ஜெயிலர் - திரை விமர்சனம்

Published By: Vishnu

11 Aug, 2023 | 01:49 PM
image

இயக்குநர் நெல்சன் திலீப் குமாரும், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அவர்களது முந்தைய திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு.. கட்டாயமாக வெற்றியை தர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்றிணைந்து பணியாற்றி இருக்கும் படம் 'ஜெயிலர்'. இந்த படத்தின் மூலம் அவர்கள் இழந்த புகழை பெற்றார்களா? ரசிகர்களின் மனதை கவர்ந்தார்களா? என்பதனை தொடர்ந்துக் காண்போம்.

சிறை துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, தனது மனைவி ரம்யா கிருஷ்ணன், தனது மகன் வசந்த் ரவி, மருமகள் மிர்ணா, பேரன் ரித்விக் உடன் ஓய்வு கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறார் முத்துவேல் பாண்டியன் என்கிற சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவரது மகன் அர்ஜுனுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை வாழ்க்கைக்கான பற்றுக் கோடாக கற்றுக் கொடுக்கிறார். அதை அவரும் உறுதியாக கடைப்பிடிக்கிறார். அவர் காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றும் போது சிலை கடத்தும் கும்பல் ஒன்றை தொடர்ந்து தேடி அவர்களை கைது செய்ய முயற்சிக்கிறார்.

இதன் போது சிலை கடத்தும் கும்பல், அவர்களுக்கு இடையூறாக இருக்கும் அர்ஜுனை கடத்தி கொலை செய்து விடுகிறது. இதனால் ஆத்திரமடையும் ஓய்வு பெற்ற சிறை அதிகாரியான டைகர் முத்துவேல் பாண்டியன். எதிரிகளை தேடி கண்டறிந்து பழிவாங்க புறப்படுகிறார். அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை. ‌

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மாஸ் ஹீரோவிற்கு திரைக்கதை எழுதுவது என்பது கடினமான பணி. அதில் முதல் பாதியில் அதிலும் குறிப்பாக சுப்பர் ஸ்டாரின் அறிமுகக் காட்சியை மிக மிக இயல்பாக அமைத்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ரஜினிகாந்த் யோகி பாபு உடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்திருப்பது பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறது. முதல் பாதியின் இறுதி காட்சியில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மாஸான காட்சியை வைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

இரண்டாம் பாதியில் மிக பெரிதாக இருக்கும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குநர்... அதனைத் துல்லியமாக அவதானித்து திரைக்கதையை பயணிக்க விடாமல் திசை மாற்றி பயணித்ததால் வழக்கமான ரஜினி ரசிகர்களுக்கான படமாக இரண்டாம் பாதி அமைகிறது. அதிலும் அவருடைய பிளாஷ்பேக் காட்சிகள்.

வில்லன்களை கண்டடைவதற்காக அவர் மேற்கொள்ளும் உத்திகள்.. ஏற்கனவே வெளியான பல படங்களில் இருந்த காட்சிகள் என்பதால், சோர்வை தருகிறது. இருப்பினும் சுப்பர் ஸ்டார் தன் அசாத்தியமான நடிப்பாலும், அதிரடி எக்சன் காட்சிகளாலும் அதனை குறையாக தெரியாமல் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். அதனால் முதல் பாதி அனைத்து தரப்பினருக்கானது. இரண்டாம் பாதி ரஜினி ரசிகர்களுக்கானது என சொல்லலாம்.

படம் முழுவதும் ரஜினியின் ஆதிக்கம் அதிகம் என்றாலும், தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவரது மனைவியாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வில்லனாக நடித்திருக்கும் விநாயகன் ஜொலிக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் இருவரும் தங்களது பணியினை நிறைவாக செய்திருக்கிறார்கள். தமன்னா நடிகையாகவே படத்திலும் நடித்து இளம் நெஞ்சங்களை சூடேற்றுகிறார்.

'குழந்தைங்க கெட்டவங்க ஆகிட்டா.. பெத்தவங்க வாழ்க்க நரகமாயிடும்..', ' பொண்டாட்டி கிட்ட பொய் சொல்லியே நரகத்திற்கு போயிடுவோம் போல..' போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கிறது.

ரஜினியின் ஸ்டைலான திரை தோன்றல் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது என்றால்... அவருக்கு நிகராக அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிகர்களை உற்சாகம் குறையாமல் வைத்துக் கொள்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தியான ரகம். படத்தொகுப்பாளர் நிர்மல் இரண்டாம் பாதியில் இன்னும் தன் கவனத்தை சிறப்பாக செலுத்தி, செதுக்கி இருக்கலாம்.

மகனை கொன்றவனை அதிலும் நேர்மையாக வாழும் மகனை கொலை செய்தவர்களை.. அப்பா பழிக்கு பழிவாங்க நினைப்பது கொஞ்சம் புதிது என்றாலும், அதனை சிலை கடத்தும் கும்பலுடன் தொடர்புப்படுத்தி மாஸான எக்சன் என்டர்டெய்னராக கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை பாராட்டலாம். ஆனாலும் முதல் பாதியை போல் இரண்டாம் பாதி அமையாததால் எதிர்பார்ப்பு குறைந்து படமாளிகை விட்டு வெளியே வரும்போது உற்சாகம் இல்லாமல் இயல்பாகவே வருகிறோம்.

திரைக்கதையில் குறிப்பாக இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ரஜினி என்ற ஒற்றை கம்பீரத்திற்காக அனைத்தையும் மறந்து ரசிக்கலாம்.

ஜெயிலர் - பட மாளிகையில் கொண்டாடப்பட வேண்டிய படைப்பு

தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்

நடிகர்கள் : சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரித்விக், விநாயகன், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெரஃப், மோகன்லால், சுனில், யோகி பாபு, வி டி வி விஜயன் மற்றும் பலர்.

இயக்கம் : நெல்சன் திலீப்குமார்

மதிப்பீடு : 3/5

முக்கிய செய்திகள்

icon-left
icon-right