இறைவனுக்கு விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்யும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்

12 Aug, 2023 | 02:04 PM
image

தொகுப்பு : சுபயோக தாசன் 

எம்மில் பலரும் ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசித்து விட்டு இறை ஊழியம் செய்யும் குருக்கள் பிரசாதமாக தரும் திருநீறை வாங்கி நெற்றியில் பூசி விட்டு, ஆலயத்தின் நுழைவாயிலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி விட்டு வீடு திரும்புவர். இவர்களிடம் கேட்டால் ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசித்து விட்டு வருகிறேன் என்பர். ஆனால் இத்தகைய இறை தரிசனத்தால் எத்தகைய பலனும் கிட்ட போவதில்லை. ஏனெனில் ஆலயமாக இருந்தாலும் அல்லது எம்முடைய பூஜை அறையாக இருந்தாலும் இறைவனை வணங்கும் முன் விளக்கு ஏற்றி பிரார்த்திக்க வேண்டும்.

உடனே எம்மில் சிலர் விளக்கு தானே? என அசிரத்தையாக தங்களுக்கு தோன்றிய விதத்திலும் அங்கு கிடைக்கும் வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு விளக்கேற்றி வழிபடுவர். இதனாலும் பயன் ஏதும் இல்லை. ஏனெனில் விளக்கேற்ற வேண்டும் என்றால் அதற்கு முன் நிறைய விடயங்களை உற்று அவதானிக்க வேண்டும். விளக்கேற்றுதல் தானே என அசாதாரணமாக இருக்கக் கூடாது. விளக்கேற்றுதலிலும் ஏராளமான நியமங்கள் உள்ளன.

ஒருமுக தீபத்தை ஏற்றினால் மத்திமமான பலன் கிட்டும்  இரண்டு முகத்தில் தீபத்தை ஏற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். மூன்று முகமாக ஏற்றினால் புத்திர சுகம் கிடைக்கும். நான்கு முக தீபத்தை ஏற்றினால், பசு, பூமி போன்ற நிலையான செல்வங்கள் வந்தடையும். ஐந்து முக கொண்ட தீபத்தை ஏற்றினால் செல்வம் பெருகும்.

ஒரு முகமோ இருமுகமோ அல்லது ஐந்து முகமாக இருந்தாலும் நீங்கள் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கையோ அல்லது பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விளக்கையோத்தான் பயன்படுத்த வேண்டும்.

விளக்கு பற்றிய சந்தேகம் அகன்ற பிறகு. அதில் ஊற்றும் எண்ணெய்க்கும் முக்கியத்துவம் உண்டு. நீங்கள் எந்த எண்ணெய்யை பயன்படுத்தி தீபம் ஏற்றுகிறீர்களோ அதற்கேற்ற பலன் கிடைக்கும் என்பதுதான் அனுபவ ரீதியிலான உண்மை. செவ்வாய் தோஷம், சனி தோஷம், சுக்கிர தோஷம் போன்ற நவகிரக தோஷங்கள் இருந்தால், இந்த தோஷங்கள் நீங்கி பலன் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

வேறு சிலர் மண முறிவுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பர். அதன் பிறகு அமைதியாக ஆழ்ந்து யோசிக்கும் போது தவறுகளும், சூழல்களும் யதார்த்தத்தை உணர்த்திய பிறகு மீண்டும் கணவன்-மனைவியாக வாழ வேண்டும் என்று விரும்புவர். வேறு சிலர் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தொடக்க நிலையில் இருப்பர். இவர்கள் கணவன்- மனைவி உறவு தொடர வேண்டும் என விரும்பினால், இவ்விடயத்தில் மற்றவர்களின் உதவியை பெற விரும்பினால், நீங்கள் வேப்பெண்ணையை கொண்டு தீபம் ஏற்றி பிரார்த்தித்தால் நல்லவை நடைபெறும். சிலருக்கு திருமணம் ஆகி நல்ல இணக்கப்பாடுடன் வாழ்க்கையை நடத்திச் செல்வர். ஒரு புள்ளிக்குப் பிறகு இணை பிரியாது வாழ வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். இந்த தம்பதியினர் இணைபிரியாமல் வாழ்வதற்கு மஞ்சள் வண்ணம் கொண்ட புது துணியை திரியாக பிரித்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

உங்களுடைய முயற்சிகளுக்கு குலதெய்வத்தின் அருள் தடையாக இருந்தால், அந்தத் தடையை விலக்கி குலதெய்வத்தின் அருளை பெற வேண்டும் என்றால், நீங்கள் ஆமணக்கு எண்ணையை தீபத்தில் ஊற்றி ஏற்றி வழிபட வேண்டும்.

சனி, சூரியன், செவ்வாய் உள்ளிட்ட நவகிரகங்கள் எமக்கு நன்மையை அளிக்க வேண்டும் என்றால் நல்லெண்ணையை பயன்படுத்துவது நலம் ஏனெனில் எல்லா தெய்வங்களும் நல்லெண்ணையை ஊற்றி விளக்கேற்றி வழிபடுவதை ஏற்றுக்கொள்ளும்.

சிலர் தங்களது முடிவுகள் எப்போதும் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும் என விரும்புவர். இவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு தேங்காய் எண்ணெய்யை கொண்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

சகல செல்வமும் அதாவது எந்த தொழிலில் ஈடுபட்டாலும் அந்த தொழிலிலிருந்து லாபம் கிடைக்க வேண்டும் என்றால்... இதனை வேறு வகையில் விளக்கமளிக்க வேண்டும் என்றால் பணம், நகை, நிலம், வீடு, வாகனம் என சகல செல்வ வளங்களும் கிட்ட வேண்டும் என்றால், நீங்கள் வழிபடும் தெய்வத்திற்கு வேப்பெண்ணெய், இலுப்பெண்ணைய், நெய் இந்த மூன்றையும் கலந்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

எம்மில் சிலர் மந்திர சக்தியை பெற விரும்புவதுண்டு. அவர்கள் அதற்குரிய வழிமுறையை பின்பற்றும் போது இறைவனை நோக்கி மந்திரங்களை உச்சரிக்கும் முன் அவர்கள் ஏற்றும் தீபத்தில் விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகிய ஐந்து வகை எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும். இவர்கள் எந்த காரணம் கொண்டும் கடலை எண்ணெய், கடுகு எண்ணெய்,  பாமாயில் ஆகியவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக் கூடாது. மந்திர சக்தியை விரும்புபவர்கள் மட்டுமல்ல வெகுஜன மக்களும் தங்களது பிரார்த்தனையை ஆண்டவன் முன் சமர்ப்பிக்கும் போது ஏற்றப்படும் விளக்கில் இந்த மூன்று எண்ணெய்யையும் பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

விளக்கினையும், எண்ணெய்யும் தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் திரி மீதும் கவனம் செலுத்த வேண்டும். சுகவீனமாக இருந்து சுகம் பெறுவதற்காக இறைவனை பிரார்த்திக்கும் போது நீங்கள் ஏற்றும் விளக்கில் பஞ்சு திரியை பயன்படுத்த வேண்டும்.‌

வேறு சிலருக்கு தங்களது முன்னேற்றத்திற்கு தடையாக முற்பிறவி பாவங்கள் முன்னணியில் வந்து நிற்கும். இதனை நீக்கவும், இந்த பிறவியில் கடினமாக உழைத்து ஈட்டும் செல்வத்தை அடுத்த தலைமுறைக்காக தக்க வைத்து பேணுவதற்கும், நீங்கள் இறைவன் முன் ஏற்றும் விளக்கில் தாமரை தண்டுவினாலான திரியை பயன்படுத்த வேண்டும்.

இன்றைய திகதியில் பெண்கள் பணிக்குச் சென்று தங்களது சொந்தக் காலில் நிற்பதற்கான ஒரு அடையாளத்தை பெற்ற பிறகு திருமணம் செய்து கொண்டு குழந்தை பாக்கியம் குறித்து சிந்திக்கிறார்கள். இதன் போது அவர்கள் பெண்மணிகளாகி விடுவதால்  மக்கட் பேறு என்பது தாமதமாகிறது. இவர்கள் இறைவனை பிரார்த்திக்கும் போது விளக்கில் வாழைத்தண்டு திரியினை பயன்படுத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சிலர் தங்களுக்கு எதிரிகளான உறவினர்கள் செய்வினை வைத்து விட்டதாக புலம்புவர். சோதிட நிபுணர்களிடம் தாந்திரீக பரிகாரங்களை மேற்கொள்வதற்காக இவர்கள் முயற்சிக்கும் போது நீங்கள் வழிபடும் முன் ஏற்றும் விளக்கில் வெள்ளெருக்கு பட்டையினால் தயாரிக்கப்பட்ட திரியினை பயன்படுத்துவது நல்லது. செய்வினைக்கு மட்டுமல்ல நீடித்த ஆயுள் பெற விரும்புபவர்களும் இந்த வெள்ளருக்கு பட்டை திரியினை பயன்படுத்தலாம்.

விளக்கு, எண்ணெய், திரி ஆகியவை மட்டுமல்ல விளக்கேற்றும் திசையும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிழக்கு திசை நோக்கி விளக்கேற்றி வழிபட்டால், உங்களுடைய துன்பமும், கிரகத்தினால் பீடிக்கப்பட்ட துயரமும் நீங்கும். மேற்கு திசை நோக்கி விளக்கேற்றி வழிபட்டால், கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இருக்கும் கடன் தொல்லை குறையும். கடன் மட்டுமல்ல சனி தோஷமும், உறவினர்களிடையே நீடித்திருக்கும் பகையும் மறையும். வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த செல்வத்தை மீட்கலாம். குபேரனின் அருள் கிடைத்து சகல செல்வங்களும் கிடைக்கும். மேலும் சிலருக்கு இருக்கும் திருமண தடை அகன்று திருமணம் நடைபெறும். தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இது பாவத்தை அதிகரிப்பதுடன் அபசகுனமாகவும் கருதப்படுகிறது.

எனவே நீங்கள் அடுத்த முறை இறைவனுக்காக விளக்கேற்றி பிரார்த்திக்கும் போது விளக்கு, எண்ணெய், திரி, திசை ஆகிய நான்கு விடயங்கள் மீது கவனம் கொள்ள வேண்டும். எந்த நோக்கத்திற்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அதற்குரிய தீபத்தை ஏற்றி வழிபடுவதும் சிறப்பானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்