கபில்
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் தயாராகவே இருக்கிறது என்றும் ஆனால் தமிழ்க் கட்சிகள் மத்தியில் தான் அதற்கு ஒற்றுமையில்லை என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் கருத்து ஒன்றை முன்வைத்திருக்கிறார்.
அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை கோரியுள்ள நிலையில் தான் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த நிலைப்பாடுகளை முன்வைக்குமாறு, ஜனாதிபதியின் சார்பில் அவரது செயலாளர், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை ஒருமித்து முன்வைக்கவில்லை என்பது உண்மை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து இப்போது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக செயற்படும், புளொட்டும், ரெலோவும் அவசர அவசரமாக தங்களின் திட்டத்தை ஒன்றாக முன்வைத்திருக்கின்றன.
13ஆவது திருத்தச் சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களின் நிலைப்பாடு, கோரிக்கை.
தமிழரசுக் கட்சி இன்னமும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. 13ஐ எதிர்க்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இது தீர்வுக்கான தொடக்கப் புள்ளியோ, தீர்வோ அல்ல என்று கடிதம் அனுப்பியிருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்கெனவே தனது யோசனைகளை முன்வைத்திருப்பதால் மீண்டும் அதனை செய்வாரா என்று தெரியவில்லை.
ஆக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள தரப்புகள், 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்க விடயத்தில் தனித்தனியான நிலைப்பாட்டில் இருக்கின்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும், அதனை ஒரே குரலில் ஜனாதிபதியிடம் வெளிப்படுத்துவதற்கு தயாராக இல்லை.
அதற்கு முக்கியமான காரணம், போட்டி, பூசல்களும், தன்முனைப்பு அரசியலும் தான்.
இதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு தான், தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒற்றுமையில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சிக்கு அவசியம் என்று ஜனாதிபதி கூறியிருந்தாலும், அவர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் பாராளுமன்றத்தின் கதவைத் தட்டுகிறார் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
13 ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கம் குறித்து கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மாகாண சபைகள் சட்டமும், 13ஆவது திருத்தச் சட்டமும் அதியுயர் அதிகாரம் படைத்த அரசியலமைப்பு சட்டம் என்றும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது நிறைவேற்று அதிகாரத்தினதும் பாராளுமன்றத்தினதும் கடப்பாடு என்றும் கூறியிருந்தார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் கடப்பாடு தன்வசமுள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கு உள்ளதாக கூறுகின்ற ஜனாதிபதி ஏன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மீண்டும் நாடாளுமன்ற அனுமதியை பெற முனைகிறார் என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.
ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ இப்போது தேவைப்படுவது தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையோ ஒப்புதலோ அல்ல.
சிங்கள மக்களின், அவர்களின் பிரதிநிதிகளின் ஒப்புதல் தான் முக்கியமானது. சிங்கள மக்களின் பிரதிநிதிகளான அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ளேயே இந்த விடயத்தில் முரண்படுகின்றன.
13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், தனது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக் கூடும் என்ற பயம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கலாம். அதனால் பாராளுமன்றத்திடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்.
இங்கு 13 விடயத்தில் எது நடந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரச்சினை இல்லை. பாராளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால், அதனை நடைமுறைப்படுத்துவார். அதனால் ஏற்படக் கூடிய அரசியல் விளைவுகளுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டியதில்லை.
பாராளுமன்றம் தான் ஒப்புதல் கொடுத்தது, மக்களின் பிரதிநிதிகள் தான் ஒப்புதல் கொடுத்தனர் என நழுவிக் கொள்ளலாம்.
அதுபோல பாராளுமன்றம் நிராகரித்து விட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
பாராளுமன்றம் அங்கீகரிக்கவில்லை என்னால் ஒன்றும் செய்ய முடியாதென கையை விரித்து விட்டுப் போகலாம்.
அப்போது இந்தியாவினாலும் ஒன்றும் செய்ய முடியாது தமிழ்க் கட்சிகளாலும் ஒன்றும் செய்ய முடியாது.
ரணில் விக்கிரமசிங்க இந்த விளையாட்டை சாதாரணமாகத் தொடங்கி விடவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு தெற்கில் இனவாதிகள் மத்தியில் காணப்படும் எதிர்ப்பு எந்தளவுக்குப் பலமானது என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் அவசியத்தை அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தாலும், அதன் அமுலாக்க விடயத்தில் அவர் ஆறப் போடும் உத்தியையே கடைப்பிடிக்க விரும்புகிறார்.
கட்டம்கட்டமாக அதனை நடைமுறைப்படுத்துவது குறித்தே பேசியிருக்கிறார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லை என்று கூறிக் கொள்ளும் அரசாங்கம், தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினாலும், அவரை ஆட்சிக்கு கொண்டு வந்த- இன்றைக்கும் அவரது அரசாங்கம் செயற்படுவதற்குக் காரணமாக இருக்கின்ற பொதுஜன பெரமுனவே அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பலர், மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.
11 ஆண்டுகளுக்கு முன்னர் 13 பிளஸ் என்று கூறியவர் அவர். இப்போது, 13 குறித்த அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதை தவிர்க்கிறார். ஆனால் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவோ அவர் இன்னமும் 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாக கூறுகிறார்.
ஆனால் 13 பிளஸில் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்று மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் கூறியதில்லை.
சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருக்கின்றன.
இவ்வாறு முரண்பட்டு நிற்கின்ற நிலையில் 13 குறித்து மாத்திரமல்ல, தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஒருமித்த கருத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.
தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கும் அதிகாரப் பகிர்வு கட்டமைப்பு விடயத்தில் சிங்களக் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாத நிலையில், அரசாங்கம் தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒற்றுமையில்லை என்று குற்றம்சாட்டுகிறது.
13 விடயத்தில் அரசாங்கம் எடுக்கின்ற எந்தவொரு நகர்விலும் தமிழர்கள் பங்காளிகளாக முடியாது. ஏனென்றால், தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்று இது உருவாக்கப்பட்டாலும், அது தமிழர்களின் நிலைப்பாட்டை அறிந்து உருவாக்கப்பட்டதும் அல்ல, தமிழர் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாகவும் அது அமையவில்லை.
அரசியலமைப்பை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமையே தவிர தமிழ்க் கட்சிகளின் கடப்பாடு அல்ல. இவ்வாறிருக்க, தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடவில்லை என்று கூறித் தப்பிக்க பார்க்கிறது அரசாங்கம்.
இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.
13 ஐ மீண்டும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து பிய்த்து உதறுகின்ற அரசாங்கத்தின் போக்கை அவர்கள் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.
தமிழருக்கு வழங்கப்படும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மீளப்பெற முடியாததாக இருக்க வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்தக் கிடைத்துள்ள சந்தர்ப்பம் இது.
36 ஆண்டுகளுக்குப் பிறகு 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தின் அனுமதி கோரியது போன்ற நிலை எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்படும் அதிகாரப் பகிர்வு மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் நிலை- அதிகார மீள்பறிப்பு இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்த இந்த விடயம் வாய்ப்பாக அமையும்.
மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு மீதான கோரிக்கையை இன்னும் வலுவாக முன்வைக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.
13 ஐ மீண்டும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து அரசாங்கத்தின் போக்கை அவர்கள் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.
தமிழருக்கு வழங்கப்படும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மீளப்பெற முடியாததாக இருக்க வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்தக் கிடைத்துள்ள சந்தர்ப்பம் இது.
36 ஆண்டுகளுக்குப் பிறகு 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தின் அனுமதி கோரியது போன்ற நிலை எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்படும் அதிகாரப் பகிர்வு மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் நிலை- அதிகார மீள்பறிப்பு இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்த இந்த விடயம் வாய்ப்பாக அமையும்.
மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு மீதான கோரிக்கையை இன்னும் வலுவாக முன்வைக்க வேண்டிய தருணம் இது. தமிழ்க் கட்சிகள் அதற்கு தயாராக உள்ளனவா?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM