சுதந்திரத் தினத்தை புறக்கணித்து யாழ்ப்பாணம், பழைய பூங்கா முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் தலைமையில் கறுப்பு  பட்டிப் போராட்டம் இடம்பெற்றது.


நாட்டின் 69 ஆவது சுதந்திர தினத்தன்று ஐந்து அம்சகோரிக்கையை முன்வைத்து கறுப்புப்பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக சிவாஜிலிங்கம் ஏற்கனவே அறிவித்திருந்ததற்கு அமைய இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  நிலைக்கு பதில் கூறு, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை உடனடியாக விடுவியுங்கள், மீளக் காணிகள் சுவீகரிக்க எடுக்கும் நடவடிக்கைகளை கைவிடு, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் மற்றும் இனப்பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.