தவொரு சமூகத்துக்கும் பிரயோகிக்கமுடியாத வசதியீனத்தை பிரயோகிப்பதை அந்த 29  வது சரத்து தடுத்தது. சர்வதேச சட்டத்தின் பிரகாரம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்பு சர்வவியாபகமானதும் தேசிய எல்லைகளை கடந்ததுமாகும்.

மாண்புமிகு மலையக மக்களுக்கான கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது.

அவர்களின் வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பு  ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும், சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை சமூகத்தின் ஒரு பிரிவினர் என்ற வகையில் ஏனைய பிரதான சமூகங்களுடன் சமத்துவமானவர்களாக தனித்துவமான அடையாளத்துடன் கூடிய சமூகமாக அந்த மக்கள் அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளும் அவற்றில் அடங்கும்.

தற்போதைய யதார்த்த நிலைவரங்களின் பின்னணியில் நோக்கும்போது இதன் அர்த்தம் ஏனைய சமூகங்களுடன் சமத்துவமானவர்களாக அவர்கள் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கு கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப்பாதுகாப்பு தொடர்பில் நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் ; ஆட்சிமுறையின் சகல அடுக்குகளிலும் பயனுறுதியுடைய பாத்திரத்தை அவர்கள் வகிக்கக்கூடியதாக அதிகாரம் பகிரப்படவேண்டும் ; ஏதோ ஒரு வடிவத்தில் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்பதேயாகும்.

மாத்தளைக்கு செல்லும் வழியில் வீதியோரங்களில் பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. நாவுலவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மலையக தமிழர்கள் நீதிக்கும் இழப்பீட்டுக்கும்  தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரத்தில் பங்கிற்கும் உரித்துடையாஒரு சமூகத்தினர் என்ற சிந்தனை வெளிப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. தங்களுக்கு தேவையானது அனுதாபமோ உதவியோ்அல்ல, சமத்துவமான குடிமக்களாக அதாவது ஒரு சமூகத்துக்கு வழங்கப்படுகின்ற நன்மைகள் இன்னொரு சமூகத்துக்கு மறுக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யக்கூடியதாக உரிமைகளே தேவை என்று மலையக தமிழர்கள் சார்பில் உரையாற்றியவர்கள் வலியுறுத்தினர்.

அரசாங்கத்தின் அண்மைய முன்மொழிவுகளில் ஒன்று  தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை (உண்மை ஆணைக்குழு )   அமைப்பது தொடர்பிலானதாகும். அதற்காக சட்டவரைவும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருக்கிறது.

உண்மை ஆணைக்குழுவின் ஆணை குறுகியதாகவே  இருக்கிறது. அதாவது 1983 -- 2009 காலகட்டத்தில் நாடு அனுபவித்த போரின் ஒரு பகுதியை மாத்திரம் தழுவியதாக ஆணை இருக்கிறது.

கடந்த காலத்தை வெற்றிகொண்டு ஐக்கியமாக முன்னோக்கிச் செல்வதாக  இருந்தால் உண்மையைக் கண்டறியும் விடயத்தில் பரந்தளவிலான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படவேண்டியது அவசியமாகும்.

மலையக தமிழர்களுக்கு  குடியுரிமையையும் வாக்குரிமையையும் நிராகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் நாட்டை இறுதியில்  தற்போதைய கவலைக்குரிய நிலைக்கு கொண்டுவந்த பொறுப்புக்கூறும் கடப்பாடு இல்லாத ஆட்சிமுறைக்கான களத்தை அமைத்துக்கொடுத்தது. பரந்தளவில் ஆணையைக்கொண்டதாக உண்மை ஆணைக்குழு விரிவுபடுத்தப்பட்டு தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரையிலான மார்க்கத்தில் இடம்பெற்ற மரணங்களின் தடமும் உள்ளடக்கப்படவேண்டும்.

200 வருடங்களுக்கும் மேலாக அடிமைத்தொழிலாளர்கள் போன்று ஒரு  சமூகம் சிறைவைக்கப்பட்டிருக்கு ம் நிலைவரம், 75 வருடங்களுக்கு முன்னர் அவர்களின்  குடியுரிமையை பறிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம், பொறுப்புக்கூறலுக்கான தேவை, இழப்பீடு, காலனித்துவ காலகட்டம் உட்பட கடந்தகாலத் தவறுகளை சீர்செய்வதற்கான நிறுவனரீதியான சீர்திருத்தங்களும் உண்மை ஆணைக்குழுவின் ஆணையில் சேர்க்கப்படவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அணுவாயுதங்களுக்கான செலவிடுதலை அதிகரிக்கும் நாடுகள் !

2024-06-18 16:20:51
news-image

13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ;...

2024-06-18 11:40:13
news-image

Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்...

2024-06-17 15:40:00
news-image

சமூகமயமாக்கலில் பிரத்தியேக வகுப்புக்களின் திசை திரும்பலும்...

2024-06-17 13:19:42
news-image

பல்திறப்புலமையும் பன்முக ஆற்றலும் கொண்ட ஆளுமை...

2024-06-16 21:16:51
news-image

அல்அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க மறுப்பு

2024-06-16 17:12:22
news-image

வவுனியா வடக்கில் மாற்றப்படும் குடிப்பரம்பல் -...

2024-06-16 19:19:17
news-image

சர்வதேச மனித உரிமையும் விநோதமானவர்களும்

2024-06-16 16:38:37
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழர்களுக்கு என்ன...

2024-06-16 16:15:21
news-image

காஸா போர் நிறுத்தம் ‘பிரசாரப்படுத்தப்படும் பாசாங்குகள்’

2024-06-16 16:40:06
news-image

வலதுசாரி எழுச்சியை நோக்கி ஐரோப்பா கண்டம்?

2024-06-16 19:18:28
news-image

முஸ்லிம்களின் அபிலாஷையும் ஐந்து கிலோ அரிசிப்...

2024-06-16 16:03:00