நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக வளர்ச்சி என்பன நல்லிணக்கம் மற்றும் மத சகவாழ்வில் தங்கியுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு - காலி முகத்திடலில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வளமான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக உண்மையானவர்களாக செயற்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித சுதந்திரம், ஊடக சுதந்திரம், சிந்திக்கும் சுதந்திரம், அமைதியான ஒன்றுகூடும் சுதந்திரம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.

அதுமாத்திரமின்றி அரசாங்கம் தற்போது பொருளாதார சுதந்திரத்துக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளது.

இதனால் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் தாம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளின் போதும் கடமைகளை உண்மையாக நிறைவேற்ற வேண்டும்.  ஊழல் மோசடி இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும். 

நாட்டின் தேசிய ஒற்றுமைக்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் சர்வதேச மட்டத்தில் வரவேற்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வேலைத்திட்டங்களுக்கு எதிராக செயற்படுபவர்களை  நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களாகவே கருதமுடியும் என்றார்.