சத்ரியன்
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது நாட்டில் அச்சமான சூழலை உருவாக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் கருத்து ஒன்றை முன்வைத்திருக்கிறார்.
அவரது இந்தக் கருத்து வேறுபட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. இலங்கையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களில் பல ரகத்தினர் உள்ளனர்.
ஒரு தரப்பினர் அது இந்தியா முன்வைத்தது என்பதால் எதிர்க்கின்றனர். இன்னொரு தரப்பினர், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் பகிரப்படும் அதிகாரங்களைக் கொண்டு மாகாணங்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கு தனிநாடாகி விடும் என்ற அச்சத்தினால் எதிர்க்கின்றனர்.
மற்றொரு தரப்பினர், காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படுவதால் எதிர்க்கின்றனர்.
இவர்களை தவிர இன்னொரு தரப்பினர், தமிழர்களுக்கு எந்த வகையிலும் அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்பதற்காக, 13ஐ எதிர்க்கின்றனர்.
இப்படிப் பல வகையினர் இருக்கின்ற நிலையில் இன்றைக்கு பேசுபொருளான விடயமாக மாற்றப்பட்டிருக்கிறது பொலிஸ் அதிகாரம் என்ற விடயம்.
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது தமிழ்த் தரப்பு. அதாவது 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும், அதிலுள்ள அதிகாரங்களை மத்திய அரசு மாகாணங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தமிழர் தரப்பு கோருகிறது.
ஆனால், அரசாங்கமோ பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவதானால், எல்லாக் கட்சிகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்கிறது.
இங்கு எல்லாக் கட்சிகளும் என்பது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் மற்றும் அவற்றின் உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதையே குறிக்கிறது. பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டால் பொலிஸ் அதிகாரத்தை பகிரலாம் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு.
அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் எல்லாச் சந்தர்ப்பங்களிலும், - சிக்கலான பிரச்சினைகளை பாராளுமன்றத்திடம் விட்டு - முடிவெடுக்க வைக்கிறார்.
இது ஜனநாயகத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும், மற்றொரு புறத்தில், சிக்கலானது.
நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட அவர், அதனைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாராளுமன்றத்தின் ஊடாக தடையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
தமிழ்ப் பேசும் சமூகத்தில் உள்ள ஒரு பகுதியினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கப்படுவதை ஆதரிக்கவில்லை.
காரணம், பாராளுமன்றத்தில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் அதனை தடுக்க முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு காணப்பட்டது.
பெரும்பாலும் முஸ்லிம்கள் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதை ஆதரிக்கவில்லை.
ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தன்னிடம் உள்ள அதிகாரங்களைக் கொண்டு 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதை விட்டு விட்டு, அதனை பாராளுமன்றத்துக்குக் கொண்டு செல்லப் போகிறார்.
அங்கு எடுக்கப்படும் முடிவு அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைக்கு, அதாவது 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சாதகமானதாக அமையுமா என்ற சந்தேகங்கள் உள்ளன.
அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படக் கூடாது என்ற நிலைப்பாடு தான்.
பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால், தனிநாட்டை உருவாக்கி விடுவார்கள் என்ற அச்சம் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் பொலிஸ் அதிகாரங்களை மாநகர சபைகளுக்குக் கூட வழங்கியிருக்கின்றன. அந்த நாடுகளில் எந்த ஆயுதக் கிளர்ச்சியும் நடக்கவில்லை. இந்தியாவில் மாநிலங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மாநிலப் பொலிஸார் ஒருபோதும், தனிநாட்டுப் போராட்டங்களுக்கு துணை நிற்கவில்லை.
பஞ்சாபில், காலிஸ்தான் பிரிவினைவாதப் போராட்டம் தீவிரமடைந்திருந்த போது, அதனை நசுக்கியது, மாநில பொலிஸ் தான்.
கே.பி.எஸ்.கில் என்ற சீக்கிய பொலிஸ் அதிகாரியின் தலைமையில் தான், அந்த தனிநாடு கோரிய போராட்டம் நசுக்கப்பட்டது.
எனவே, மாகாண பொலிஸ் அந்தந்த முதலமைச்சர்களின் கீழ் செயற்படும் என்பதால், பிரிவினைவாதத்துக்கு துணைபோகும் என்பது வீண் பிரமை.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்வைத்திருக்கின்ற காரணமும் அவ்வாறான ஒன்று தான்.
அவர் இந்தச் சந்தர்ப்பத்தில், பொலிஸார் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் பேசியிருக்கிறார்.
தற்போதுள்ள பொலிஸ் கட்டமைப்பின் மீது கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகளை, அவர் பொலிஸ் அதிகாரப் பகிர்வுக்கு எதிராகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறார்.
இப்போது பொலிஸ் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்ற நிலையில், ஒன்பது மாகாணங்களிடம் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்களின் கீழ் ஒன்பது பொலிஸ் கட்டமைப்புகள் இருந்தால், நாட்டின் நிலைமை என்னவாகும் என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தற்போதுள்ள பொலிஸ் கட்டமைப்பு அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுவதை காரணம் காட்டி, - அவர் மாகாணங்களுக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்த முனைகிறார்.
பொலிஸ் கட்டமைப்பை அரசியல் மயப்படுத்தியது ஆட்சியாளர்களின் தவறு. இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் அதற்கு நேரடிப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.
அவர்கள் ஆட்சியில் இருந்த போது செய்த தவறுகளுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, அவர்களைக் காப்பாறுவதற்காக ஒரு சட்டத்தரணியாக நீதிமன்றப் படியேறியவர் தான் அலி சப்ரி.
அவர் பொலிஸ் கட்டமைப்பு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு அருகதையுள்ளவரா என்ற கேள்வியும் இருக்கிறது.
முன்னைய ஆட்சியாளர்களை விட்டு விடலாம். அலி சப்ரி அங்கம் வகிக்கும் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு செயற்படுகிறது?
அதுவும் பொலிஸ் கட்டமைப்பை அரசியல் மயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பொலிஸார் முன்னெடுக்கின்ற பல நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள், கண்டனங்களை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளியுள்ளது.
உள்நாட்டில் மாத்திரமன்றி ,ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளும் கூட இதனைக் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கின்றன.
பொலிஸை அரசியல் மயப்படுத்தி வைத்துக் கொண்டு அதையே சாட்டாக வைத்துக் கொண்டு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க கூடாது என்று வாதிடுவது மோசமான செயல்.
பொலிஸ் சுயாதீனமாகவும், அரசியலமைப்பின் படியும் செயற்படுவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடப்பாடு.
அதனை முன்னைய அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுத்தவில்லை.
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை மறுப்பதற்கு ஒரு காரணம் தேவை என்பதற்காகத் தான், இந்த அரசியல்மய நீக்கம் முன்னெடுக்கப்படாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம், அலி சப்ரியின் கருத்தில் இருந்து எழுகிறது.
மாகாண பொலிஸ் ஒவ்வொரு முதலமைச்சர்களின் கீழும் செயற்படும் போது, அரசியல் மயப்படுத்தப்படும் என்று முன்கூட்டியே கணிப்பது தவறானது. ஒவ்வொரு மாகாணமும் அதனை வினைத்திறனாக செயற்படுத்த வாய்ப்புள்ளது என்ற கோணத்திலும் சிந்திக்கலாம்.
அவ்வாறு ஆரோக்கியமான முறையில் சிந்திப்பதற்கு அலி சப்ரியோ அல்லது மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதை மறுப்பவர்களோ தயாராக இல்லை. ஏனென்றால் அவர்கள் முன்கூட்டிய தீர்மானத்தை எடுத்து விட்டார்கள். அது தான் சரியானது என்று தீர்மானித்து விட்டார்கள்.
அதுவே சரி என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். இவ்வாறானவர்கள் மத்தியில் மாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை மறுப்பதற்கு ஒரு காரணம் தேவை என்பதற்காகத் தான், இந்த அரசியல்மய நீக்கம் முன்னெடுக்கப்படாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம், அலி சப்ரியின் கருத்தில் இருந்து எழுகிறது.
மாகாண பொலிஸ் ஒவ்வொரு முதலமைச்சர்களின் கீழும் செயற்படும் போது, அரசியல் மயப்படுத்தப்படும் என்று முன்கூட்டியே கணிப்பது தவறானது. ஒவ்வொரு மாகாணமும் அதனை வினைத்திறனாக செயற்படுத்த வாய்ப்புள்ளது என்ற கோணத்திலும் சிந்திக்கலாம்.
அவ்வாறு ஆரோக்கியமான முறையில் சிந்திப்பதற்கு அலி சப்ரியோ அல்லது மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதை மறுப்பவர்களோ தயாராக இல்லை.
ஏனென்றால் அவர்கள் முன்கூட்டிய தீர்மானத்தை எடுத்து விட்டார்கள். அது தான் சரியானது என்று தீர்மானித்து விட்டார்கள். அதுவே சரி என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.
இவ்வாறானவர்கள் மத்தியில் இருந்து மாகாணங் களுக்கு அதிகாரங்களை பெற்றுக் கொள்வது சாத்தியமாகப் போகிறதா?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM