முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இன்று சுதந்திரதினத்திலும் கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டு 5 ஆவது நாளகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்கள் மற்றும் விமானப்படையினருடன் கலந்துரையாடியுள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற சுதந்திரதின வைபவங்களை முடித்துக்கொண்டு காணிகளை விடுவிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்த அமைச்சர் ரிஷாத், மக்களுடனும் விமானப்படை அதிகாரிகளுடனம் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

இதையடுத்து காணிகளை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும் மேலிடத்தில் இருந்து உத்தரவு கிடைத்ததும் தாம் காணிகளை விடுவிப்பதாக படை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தான் உரியதரப்பினருடனும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் இது தொடர்பில் பேசுவதாகவும் அமைச்சர் மக்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை,புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவில் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக முள்ளியவளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகியநகரங்களில் அமைந்துள்ள கடைகள் அனைத்து மூடப்பட்டு இன்றையதினம் கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருவதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது குறித்த தினத்தில் விடுவிக்கப்படவில்லை. இதன்காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடியிருப்புமக்கள் தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.